வள்ளுவ வரிகள் தனி

in கட்டுரை

திருக்குறள் முதல் பிற்கால செய்யுள் இலக்கியங்கள் வரை செய்யுளில் பயன்படுத்தப்படும் தமிழ், சில வார்த்தைகளில் பல அர்த்தங்களைப் பதுக்கியதாக இருக்கிறது. அதன் வாக்கிய அமைப்பும் புதிரானது. இதற்குத் திருக்குறளை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. இந்த இருவரிக் கவிதைகளையும் அவற்றின் உரைகளையும் ஒப்பிட்டால் அந்த இருவரிகளில் எத்தனை அர்த்தம் அடங்கியிருக்கிறது என்று புரிந்துகொள்ள முடியும்.

இந்தக் கட்டுரைக்காகப் பதினைந்து ரூபாய்க்குத் திருக்குறள் வாங்கிப் பார்த்தபோது எனக்குப் பிடித்த சில குறள்களுக்கு உரை எழுதத் தோன்றியது. விளைவு பின்வருமாறு:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

உரை:

எழுத்துகளை அகரவரிசைப்படுத்தினால் முதற்கண் வருவது ‘அ’ எனும் எழுத்து. அதைப் போன்றே, உலக விசயங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுப் பார்த்தால் முதலில் வருவது கடவுள்.

விளக்கவுரை:

எழுத்துகள் என வள்ளுவர் பூடகமாக உணர்த்துவது ‘அ’ எனப்படும் எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட மொழிகளின் எழுத்துகளை மட்டும். உலகப் பொதுமறை என விதந்தோதப்படும் ஒரு படைப்பு சிலமொழிச் சார்புள்ளதாக இருப்பது வியப்பைத் தருகிறது. அதே சமயத்தில் அவரது காலகட்டத்தில் வேறு வகையான மொழிகள் இல்லாமல் இருந்திருக்குமா என்ற கேள்விக்கும் இது வித்திடுகிறது.

ஒரு பட்டியல் என வரும்போது அதில் உள்ளவை தனி அடையாளம் இன்றி சமமாக விளங்குகின்றன. அப்படிப்பட்ட பட்டியலான எழுத்துப் பட்டியலில் முதலில் இருக்கும் ‘அ’-வை கடவுளுக்கான உவமையாக வள்ளுவர் பயன்படுத்துகிறார். உலகில் முதன்மையானது கடவுள் என்கிறார். அதே சமயத்தில் கடவுள் எல்லாவற்றையும் விட மேலானவர் என்று சொல்லவில்லை. எழுத்துக்களில் சிறந்தது “அ” என்று அவர் எழுதவில்லை. முதுநிலைத் தன்மையால் முதலில் வருவது (first-come) என்று மட்டுமே கூறுகிறார். வள்ளுவர் அத்வைத இறைமுதல்வாதத்தில் நம்பிக்கை கொண்டிருந்ததை இது காட்டுகிறது.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

உரை:

அன்பு இல்லாத நபர்கள் சகலரும் தங்களுக்கு மட்டுமே சொந்தக்காரர்கள். அதே அன்பு இருக்கிறவர்களைப் பார்த்தோமானால் அவர்களின் எலும்புகூட மற்றவர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்.

விளக்கவுரை:

பிறரிடம் அன்பு இல்லாதவர்கள் யாரோடும் ஒட்டாமல் தனியாக இருப்பார்கள். அதையும் மீறி ஒட்டுகிறார்கள் என்றால் அவர்களிடம் சிறிதளவாவது அன்பு இருக்கும். இந்தக் குறள் அம்மாதிரியானவர்களைப் பற்றி அல்லாமல் மருந்துக்குக் கூட அன்பு இல்லாதவர்களைப் பாடுகிறது. மற்றவர்களிடம் அன்பு செலுத்தாதவர்களை “அன்பிலார்”, “தமக்குரியர்” என்று பன்மையில் தொகுத்துக் கூறும் வள்ளுவர், இவர்களிடையே ஒரு குழுமை (community) இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார். இதற்கு மாறாக, அன்பு இருப்பவர்கள் முழுவதும் மற்றவர்களுக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். எந்தளவிற்கு என்றால் ‘எலும்புகூட மிஞ்சாது’ என்று வள்ளுவரே சொல்லுமளவிற்கு. அன்பிலா x அன்புள நிலைகளில் எது மேலானது என்பதை வாசகர் தேர்வுக்கே விட்டுவிடுகிறார் வள்ளுவர்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்

உரை:

தன் மகனைப் பிரசவிக்கும்போது மகிழ்ச்சியடையும் தாயானவள் தன் மகனை நல்லவன் என்று பிறர் மூலம் கேள்விப்பட்டு அதைவிட அதிகமான மகிழ்ச்சியை அடைந்தாள்.

விளக்கவுரை:

இந்தக் குறள் வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது. இக்குறளில் இறந்தகாலத்தின் பயன்பாடு, இது ஒரு புனைகவிதை (narrative poem) என்று கோடி காட்டுகிறது. ஒரு தாய் ஒரு ஆண்குழந்தையைப் பிரசவித்ததால் மகிழ்ச்சி அடைவதைச் சொல்லும் தொடக்கப் பகுதி ‘பெரிதுவக்கும்’ என்று நிகழ்காலத்தில் முடிகிறது. மகன் நல்லறிவு மற்றும் நற்செயல்களின் மூலம் சான்றவன் என்று பெயர் வாங்கியதை தாய் கேள்விப்படுவது ‘கேட்ட’ என்று கடந்தகாலத்தில் வருகிறது. எந்தக் குழந்தையும் பிறந்ததுமே நல்லவன் என்று பெயர் வாங்கிவிட முடியாது. பிறப்புக்கும் பெயர் வாங்குதலுக்கும் இடையே பல ஆண்டுகள் கிடக்கின்றன. ஆனால் வள்ளுவர் காலத்தைக் குறுக்கி அடுத்தடுத்த வரிகளில் இந்த நிகழ்வுகளை வைக்கிறார். அறிவியல் புனைவுகளுக்கேயுரிய காலக் குழப்பத்தை வள்ளுவர் நீதிக் கவிதையில் பயன்படுத்தியிருப்பது ஆச்சரியப்படுவதற்குரியது.

‘பெரிதுவக்கும் தன்மகனை’ என்கிற வாக்கிய அமைப்பு, அந்தத் தாயின் மகன்தான் தான் பிறந்ததும் அது பற்றி மகிழ்ச்சி அடைவது போல் பொருள்பட இடமளிக்கிறது. இத்தனை திருகல்களுக்கு இடையிலும் மகனின் தார்மீக வளர்ச்சி, சமூக அந்தஸ்து ஆகியவற்றில் தாய்க்கு உள்ள அக்கறையின் மூலம் தாய்ப் பாசத்தின் மேன்மையை வள்ளுவர் பாராட்டுகிறார். இதுதான் இந்தக் குறளின் தனித்துவம்.

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

உரை:

கற்க வேண்டிய புத்தகங்களை தவறில்லாமல் வாசித்துக் கற்க வேண்டும். அதன்கண் கற்ற பின் அதிலெல்லாம் வருவது போல நடந்துகொள்ள வேண்டும்.

விளக்கவுரை:

கல்வியில் இருவகைகள் உண்டு ஆகும். முதலாவது, கணக்கு, அறிவியல் போன்ற நடைமுறைக்கான விசயங்களை கற்றுத் தருவது. இரண்டாவது, தார்மீகம், மதிப்பீடுகள் போன்ற நடைமுறை சாராத விசயங்களைக் கற்றுத் தருவது. வள்ளுவரின் ‘கற்க கசடற’ குறள் இருவகை கல்விகளுக்கும் பொருந்தக்கூடியது. படிப்பது என்பதே அதை வாழ்க்கையில் பின்பற்றத்தான். படி என்பதும் அதற்கேற்ப நட என்பதும் தனித்தனியாகச் சொல்லப்படுவதன் வாயிலாக இரண்டிற்கும் உள்ள தொலைவு உணர்த்தப்படுகிறது.

இன்றைக்கு சிலர் செய்வது போல கண்டதையும் படித்து அதன்வழி நடக்க வள்ளுவர் சொல்லவில்லை. கற்பவைகளை – கற்கத் தகுதியுள்ள விசயங்களை மட்டும் – தவறுகள் இல்லாமல் கற்றுக்கொண்டு அந்த விசயங்களில் என்னென்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அந்தக் காரியங்களை இம்மி பிசகாமல் செய் எனகிறது குறள். இவ்விவை கற்கத் தகுதியுள்ளவை என எந்த அளவுகோல்களின்படி யார் தீர்மானிக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றினால் கல்வியுடைமை அதிகாரத்தின் குறள்களைப் பார்க்கவும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

உரை:

நமக்கு இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர்தம் நாணுவதற்காக நன்னயம் செய்துவிடுதல் ஆகிய இவ்விரண்டும் என்கொலோ வாழ்க்கையில் அவசியமாகும்.

விளக்கவுரை:

நமக்குக் கெடுதல் செய்பவரை தண்டிப்பதும் அவருக்கு நல்லதாக ஏதாவது செய்வதன் வாயிலாக அவரை வெட்கப்படுத்துவதும் வாழ்க்கையில் முக்கியமான விசயங்கள். ஒருவர் நமக்கு தவறு செய்தால் அவரை தண்டிக்க வேண்டும். அப்போதுதான் அவர் இன்னொருகண் நம்மிடம் அதே தவறையாவது செய்ய மாட்டார். அடுத்து, இத்தனை நல்லவருக்கு நாம் கெடுதல் செய்துவிட்டோமே என்று அவரை வெட்கப்பட வைக்கும்படியாக அவருக்கு நல்ல காரியத்தை நாம் செய்ய வேண்டும்.

வள்ளுவர் மனிதன் கடைபிடிக்க வேண்டிய இரு செயல்களையும் ‘அல்’ விகுதியில் முடிக்கிறார். இந்த இரு செயல்களுக்கு இடையில் ‘மற்றும்’, ‘ஆனால்’ போன்ற இடைச்சொற்களை அவர் பயன்படுத்தவில்லை. அவர் சொல்ல விழையும் கருத்தின் நெருக்கடித்தன்மையை இதன் மூலம் தெரிவிக்கிறார். மனித உய்வுக்கு வள்ளுவர் போடும் அவசரப் பட்டியல் இது. அதே சமயத்தில் நல்ல காரியங்கள் என்று நாம் கூறுபவற்றில் ஒளிந்திருக்கும் வன்முறையையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இப்படியான வாசிப்பு, வள்ளுவர் காலத்தில் வாழ்ந்த ஒருவரிடம் இருப்பது அதிசயம்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

உரை:

அன்பைப் போட்டு அடைப்பதற்குத் தாழ்ப்பாள் ஏதாவது இருக்கிறதா? மற்றாங்கில் ஆர்வம் இருப்பவர்கள் சிந்தும் துளியளவு கண்ணீரே நம்மைக் காட்டிக்கொடுத்துவிடும்.

விளக்கவுரை:

அன்பைத் தாழ்ப்பாளால் அடைக்க முடியுமா? அன்பு என்பது சூட்சுமமான விசயம். தாழ்ப்பாளோ ஸ்தூலமானது. உங்களுக்கு உண்மையாகவே அன்பை அடைத்தாக வேண்டும் என்றால் ஸ்தூலங்களை விட்டுவிட்டு சூட்சுமமான உத்திகளைத் தேடும் வழியைப் பார்க்க வேண்டும். வள்ளுவர் அன்பை அடைக்கத் தாழ்ப்பாள் கேட்கிறார் என்றால் வாசகர்களான நாம் “யாருடைய அன்பை?” என்று கேட்க வேண்டும். இதுதான் மறுவாசிப்பு.

தன்னுடைய சூட்சுமத் தன்மையால் ஸ்தூலப் பொருட்களால் அடைக்கப்பட முடியாத அன்பானது கண்ணீர் வழியாக பலர் அறிய வெளியே வந்துவிடுகிறது. அதன் பின்னர் இன்னார் மீது எனக்கு அன்பு இல்லை என்று எவ்வளவு சாதித்தும் பயனிராது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கண்ணீர் சிந்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பிறர் மனம் புன்படுமாறு கணீர் என்று பேசினால் பூசல் ஏற்படும் என்பது இன்னொரு வாசிப்பு.

இதற்கிடையில் ஆத்திசூடியையும் புரட்ட நேர்ந்தது. அதில் “ஐயம் இட்டு உண்” என்ற வரி கண்ணில் பட்டது. ஏன் சந்தேகத்தோடு சாப்பிட வேண்டும் என்று ஔவையார் சொல்கிறார்? இந்த எச்சரிக்கை ஒற்றர்களுக்காக அல்லது பகைவர்கள் அதிகமுள்ள மன்னர்களுக்காக இருக்குமோ? ஆனால் அது இன்னொரு கட்டுரை.

தொடர்பானப் படைப்புகள்:
கவிஞர் வள்ளுவர்

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar