சில குறிப்புகள்

in கட்டுரை

ஏனெனில் இது குறிப்புகளின் காலம்.

*

சமகால சாகித்யம் குறித்த சாமுவேல் டெய்லர் காலரிட்ஜின் நகைச்சுவை கவிதை ஒன்றினை படித்தேன். ஆனால்…. இதில் சிரிக்க என்ன இருக்கிறது?

A Rhymester

Jem writes his verses with more speed
Than the printer’s boy can set ’em ;
Quite as fast as we can read,
And only not so fast as we forget ’em.

*

நாம் நன்றாக உன்னித்துப் பார்த்தோமானால், ஒரு கலைஞன் எப்போதும் தொடக்கத்தில் மட்டுமே சிறப்பான படைப்புகளைத் தருகிறான். பின்னர் பரிணாம வளர்ச்சி அடைந்து, விசயங்களின் உள்ளூடே பயணம் புரிந்து செறிவான படைப்புகளை உருவாக்கத் தொடங்குகிறான். ஆனால் தனது ஆரம்பகால வாசகர்களை இழந்துவிடுகிறான். சில சமயங்களில் திடீரென விசில் சத்தம் நின்றுவிடுகிறது.

*

என்னுடைய சிறந்த படைப்புகள் எனது சுமாரான படைப்புகளை விட மோசமாக இருக்கக் கூடாது. ஒரு படைப்பாளியாக இதுவே என் லட்சியம்.

*

ஒரு சிறுகதைக் கரு: அடிக்கடி ஒருவர் சட்டைப்பையிலிருந்து பணமும் வீட்டிலிருந்து சில பொருட்களும் காணாமல் போகின்றன. அவருக்கு வேலைக்காரி மேல் சந்தேகம் ஏற்படுகிறது. தொடர்ந்து கண்காணிக்கிறார். நீயும் கண்காணிக்குமாறு மனைவியிடமும் சிபாரிசு செய்கிறார். கடைசியில் தன்னுடைய சொந்த மகள்தான் அவற்றைத் திருடித் தன் காதலனுக்குக் கொடுக்கிறாள் என்று அவருக்குத் தெரிகிறது. உண்மையாக உழைக்கும் வேலைக்காரியை சந்தேகப்பட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்வு அவருக்கு ஏற்படுகிறது. நல்ல வேளை, எடுத்தது தன் மகள்தானே என்கிற உண்மையாலும் வேலைக்காரர்களை சந்தேகிப்பது தன் வர்க்க இயல்பு மட்டுமே என்கிற ஞானோதயத்தாலும் குற்ற உணர்வு நீங்கிச் சமாதானமடைகிறார்.

*

இணையத்தில் நாம் எழுதுவது/ஒரு விசயத்தைச் சொல்வது நம் கருத்தைத் தெருமுனைச் சுவரில் சுவரொட்டியாக ஒட்டிவைப்பது போன்றதாகும். அதை ஆங்காங்கே கிழித்துவிடுவார்கள். கிழிபட்ட இடங்களில் எல்லாம் முன்பே யாரோ ஒட்டிய சுவரொட்டிக் கிழிசல்கள் சம்பந்தமில்லாமல் தலையைக் காட்டும். கிழித்துக் கிழித்துக் கடைசியில் அர்த்தமில்லாத துண்டுகளே மிஞ்சும். இதில் எது கொடுமை என்றால், இந்தக் கந்தர்வ கோலத்திற்கு அடியில் நம் பெயர் மட்டும் கிழிக்கப்படாமல் இருக்கும்.

*

பெருவெடிப்பிற்கு முன் காலம் இருந்ததா? அல்லது பெருவெடிப்பிற்கு முன் காலம் எங்கே இருந்தது? ஏனென்றால் காலமும் வெளியும் யின்-யாங் பாம்புகளைப் போல் பின்னியுள்ளன. ஒன்று இல்லாமல் இன்னொன்றை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. நம்மிடம் இதுதான் ஒரு பெரிய குறை. காலம் ஒரு பிராபஞ்சிக களிமண்ணைப் போன்றது. நாம்தான் அதற்கு நந்நமது இயல்புகளின்படி வடிவம் கொடுத்துக்கொள்கிறோம்.

*

பனியை வெள்ளைக்காரர்கள் சார்ந்த ஒன்றாகவே என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் தாராள எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இந்த எனது முன்முடிவு, எழுத்தாளனாகிய எனக்குத் தர்மசங்கடத்தை அளிக்கிறது. அமெரிக்கவாழ் வாசகர்கள் பனியையும் கருப்பர்களையும் அருகருகே வைத்து எடுத்த புகைப்படம் ஒன்றினை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பக் கோருகிறேன்.

Tags: , , , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar