ஒரு குழந்தைக்குச் சொன்ன கதை

in புனைவு

இருபுறமும் மரங்கள் அடர்ந்த ஒரு நெடுஞ்சாலையில் ராட்சத லாரி ஒன்று பயங்கர வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அதை ஓட்டிக்கொண்டிருந்தது ஒரு முயல்.

லாரி எவ்வளவு வேகமாகப் போய்க்கொண்டிருந்தது என்றால், அதன் முன்புற டயர்களில் ஒன்று – வலப்பக்கம் இருப்பது – பிய்த்துக்கொண்டு தனியாக ஓட ஆரம்பித்துவிட்டது. ஆனால் முயல் அது கழன்று போனது தெரியாமலே தன் பாட்டிற்கு லாரியை ஓட்டிக்கொண்டிருந்தது.

டயர் மிக வேகமாகப் போய் ஒரு பெரிய மாமரத்தின் மேல் மோதி பல முறை சுழன்றுவிட்டு விழுந்தது.

மாமரத்திற்குத் தூக்கம் கலைந்தது. “யாரடா அது என் தூக்கத்தைக் கலைத்தது?” என கர்ஜித்துக்கொண்டே எழுந்தது மாமரம். இலைகளை சிலுப்பிக்கொண்டு எல்லா பக்கமும் பார்த்த மாமரம், கீழே கிடந்த டயரையும் தொலைவில் போய்க்கொண்டிருந்த லாரியையும் பார்த்தது.

“உன்னை விட்டேனா பார்!” என்று கத்திக்கொண்டே மாமரம் நெடுஞ்சாலையில் இறங்கி மிக வேகமாக ஓடி லாரியைத் துரத்தியது. மாமரம் துரத்துவது முயலுக்குத் தெரியவேயில்லை. அது நிறுத்தாமல் லாரியை வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தது.

மாமரம் தனது மாங்காய்களை ஒவ்வொன்றாக லாரி மீது விட்டெறிந்தது. மாங்காய்கள் எல்லாம் தீர்ந்து லாரி நிரம்பிவிட்டது. ஆனால் லாரி நிற்கவேயில்லை. பிறகு மாமரம் தனது கிளைகளைப் பிடுங்கி ஒவ்வொன்றாக லாரியின் மேல் வீசியது.

மாமரம் வீசிய ஒரு பெரிய கிளை டயர்களுக்கு இடையில் சிக்கியது. லாரி பெரிய கிறீச்சிடும் ஓசையுடன் சறுக்கி நின்றது. லாரியை ஓட்டுபவரை ஒரு கை பார்க்க மாமரம் விரைந்து சென்றது. ஆனால் டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்தது ஒரு பொம்மை முயல்.

துணுக்குற்ற மாமரம் அந்த பொம்மை முயலைக் கையிலெடுத்துப் பார்த்தது. பொம்மை முயல் பீப் பீப் பீப் பீப் என்று சத்தம் போட்டுவிட்டு டமால் என்று வெடித்துச் சிதறியது.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar