ஜாஸ் பற்றி சில குறிப்புகள்

in கட்டுரை

இந்த வாரமாக ஜாஸ் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதற்கு முன்பு வரையிலான நிலவரப்படி நான் ஜாஸ் இசையைக் கேட்டதில்லை. ஆனால் நிறைய கேள்விப்பட்டிருந்தேன். டைட்டானிக் படத்திலும் பார்த்ததாக நினைவு. தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தாலும் ஜாஸ் எனக்குப் பிடிக்கிறதா என்று தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் உலக தீவிர இசையில் ஜாசிற்கு முக்கியப் பங்கிருக்கிறது என்பதால் ரசித்துக் கேட்கிறேன்.

லூயி ஆம்ஸ்டிராங்

ஜாஸ், தெற்கு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கச் சமூகத்தினரிடையே, 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் உருவான ஒரு அமெரிக்க இசை வடிவம் ஆகுமாம். இது ஆப்பிரிக்க இசை மரபுகளினதும், ஐரோப்பிய இசை மரபுகளினதும் கலப்பில் உருவானதாம். விக்கிபீடியாவில் எழுதியிருக்கிறது.

ஜாஸ் இசை பெரும்பாலும் வெறும் பின்னணி இசை மட்டுமாக இருக்கிறது. எனவே முதன்முதலாக ஜாசைக் கேட்கப்போய் பாடலுக்காகக் காத்திருப்பவர்கள் ஏமாறக்கூடும். வாய்ப்பாட்டு விரும்புபவர்கள் லூயி ஆம்ஸ்டிராங், நேட் கிங்கோல், பிராங்க் சினாட்ரா போன்ற பாடகர்களைத் தேடிக் கேட்க வேண்டும். ஜாசிலேயே பெபாப் ஜாஸ், ஆல்தட் ஜாஸ், ஸ்விங் ஜாஸ் என்று பல உள்வடிவங்கள் இருக்கின்றன. இவற்றை நேயர்கள் அவரவர் விருப்பப்படி கேட்டுக்கொள்ளலாம். இத்தாலிய ஓபெராய் வகைப்படி கீச்சுக் குரலில் சிகர ஸ்ருதியில் வலித்துப் பாடப்படும் முறையையும் ஜாஸ் இசை சுவீகரித்துக்கொண்டதை இப்பாடகர்களிடம் கேட்கலாம்.

ஜாஸ் இசை எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு சோற்றுப் பதமாக ஒரு எடுத்துக்காட்டு, ஜாஸ் முன்னோடிகளில் முதன்மையானவராகக் கருதப்படும் எல்லிங்டனின் Take the Coltrane என்கிற பாட்டு. இந்தப் பாட்டில் ஒரு குழந்தையைச் சீண்டுவது போன்ற தொனியுடன் பியானோ (சாக்சபோன்) வாசிப்பைத் தொடங்குகிறார். பிறகு அந்தக் குழந்தையுடன் சாவகாசமாக இலக்கில்லாத பேச்சு. அடுத்து எதைப் பற்றியோ விலாவரியான வர்ணனை. பின்னர் மீண்டும் சீண்டல். குழந்தையைச் சீண்டிக்கொண்டிருக்கும்போதே, எங்கே வந்தோம் என்பதை மறந்து போய் சீண்டுவதை நிறுத்துகிறார். அக்கம்பக்கத்தில் வழிகேட்கிறார், தான் யார், வந்த காரியம் எல்லாம் விளக்குகிறார். விளக்கம் வாக்குவாதமாகி சூடுபிடிக்கிறது. அதன்பின் வாக்குவாதங்களில் நம்பிக்கை இழந்துவிடுகிறாரோ என்னவோ, சமாதானமாகப் பேசத் தொடங்குகிறார். சொன்னதையே திரும்பத் திரும்ப ஏழெட்டு முறை சொல்லி திமிலோகப்படுத்துகிறார். மீண்டும் வழி கேட்க ஆரம்பித்து வாக்குவாதம் தொடங்கி திடுதிப்பென்று சமாதானமாகிறார். எங்கே இருக்கிறோம் என்று தெரிந்ததும் சாந்தமாகி மீண்டும் குழந்தையைச் சீண்டத் தொடங்குகிறார். இத்தனைக்கும் இடையில் டிரம்ஸ் வாசிப்பாளர் தனக்கேயான பிரத்தியேக உலகில் இருந்தபடி பரபரப்பான கதியில் வாசிக்கிறார். பியானோ வாசிப்பாளர் செய்யும் அரசியல் அவரை எட்டவேயில்லை. ஆனால் இருவரும் ஒரே சமயத்தில் தத்தமது வாசிப்புகளை முடிக்கிறார்கள். வாசகர்கள் இன்ன பாட்டை சரியாக இத்தனை நேரம் வாசிக்க வேண்டும் என முன் உடன்பாடு செய்திருக்கக்கூடும் என்பதால் இது சாத்தியமாகிறது.

ஜாசினை முழுமையாய் கிரகிக்க வாக்மேன் அல்லது ஹெட்போன் பயன்படுத்திக் கேளுங்கள். ஹெட்போனில் கேட்கும்போது இடது காதில் சாக்சபோனும் வலது காதில் டிரம்சும் மையமாக பியானோவும் கேட்கின்றன. இதை வைத்து எந்தக் கருவியின் வாசிப்பாளர் எங்கே உட்கார்ந்து வாசித்திருக்கிறார் என ஊகிக்க முடிவது இதன் தனித்துவம்.

ஜாஸ் என்றாலே முதலில் சொல்லப்படும் பெயர்களான டியூக் எல்லிங்டன், ஆஸ்கர் பீட்டர்சன், மைல்ஸ் டேவிட் என ஒவ்வொரு ஜாஸ் கலைஞரும் தனித்தனி நபராக இருந்தாலும் எல்லோருடைய வாசிப்பிலும் ஒரே மாதிரியாக ஒலிப்பது ஜாஸ் இசையின் ஒருமைத்தன்மையாகும். இசை ஒரு கடல் மாதிரி என்றால் ஜாஸ் ஒரு கடற்கரை. ஜாஸ் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒரு மணல் துகள். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இருந்துகொண்டு பல கலை வடிவங்களை பாதித்திருக்கும் ஜாஸ், நமக்குக் கிடைத்திருக்கும் கோடி இன்பங்களில் குறிப்பிடத்தக்க பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar