சைக்கிளைத் திருடியவன்

in கட்டுரை, பத்தி

ஒலியைக் காட்டிலும் காட்சி சக்திவாய்ந்தது, துரித கதியிலானது. திருமணத்திற்கு முந்தைய காலம் வரையிலாவது காட்சி என்பது ஒலியை விட அதிக வீச்சு கொண்டதாக இருக்கிறது. சினிமா, குறிப்பாக உலக சினிமா, காட்சி ஊடகத்தின் உச்சங்களைத் தொடுகிற ஒன்று. அவ்வகையில் நான் பார்த்த பல உலக சினிமா இயக்குநர்களில் இத்தாலிய இயக்குநர் விக்டோரியா தேசிகாவிற்குத் தனி இடம் உண்டு.

விக்டோரியோ டிசிகாவின் அறிமுகம் கல்லூரிப் பிராயத்தில் எனக்குத் தற்செயலாகவே ஏற்பட்டது. கல்லூரித் தோழர்கள் சிலர் பெரும் எதிர்பார்ப்புடன் வீடியோ நூலகத்திலிருந்து வாங்கிவந்த வீடியோ கேசட் ஒன்று மாறாட்டத்தால் ஏமாற்றம் அளித்திருந்தது. நண்பர்கள் அதை ரூம்பில் வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்கள். அந்த கேசட்டினை வீடியோ பிளேயரில் போட்டு ரூம்பில் தனியாக சும்மா இருந்த நான் பார்த்தபோது தெரிந்த படம் தெஸிகாவின் ‘தி பைசைக்கிள் தீஃப்’. உலகில் நான் பார்த்த முதல் உலக சினிமா படம் அதுதான்.

பைசைக்கிள் தீவ்ஸ் என்னை இனம்புரியாத விதத்தில் பாதித்தது. அதன் நியோ ரியலிச கருப்பு-வெண்மை, உலகப் போருக்குப் பிந்திய மக்களின் பெருநகரம் சார்ந்த அவலங்கள், அலெசாந்திர சிகாக்னினியின் வசீகரிக்கும் இசை, வறுமையின் அழகியல் போன்ற விசயங்கள் என்னுள் நிரந்தரமான தாக்கத்தை ஏற்படுத்தின. அந்தக் காலகட்டத்தில் சென்னை ரேடியோ மார்க்கெட்டில் எனது சைக்கிளைத் திருட்டுக் கொடுத்த அனுபவமும் படத்தை ஒன்றிப் பார்க்க உதவியது.

தரித்திர லௌகீகி அன்டோனியோ ரெக்கி வேலையில்லாமல் மனைவி, குழந்தைகள் அடங்கிய குடும்பத்தை நடத்த சிரமப்படுகிறான். ஒரு வேலைக்கு இருநூறு பேர் போட்டியிடும் வேலையானது கிடைப்பதே அரிதென்கிற சூழலில் அன்டானியாவிற்கு தெருவாந்திரம் சென்று சுவரொட்டிகளை ஒட்டும் வேலை கிடைக்கிறது. ஆனால் அந்த வேலைக்கு சைக்கிள் வைத்திருப்பது கட்டாயமாகிறது. அவசரமாக மனைவியின் நகைகளை அடகு வைத்துவிட்டு சைக்கிள் வாங்குகிறான் அண்டோனியா. அவனுக்கு வேலை கிடைக்கிறது. ஆனால் அந்த வேலைக்கிடையிலேயே அவனது சைக்கிள் திருடுபோகிறது.

சைக்கிளை இழக்கும் ஆன்டன், சென்னையின் புதுப்பேட்டை போன்ற, ஆனால் சற்று இடம் தாராளமாக இருக்கிற ஓரிடத்தில் தனது சைக்கிளைத் தேடுகிறான். நாயகனுக்கு சைக்கிள் கிடைக்கிறதா, ஏன் கிடைக்கவில்லை என்பது மத்தியதர வாழ்நிலை குறித்த நீள்கவித்துவ அவதானிப்பாக விஸ்தாரம் பெறுகிறது. கதாநாயகன் இறந்துவிட்டால் படம் முடிந்துவிடும் என்கிற அதே சிக்கல், சைக்கிள் கிடைத்தால் டிசிகாவுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். அதனால் சைக்கிள் கிடைத்து சுபம் போடுவதை விட அதைத் தொலைவதாகக் காட்டி கதையை வளர்த்து நாயகனை சைக்கிள் திருட வைத்து அவனின் மத்தியதர தார்மீக பலவீனத்தை வெளிப்படுத்துகிறார் டிஸிகோ. கலைப் படம் என்று பார்க்காமல் கதைச் செறிவுடன் அருமையாக நகர்த்திச் செல்கிறார் டிஸ்கோ.

கிராண்ட் தெஃப்ட் பைசைக்கிளில் இரு சைக்கிள்கள் மொத்தம் ஒன்றரை முறைகள் திருடப்படுகின்றன. முதல் முறை நாயகனிடமிருந்து. அடுத்து நாயகனால், அடையாளம் தெரியாத ஒரு சிறு கதாபாத்திரத்திடமிருந்து. இந்த இரண்டாம் திருட்டு முழுமையாக நிறைவேறுவதற்குள்ளாக பொது மக்களால் தடுக்கப்படுகிறது. இரண்டாம் சைக்கிள் திருட்டுக்கு ஆளாகுபவர், சைக்கிளைத் திருட்டுக் கொடுக்கிறார். இதை வைத்து அவரை நாயகன் இருந்த அதே அவல நிலைக்குக் கொண்டுவருவதற்கு பதிலாக தேசிகா, உலகப் போருக்குப் பிந்தைய வறுமையை ஒருவன் பட்டது போதும் என்று நினைக்கிறாரோ என்னவோ, இரண்டாம் சைக்கிள் உடனே கைப்பற்றப்படுவதாக சித்தரிக்கிறார்.

பயிற்சி இல்லாமல் திருடுவதன் அசௌகரியத்தைச் சுட்டிக்காட்டும் இந்தக் காட்சியானது மகன் வளர்ந்து பெரியவனாவதற்கு முன்பாகவே தந்தை அவன் பார்வையில் சரிந்துவிடுவதையும் சேர்த்தே சுட்டிக்காட்டுகிறது. சைக்கிள் காணாமல் போகும் காட்சிக்குப் பிறகு முக்கியமான காட்சி இது. அண்டானியாவின் முற்றிய முகமுள்ள மகன் படம் நெடுகத் தந்தையுடன் அலைகிறான். நாயகனின் குடும்பச் சுமை அவனை விடாமல் துரத்துவதை மகன் மூலம் காட்டுகிறார் தேவிகா. திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு தந்தை அவமானப்படுவதைப் பார்த்து மனமுடைந்து அழுகிறான் மகன். வாழ்வாதாரத்தை இழந்தாலும் ஆதர்சமான தந்தையாகும் வாய்ப்பை இழந்தாலும் மகனின் பாசத்தை இழக்கவில்லை என்று நெகிழ்ச்சியோடு முடிகிறது சைக்கிள் தீஃப். துன்பங்கள் தவிர்க்க முடியாதவை, ஆனால் உறவுகளின் பிணைப்பு துன்பங்களின் தீவிரத்தைத் தணிக்க உதவும் என்கிறது நியோ ரியலிசம்.

இந்தப் படத்தில் சைக்கிளை மகிழ்ச்சிக்கான மனித தேடலுக்குக் குறியீடாகவும் அந்தக் குறியீட்டை நோக்கிப் பயணிக்கும் வாகனமாகவும் பயன்படுத்துகிறார் தேசிகன். தாழ் மத்தியதர வகுப்பைச் சேர்ந்த அண்டோனியாவுக்கு மகிழ்ச்சி எட்ட எட்ட விலகிப் போகிற ஒன்றாக இருக்கிறது. இன்னொருவர் திருடுவதற்கு முன்பும் தானே திருடியதற்குப் பிறகும் அது சில கணங்களே அவன் வசம் இருக்கிறது. இது மனித மகிழ்ச்சியின் குறியீடின்றி வேறென்ன?

இந்தப் படத்தை எந்தக் காலத்திற்கும் இடத்திற்கும் மாற்றிப் பார்க்கக்கூடிய குவலயத் தன்மையை டிசிகாவின் பிற படங்களிலும் பார்க்க முடியும். ஆனால் த பைசைக்கிள் ராபர்ஸின் புகழ் டேசிகாவின் மற்ற முக்கியமான படங்களின் புகழை மங்கச் செய்துவிட்டது. இன்றும் கூட விழாக்களிலோ திரைப்பட நிகழ்ச்சிகளிலோ இந்தப் படம் திரையிடப்படும்போது நல்ல கூட்டம் இருப்பதைப் பார்க்கலாம். ஏனென்றால் பைசைக்கிள் ராபரி அளிக்கும் அனுபவம் காலத்தின் சக்கரங்களுக்கு அடியில் சிக்காத ஒன்றாகவே இன்னமும் இருந்துவருகிறது.

Tags: , , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar