முன்னிலைக் கவிதை

in கவிதை

ஒரு ஊருக்குப் போனால் குறைந்தது நான்கு நாட்கள் தங்குகிறாய்
உனக்கு விருப்பமான உணவுகளையே எப்போதும் உண்ணுகிறாய்
நீ எட்டு கோப்பை தண்ணீர் குடிக்காத நாட்களில்லை
மழை பெய்யும்போது குடையோ ரெயின் கோட்டோ இல்லாமல்
வெளியே போக நீ விரும்புவதில்லை
நகைச்சுவையின்போது சிரிக்கிறாய்
கோபம் வந்தால் உளறுகிறாய்
உனக்கொரு துக்கம் என்றால் வார்த்தைகளைக் கொட்டி மகிழ்கிறாய்
வார்த்தைகள் உனக்கு அலுப்பதேயில்லை
உறவுகளைப் பற்றி ஆயிரம் பக்கம் கவிதை எழுதுகிறாய்
துரோகத்தின் கவர்ச்சி உனக்குப் புரிந்திருக்கிறது
துரோகம், தட்பவெப்பம், உருவகம், படிமம் என்கிறாய்
எப்போதும் யுத்தம் செய்துகொண்டிருக்கிறாய்
ஓயாமல் அரசியல் பேசுகிறாய்
உன்னையே தின்று வாழும் விசித்திரமாகவும் இருக்கிறாய் நீ
உன்னைப் பரிமாறிக்கொள்ளும் வழிவகைகளைத் தெரியும் உனக்கு
யாரும் பார்க்காத நேரங்களில் கண்ணாடிக்கு முன்பு நடித்துப் பார்க்கிறாய்
எழுதுவதற்கு வைத்த கையை உன்னால் எடுக்கவே முடிவதில்லை
கொஞ்சம் எழுதுவதை நிறுத்தினோமா, ஏதாவது படித்தோமா
என்பது தமிழில் உனக்குப் பிடிக்காத கேள்வி
இங்கு நீ என்று சொல்லிக்கொள்வது என்னைத்தான் என்பதையும் அறிவாய் நீ.

(பி.கு.: கலகலப்பானதொரு பேச்சு நடந்துகொண்டிருக்கிறது
சிரிப்புகளும் குவிந்த வண்ணமிருக்கின்றன
நீ குறுக்கிட்டு எளிய பங்களிக்கிறாய்
சபை அமைதியாகிறது)

Tags: , , , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar