டைரிக் குறிப்புகள்

in கட்டுரை

ஆகஸ்ட் 03, 2011

நேற்றிரவு கெட்ட கனவு. டி.வி.யில் குங்ஃபூ படம் ஓடிக்கொண்டிருக்கிறது. நான் அதன் எதிரில் இரு கால்களை நீட்டி அமர்ந்து “பிள்ளைகளா, சண்டை போடக் கூடாது” என்று கத்திக்கொண்டிருக்கிறேன். திடீரென மின்வெட்டு ஏற்பட்டு எல்லாம் அமைதியாகிவிடுகிறது. “போ!” என்கிறேன்.

* * *

அடுத்ததாக வந்த இன்னொன்றில் கனவே வந்தது. கனவிலும் கவிதையிலும் வருவது மாதிரியாக இல்லாமல் நிஜ கனவு. தான் கவிதையில் வெகுவாகத் துன்புறுத்தப்படுவதாகப் புலம்புகிறது கனவு. என் உள்ளே அலைகிறார்கள், காணாமல் எல்லாம் போகிறார்கள், சமீப காலமாக என்னை விற்க வேறு ஆரம்பித்திருக்கிறார்கள், நீ எழுத்தாளன்தானே, எடுத்துச் சொல்லேன் என்கிறது அது. கனவில் வரும் கனவும் கனவுதானா என்கிறேன் நான். பின்னர் ஒரு பெரிய தும்மல் வந்து கனவைக் கலைத்துவிட்டுப் போகிறது.

* * *

என் அனுபவத்தில்: படிப்பதைவிட எழுதுவது எவ்வளவோ மேல். படிக்கத் தொடங்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இரண்டாம் வரி போல் வரும்போது நான் படிக்கிறேன் என்பதை உணரத் தொடங்கி என்னை நானே வேடிக்கை பார்க்கத் தொடங்குகிறேன். நானும் மேற்கொண்டு படிக்க முடியாமல் பதிலுக்கு வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடுகிறேன். ஆனால் உதாரணமாக இதை எழுதும்போது கவனம் உடனே தீவிரமடைகிறது. இதிலும் சுயவேடிக்கை உண்டென்றாலும் எடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்கிற தினவு கவனத்தைக் காப்பாற்றுகிறது. துலாபாரத்தில் எழுத்தையும் வாசிப்பையும் நிறுத்துப் பார்த்தோமானால் ஒரு தட்டில் எத்தனை புத்தகங்களை அடுக்கினாலும் மறுதட்டுதான் கனத்தில் தரை தொடும். ஏனென்றால் அதில் எழுதுவதும் கையுமாய் உட்கார்ந்திருப்பது நானாயிற்றே!

* * *

‘புயலிலே ஒரு தோணி’க்கு முன்னாலும் பின்னாலும் மேற்கோள் குறி சேர்த்து என் பெயரில் போட்டுக்கொண்டால் எனது நாவலாகிவிடும் என்று நம்புகிறேன். ஆனால் காப்பிரைட்டுக்கேது தெரியும் பின்நவீனத்துவ கூறுமுறைகள்? வந்துவிடுவான் எவனாவது வக்கீலைத் தூக்கிக்கொண்டு.

* * *

கூரியரில் கதை கவிதை புத்தகம் அனுப்பி தொலைபேசியில் கருத்து கேட்கிறார்கள். “நன்றாயிருக்கிறது” என்று சொல்லிவிட்டு சடாரென்று போனை வைத்துவிடுகிறேன். காரணம், நன்றாக இல்லை என்று சொன்னால் ஏன் என்று கேட்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? படைப்புகள் தரமாக இல்லாததால்தானே நன்றாக இருப்பதில்லை? இலக்கியம் தன்னளவிலேயே தரமானதாக இருந்தால் ஏன் இவ்வளவு பிரச்சனை வரப்போகிறது.

* * *

நவீனத்துவம் தனிமனித சீரழிவைப் பற்றியது என்றும் பின்நவீனத்துவம் சமூகத்தின் சீரழிவைப் பற்றியது என்றும் சொல்லலாமா? அல்லது அப்படியெல்லாம் சொல்லக் கூடாதா?

Tags: , , , , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar