பொய் இனிது

in கட்டுரை

மெய் இனிது. பொய் இனிது. வலதினிது. இடதினிது.
– ‘காற்று’ வசன கவிதையில் பாரதியார்

பொதுவாகவே, பொய் சொல்வது தவறான செயல் என்பது என் துணிபு. நல்ல காரியத்திற்காகச் சொல்வதால் அது உண்மை ஆகிவிடாது. உண்மை ஆகத் தேவையில்லை என்பது விதண்டாவாதம். ஏனெனில் பொய் தன்னளவிலேயே தீமையானது. Some are more Equal என்பது போல நல்லதுக்காகப் பொய் சொல்லலாம் என ஒன்றை கட்டமைத்திருக்கிறார்கள் நம் முன்னோடிகள். இந்தக் கூற்றை நாம் முக்காலத்திற்குமான உலகப் பொதுமறையாக ஏற்காமல் அவர்களுக்கு அந்தந்த சமயங்களில் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினைக்கான தற்காப்பு எதிர்வினை உத்தியாகப் பார்க்க வேண்டும்.

வெகுஜன அழகியலில் பொய்க்கு இடமிருப்பதை நாமே பார்த்திருக்கிறோம். கவிதைக்குப் பொய் அழகு என்பது பாடம். “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே”யின் நீட்சி அந்தக் கூற்று. ஆக, பொய்யை தார்மீக காரணங்களுக்காகவிற்குப் பதிலாக அழகியல் காரணங்களுக்காகப் பயன்படுத்துவது தவறல்ல என்றாகிறது. Truth is beauty என்றார் கீட்ஸ். அவரும் அதைப் பொய்யினால் அழகாக்கப்பட்ட தனது கவிதையில் சொல்லியிருக்கிறார். சிலருக்குப் பொய் சொல்வதே தொழில். அதே போல முழுநேரக் கவிஞர்களும் இருக்கிறார்கள்.

பாரதியார் என்ன சொல்லுகின்றார்? கவிதை எழுதுகிறது மட்டும்தான் என்னுடைய தொழில், நான் வேறு செயல்பாடு அறியேன் என்கிறார். கடந்த குறைந்தது இரு நூற்றாண்டுகளாக இந்நிலமை மேனாடுகளில் சாத்தியமாக இருந்துவருகின்றது. ஆனால் இங்குக் கவிதை மட்டும் எழுதிக்கொண்டு ஒருவன் ஜீவாதாரத்தை நிறுவிட முடியாது. தமிழிலக்கிய வரலாற்றில் இடம் பிடிக்காமல் ஓய மாட்டுவதில்லை என்று கரை வைத்து நடந்துகொண்டால்கூட மிதமிஞ்சிப்போனால் “தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவர்” என்று பெயர்தான் வாங்கலாமோடு சரி. சம்பந்தப்பட்ட நடத்தையால் ஒரு கவிஞன் கெலிக்கும் வாழ்வாதாரம் கிஞ்சித்தையும்விடக் கம்மியே.

இதே மாதிரியான ஒரு விஷயம் என்னுடைய படைப்பு ஒன்றிலும் அடியோட்டமாக இருப்பதைக் காண்க முடிகிறது. எப்படியென்றால், ஒரு இளைஞன் கவிஞன் ஆகும் கனவுகளோடு சென்னைக்கு வருகிறான். தெருமிகு நகரம் அவனுக்குத் தனிமையைக் கற்றுத் தருகிறது. காதலைக் கற்றுத் தருகிறது. நிராகரிப்பை, துரோகத்தைக் கற்றுத் தருகிறது. கவிதை தவிர பிற தொழில்களையும் அவன் கற்கிறான். அதற்குப் பிறகு அவன் கவிஞன் ஆகிறானா, அப்படியே ஆனாலும் என்ன சாதிக்கிறான் என்று கதை சொல்கிறது.

தமிழ்ப் பதிப்புத் துறை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காகித காலத்தில் “தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களில் ஒருவர்”கள் குவிந்துவிட்டனராயினும் அன்றாட மனிதன் கவிதையை இன்னமும் பொருட்காட்சியில் தொலைந்துவிட்ட குழந்தையின் கண்களோடுதான் பார்க்கிறான். ஏன், ஒட்டுமொத்த இலக்கியமே புரிதல் சார்ந்த பிரச்சினைப்பாடுகளால் சாமானியனை அந்நியப்படுத்திப் பகைத்துக்கொள்கிறது.

பொய் விஷயத்திற்கே வருவோமே. அதில்தான் நிறைய கிடைக்கிறது. ‘காலா… என்றன் காலருகே வாடா’ என்று எழுதுகிறார் பாரதியார். இதைச் சற்று விரிவாக அலசி இதன் பொய்யை நிறுவுவதோடு கட்டுரையை முடிப்போம். இந்தப் பாட்டில் பாரதியார் காலன் (எ) எமனைக் காலருகே வரச் சொல்கிறார், தான் மிதிப்பதற்கு. என் அருகே வா என்று சொல்லாமல் என் காலருகே வா என்று சொல்வதற்கு இரு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று, எமன் மனிதக் கால் கட்டைவிரல் உயரம்கூட இல்லாது பட்டாணி அளவில் இருக்க வேண்டும். அல்லது கவிஞர் சென்னை மெரீனா கடற்கரையில் அவரின் சிலைக்கு இருப்பது போல் ஒரு பீடத்தின் மீது நின்றிருக்க வேண்டும். புராணங்கள் எமனை அவ்வளவு சிறியவனாக சித்தரிக்கவில்லை. யாரும் சும்மா ஒரு பீடத்தின் மேல் ஏறி நின்றுகொண்டு யாரையும் சண்டைக்குக் கூப்பிடப்போவதும் இல்லை, சென்னையில் பீடங்களை யாரும் காலியாக விட்டுவைப்பதும் இல்லை. எனவே இரு காரணங்களும் சாத்தியமில்லை. இதனால் பாரதியார் தனது காலை ஒரு deterrent போல் பயன்படுத்துவதாகவும் அர்த்தம் கூற முடியாது. இதுதான் இலக்கியம். பாரதியார் பொய் கலக்காமல் “மரணமே, எனக்குச் சாகப் பயமில்லை” என யதார்த்தமாக எழுதியிருந்தால் நமக்கு இலக்கியம் கிடைத்திருக்காது. இலக்கியம் நமக்கு அளிக்கும் மகத்தான ஒரு தகவல் என்னவென்றால் அது பொய்தான்.

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar