உரையுடைமை

in கட்டுரை

ஒரு உரை எழுதிய பின் அதைச் செய்யுளாக மாற்ற ஒரு கட்டுரை எழுதுவதற்குரிய நேரம் ஆகிறது. நிறைய மெனக்கெட்டு ஒரு செய்யுளை சிறப்பாக எழுதி முடித்த திருப்தியுடன் படித்துப் பார்த்தால் ஒன்றுமே புரிவதில்லை. எனவே இப்போதைக்கு செய்யுளுக்கு லாற்சலாம் போட்டுவிட்டு உரையாசிரியனாக இருந்துகொள்கிறேன்.

கீழ்க்காண்பவை நான் நேரடியாக உரையாகவே எழுதிவிட்டவை. இவற்றைக் கொண்டு செய்யுள் இயற்றுபவர்கள் யாரும் உரையை அதற்கடியில் அளிக்கும்போது உரையாசிரியர் எனத் தவறாமல் என் பெயரைக் குறிப்பிடவும்.

1

பணத்தைவிட அன்பு பெரிது. அதுவும் செல்வாக்கானவர்களின் அன்பு. அத்தகைய அன்பைச் செலுத்துபவர்களின் செல்வாக்கு, நம் அன்புக்குரியவர்களிடம் அன்பைக் காட்ட உதவும் வசதியை நமக்கு அளிக்கும்போது வரும் மகிழ்ச்சி, முதலில் குறிப்பிட்ட பணம் அளிக்கும் மகிழ்ச்சியைவிடப் பெரிது.

2

நோ்க்கோடு போட்டால் தமது எடை குறைவான தலையை ஆட்டி ரசிப்பவர்கள், அந்தக் கோட்டையே அப்படி இப்படி வளைத்து அழகிய ஓவியமாக்கினால் ஏற்கனவே சுளிக்காத குறையாகக் கிடக்கின்ற முகத்தினை மேலும் சுளித்து இன்புறுகிறார்கள்.

3

தொடங்கிய எந்த வேலையையும், அது எதுவாக இருந்தாலும், முடித்துவிட வேண்டும். இல்லையேல் அது வேறு யாரிடமாவது கைமாறி நாம் செய்திருக்கக்கூடியதை விட செவ்வனாகவும் நமக்கு ஆதாயம் தரவியலாத முறையிலும் செய்து முடிக்கப்பட்டுவிடலாம்.

4

2011இன் முதல் அரையாண்டில் குறிப்பிடத்தக்க லாபம் ஈட்டிய பெருமதிப்புள்ள உங்கள் கம்பெனியில் திறமையும் தகுதியும் தீவிரமாகப் போட்டியிடும் தளமாகிய என் மகனுக்கு ஒரு நல்ல வேலையாகப் போட்டுக் கொடுத்தால் நலமே.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar