கவிதை குறித்தான இருமுனை அலசல்

in கட்டுரை

இன்று காலை நானும் லபக்குதாசும் என் கவிதை ஒன்றினை அலசிக்கொண்டிருந்தோம். பொதுவாக ராணுவ முகாம்களில் மேஜை மீது வரைபடத்தை வைத்து திட்டமிடுவது போல் என் கவிதையை பிரிண்ட் அவுட் எடுத்து அதை அதற்கான மேஜை மேல் வைத்து விவாதிப்போம். அதாவது பின்வருமாறு.

“இது ஏதாவது புரிகிறதா பாருங்கள், ஹஹ்ஹஹ்ஹஹ்ஹா!”

“இல்லையே, உங்களுக்கு? ஹஹ்ஹஹ்ஹா!”

“இந்த எழுத்து இங்கே வரக்கூடாது!”

“வந்தால் என்ன கேடு? பார்க்க நன்றாகத்தானே இருக்கிறது!”

“எனக்கென்னவோ அந்த எழுத்து அவ்வளவு நன்றாக அங்கே உட்காரவில்லை என்று தோன்றுகிறது.”

“வேண்டுமானால் ஒரு நீல்கமல் சேரை எடுத்துப் போடுங்கள்! த-வும் க-வும் அடுத்தடுத்து வந்தால் ‘தக’ என்கிறாற்போல் வருகிறது பாருங்கள். தேவையில்லாத திருக்குறள் வாசனை. அதற்குத்தான் சொல்கிறேன்.”

“அது ஒரு ஓரமாக இருக்கட்டும். கவிதைக்குப் பன்முகத்தன்மை கிடைக்கும்.”

“வேண்டாம் என்றால் வேண்டாம்தான்.”

“சரி, உங்கள் விருப்பம். இந்த வரி நன்றாக வந்துவிட்டது. ஆனால் தேவையில்லாமல் “அ”விற்குப் புள்ளி வைத்திருக்கிறீர்கள். டெலீட் செய்யுங்கள். இல்லையென்றால் அந்த எழுத்தை படிக்க சிரமப்படுவார்கள். மற்ற எழுத்துகளில் கவனம் செலுத்த முடியாமல் ஆகிவிடும்.”

“அது புள்ளி அல்ல. கறை. பேப்பரிலேயே இருக்கிறது. கவிதைக்கு வருவோம்.”

“அட இருங்கள்… கவிதை பதினோரு வரிகளாக இருக்கிறதே… அதைப் பத்தாக்குங்கள் அல்லது பன்னிரண்டாக்குங்கள். அதென்ன பதினொன்று?”

“அட விடுங்கள் சார். பதினொரு வரி கவிதையே நான் எழுதியது கிடையாது. இருந்துவிட்டுப் போகட்டுமே, என்ன இப்போது? கவிதையில் போய் யாராவது வரிகளை நீக்குவார்களா?”

“சார், எல்லா வரியும் முக்கியமானது மாதிரித்தான் தெரியும். அதற்குத்தான் இறைவன் ஒப்பீடு என்கிற விஷயத்தைப் படைத்திருக்கிறான். எல்லா வரிகளையும் கம்பேர் செய்து இருப்பதிலேயே ஆகக்குறைந்த முக்கியத்துவம் உள்ள வரியைத் தூக்கிவிடுங்கள். அல்லது இருப்பதிலேயே ஆகமுக்கியமான வரி ஒன்றை சேர்த்து பன்னிரண்டு வரிகளாக்குங்கள். இந்த வரி பாருங்கள் – ”

“அதைத் தொடாதீர்கள். அந்த வரி இருந்தால்தான் கவிதையே களைகட்டுகிறது.”

“சரி, வைத்துக்கொள்ளுங்கள். இந்த இடத்தில் ‘ளு’ வருவது நன்றாகவா சார் இருக்கிறது?”

“அது யூனிகோடு எழுத்துருவின் பிரச்சினை. அச்சில் அமுதாவிலோ கம்பனிலோ வரும்.”

“அதற்காக? என்னைக் கேட்டால் கடினமான எழுத்துகள் ஐம்பது வார்த்தைகளுக்கு ஒருமுறைதான் வர வேண்டும். அதைக் கூட ள், உ என்று பிரித்து எளிதாக்கிவிடலாம்.”

“ஏன், வாசகர்களே பொங்கித் திங்கவா? நான் சொல்கிறேன் கேளுங்கள் – எழுத்துரு மாறினால் கவிதையின் தொனியே மாறும். இந்தக் கவிதையை கம்பனில் படித்தால் போன் செய்து பாராட்டுவீர்கள். அதே அமுதாவில் படித்தால் அந்தப் பத்திரிகைக்கு மொட்டைக் கடிதம் போடுவீர்கள்.”

“இதை இப்படியே விட்டுவிடுவோம். பதினோரு வரிகள் இருக்கட்டும் என்கிறீர்கள். அதுதான் உறுத்துதலாக இருக்கிறது.”

“கிடக்கட்டும். உங்களுக்காக அடுத்ததில் பதினோராவது வரியைத் தவிர்க்கிறேன். இப்போது வேறு வேலை பார்ப்போம். தமிழ் வாழ்க.”

“வாழ்க தமிழ்.”

Tags: , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar