பாலம்

in சிறுகதை, புனைவு, மொழியாக்கம்

(ஜெர்மன் மொழிச் சிறுகதை)

ஹைன்ரிஷ் போல்*

என் கால்களை எப்படியோ ஒட்டி சரிசெய்து, உட்கார்ந்து பார்க்கிற வேலை ஒன்று கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் புதிதாகக் கட்டியிருக்கும் பாலத்தை எத்தனை பேர் கடந்து போகிறார்கள் என்று எண்ணுவதுதான் என் வேலை. தங்கள் திறமையான பணி பற்றிப் புள்ளிவிவரங்களோடு தகவல் பதிவு செய்வதில் அவர்களுக்கு அப்படியொரு போதை கிடைக்கிறது. ஒரு சில இலக்கங்களில் ஆன அந்த அர்த்தமற்ற பூஜ்யம் அவர்கள் தலைக்கு ஏறிவிடுகிறது. அதே சமயம் நாள் முழுக்க, ஒரு நாள் முழுக்க என் வாய் சத்தமில்லாமல் கடிகார முள் போல அசைந்துகொண்டிருக்கிறது, ஒவ்வொரு எண்ணாக சேர்த்துக்கொண்டு. பிறகு ஒவ்வொரு மாலையும் நான் அவர்களிடம் வெற்றிகரமான எண்ணிக்கை ஒன்றை சமர்ப்பிப்பேன்.

அந்தந்த நாளில் நான் செய்த உழைப்பின் பலனை அவர்களிடம் கொடுக்கும்போது பூரித்துப் போய்விடுகிறார்கள். எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அதற்கேற்ப அவர்கள் புன்னகை பெரிதாக இருக்கிறது. இரவு தூங்கப் போகும்போது அவர்கள் தங்களைப் பாராட்டிக்கொள்வதில் காரணம் இருக்கிறது. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பாதசாரிகள் அவர்களுடைய புதிய பாலத்தைக் கடந்து போகிறார்கள்…

ஆனால் அவர்களுடைய புள்ளிவிவரங்கள் எல்லாம் தவறு. சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது, இருந்தாலும் அதெல்லாம் தவறு. நான் நம்ப முடியாத ஒரு ஜென்மம். நேர்மையே உருவானவனாக என்னைக் காட்டிக்கொள்வதில் எனக்கு ஒரு சிரமமும் இல்லை என்பது வேறு விஷயம்.

அவ்வப்போது ஒரு பாதசாரியை கணக்கில் சேர்க்காமல் ரகசியமாக நழுவவிடுவது எனக்கு சந்தோஷம் கொடுக்கிறது. ஆனால் பிறகு அவர்கள் பாவம் என்று நினைத்து ஒரு சில பேரை எண்ணிக்கையில் கூட சேர்த்துக்கொள்கிறேன். அவர்கள் சந்தோஷம் என் உள்ளங்கையில்தான் இருக்கிறது. நான் மோசமான மனநிலையில் இருக்கும்போது, என் சிகரெட்களையெல்லாம் புகைத்துத் தள்ளிய பிறகு அவர்களுக்கு சராசரி எண்ணிக்கையைத்தான் தருகிறேன். சில சமயம் சராசரியைவிடக் குறைவாகவே தருகிறேன். இறக்கை கட்டிப் பறப்பது போல் நல்ல மனநிலையில் இருக்கும்போது என் தாராள குணத்தைக் காட்டி ஐந்து இலக்க எண்ணிக்கை ஒன்றைத் தருகிறேன். அதைப் பார்த்து அவர்கள் ஒரேயடியாகக் குஷி ஆகிவிடுகிறார்கள்! நான் எண்ணிய தாளைக் கையிலிருந்து பிடுங்குகிறார்கள். அவர்களது கண்கள் மகிழ்ச்சியில் மின்னுகின்றன. என் முதுகைத் தட்டிக்கொடுக்கிறார்கள். உண்மை தெரியாமல் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்! அப்புறம் அவர்கள் பெருக்குகிறார்கள், வகுக்கிறார்கள், சதவீதத்தைக் கணக்கிடுகிறார்கள்… இன்று ஒரு நிமிடத்தில் எத்தனை பேர் பாலத்தைக் கடந்தார்கள் என்றும் இன்னும் பத்து வருடங்களில் எத்தனை பேர் பாலத்தைக் கடந்திருப்பார்கள் என்றும் கண்டுபிடிப்பார்கள். அவர்களுக்கு எதிர்காலக் கணக்கில் ஒரு காதல். எதிர்காலக் கணக்கு போடுவதுதான் அவர்களுடைய விசேஷத் திறமை – இருந்தாலும் இந்த மொத்த விவகாரமும் கேலிக்கூத்துதான் என்று நினைக்கும்போது எனக்கு வருத்தம் ஏற்படாமல் இல்லை.

என் சின்ன தேவதை பாலத்தைக் கடக்கும்போது (ஒரு நாளில் இருமுறை கடக்கிறாள்) என் இதயத் துடிப்பு நின்றுவிடுகிறது. ஓயாமல் துடித்துக்கொண்டிருக்கும் என் இதயம் அவள் திரும்பி சாலைக்குள் நுழைந்து தொலைந்துபோகும் வரை ஸ்தம்பித்து நிற்கிறது. அந்த சமயத்தில் அந்தப் பக்கம் வருபவர்கள் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை. அந்த இரண்டு நிமிடங்கள் என்னுடையவை, எனக்குச் சொந்தமானவை. அவற்றை யாரும் என்னிடமிருந்து பறித்துக்கொள்ளப் போவதில்லை. ஒவ்வொரு மாலையும் அவள் தன் ஐஸ்க்ரீம் பார்லரிலிருந்து திரும்பி வந்து தொலைவிலிருந்து நடந்து வந்து, எண்ணிக்கொண்டே இருக்க வேண்டிய என் வாயைத் தாண்டிப் போன பிறகுதான் என் இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பிக்கிறது. அவள் என் பார்வையிலிருந்து தொலைந்து போகும் வரை நான் எண்ணுவதைத் தொடங்குவதில்லை. அந்த நிமிடங்களின்போது என் காணாத கண்களிலிருந்து தப்பித்த அதிர்ஷ்டசாலிகள் என் புள்ளிவிவரங்களின் மூலம் அமரத்துவம் பெற மாட்டார்கள்: அவர்கள் நிழல் மனிதர்கள், நிழல் மனுஷிகள், எதிலும் சேராத பிராணிகள்; எதிர்காலக் கணக்கின் புள்ளிவிவர அணிவகுப்பில் அவர்களுக்கு அனுமதி இல்லை.

நான் அவளைக் காதலிக்கிறேன். அதைச் சொல்லவே தேவையில்லை. ஆனால் அவளுக்கு அதைப் பற்றிக் கொஞ்சம்கூடத் தெரியாது. அவள் கண்டுபிடிக்காமலே இருந்தால் நன்றாக இருக்கும். என் புள்ளிவிவரக் கணக்குகளில் அவள் என்னென்ன ரகளைகளை ஏற்படுத்துகிறாள் என்பது பற்றி அவளுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடக் கூடாது. அவள் ஒரு சந்தேகமும் இல்லாமல், அப்பாவியாய் அந்த நீண்ட பழுப்புக் கூந்தலோடும் மென்மையான பாதங்களோடும் அமைதியாக, சலனமின்றி தன் ஐஸ்க்ரீம் பார்லருக்கு நடந்து போக வேண்டும்; அவளுக்கு நிறைய டிப்ஸ் கிடைக்க வேண்டும். இதுதான் என் ஆசை. நான் அவளைக் காதலிக்கிறேன். நான் அவளைக் காதலிப்பது அப்பட்டமாகவே தெரிய வேண்டுமே.

நான் ஒழுங்காக வேலை செய்கிறேனா என்று சில நாட்களுக்கு முன் அவர்கள் சோதித்துப் பார்த்தார்கள். தெருவில் எனக்கு நேரெதிரில் உட்கார்ந்து பாலத்தைக் கடக்கும் கார்களை எண்ணும் என் கூட்டாளி பல முறை எச்சரித்தான். அந்த நாள் நான் கண்குத்திப் பாம்பு போல் கவனித்து எண்ணித் தீர்த்தேன். பித்துப் பிடித்த மாதிரி எண்ணினேன் நான்; எந்த ஸ்பீடாமீட்டரும் என்னை ஜெயித்திருக்க முடியாது. தலைமை புள்ளிவிவர அதிகாரியே தெருவின் மறுமுனையில் ஒரு மணிநேரம் நின்று பார்த்தார். பிறகு அவர் கணக்கோடு என் கணக்கை ஒப்பிட்டார். என் கணக்கில் ஒன்று மட்டும்தான் குறைந்தது. என் சின்ன தேவதை கடந்து சென்றிருந்தாள். நான் உயிரோடு இருக்கும் வரை அந்தச் செல்லக் குழந்தையை அவர்களுடைய எதிர்காலக் கணக்கிற்குக் கொத்திக்கொண்டு போவதை நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் என் சின்ன தேவதையை எடுத்துப் பெருக்கி, வகுத்து, அர்த்தமில்லாத ஒரு சதவீதமாக மாற்ற விட மாட்டேன். அவளைத் திரும்பியே பார்க்காமல் தொடர்ந்து எண்ண வேண்டியிருந்தது இதயத்தில் ரத்தம் கசியவைத்தது. தெருவில் எதிர்ப்பக்கம் கார்களை எண்ண வேண்டியிருக்கும் என் நண்பனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். என் வேலையே, வாழ்க்கையே போயிருக்க வேண்டியது.

தலைமை புள்ளிவிவர அதிகாரி என்னைத் தோளில் தட்டி, நான் ரொம்ப நல்ல மாதிரி, நம்பிக்கைக்குரியவன், விசுவாசமானவன் என்றெல்லாம் சொன்னார். “ஒரு மணிநேரத்தில் ஒன்றே ஒன்றை மட்டும் தவறவிடுவதால் எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவிடாது. நாம் எப்போதுமே தவறுகளுக்குக் கொஞ்சம் இடம் விடுகிறோம். உன்னைக் குதிரை வண்டிகளுக்கு மாற்றல் செய்ய விண்ணப்பிக்கப்போகிறேன்” என்றார் அவர்.

குதிரை வண்டிகள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு செய்யலாம். அதில் ஒன்றுமே இல்லை. ஒரு நாளில் இருபது, இருபத்தைந்து குதிரை வண்டிகள்தான் வரும். அரை மணிநேரத்திற்கு ஒரு முறை மனத்தில் குறித்துவைத்துக்கொள்ள வேண்டும் – எவ்வளவு சுலபம்!

குதிரை வண்டிகளை எண்ணுவது அட்டகாசமான வேலை. நான்கு மணி முதல் எட்டு மணி வரை குதிரை வண்டிகளுக்குப் பாலத்தைக் கடக்க அனுமதி இல்லை. அந்த சமயத்தில் நான் ஐஸ்க்ரீம் பார்லருக்கு நடந்து போகலாம்… அவள் அழகைக் கண்களால் குடித்துத் தீர்க்கலாம் அல்லது அவளுடன் அவள் வீடு வரை பாதி தூரம் நடந்து போகலாம், என் சின்ன, கணக்கில் சேர்க்கப்படாத தேவதையுடன்…


* Heinrich Böll

ஆங்கில மொழிபெயர்ப்பு: Leila Vennewitz.

ஆங்கிலவழி மொழியாக்கம்: பேயோன்

Tags: , , , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar