ஒரு குட்டிக் கதை

in சிறுகதை, புனைவு

ஒரு ஊரில் என்னைப் போல ஆனால் வேறேதோ பெயர் தாங்கியதொரு எழுத்தாளர் இருந்தார். ஒரே வித்தியாசம் அவர் கண் பார்வை தெரியாதவர். அவரால் வாழ்க்கையில் எதையுமே பார்க்க முடியாது. அவர் ஒரு பெரிய சிறுகதையை ஒரே அமர்வில் தட்டச்சு செய்து முடித்துவிட்டார். நண்பரிடம் கருத்து கேட்டபோதுதான் அவருக்குத் தெரிந்தது. தமிழ் தட்டச்சுக்கு மாற்றும் toggle சுருக்குவழி விசையைத் தட்டச்சு செய்ய மறந்து முழுக் கதையையும் அடித்திருக்கிறார். ஆகவே கதைக்கு பதிலாக அதன் தட்டச்சு விசைத்தட்டல்கள் (keystrokes) மட்டுமே தட்டச்சு ஆகியிருக்கின்றன. கதை முழுவதுமே இப்படி இருக்கும்:

Flwhd h’fkdk cg’fkfJle. ;fJgklw/w bf’gUdkNd. ~jg cgBg vebnw/s Fvdl jrlf/fnd ZBglfVend Zhdh’f Fjgkdkgcd? GnkfVd ;zjghdhgkNd vcdcrlg hJkdkelg?

எழுத்தாளருக்கு இதை அப்படியே பத்திரிக்கைக்கு அனுப்பினாலென்ன என்று தோன்றியது. நண்பருக்கும் அது நல்ல யோசனை. படிப்பவர்கள் கதையைப் பார்த்து மறுதட்டச்சு செய்தவாறேதான் அதைப் படித்தாக வேண்டும். பல்லாண்டு தட்டச்சு அனுபவமுள்ள வாசகர்கள் விசைப்பலகைப் பக்கமெல்லாம் போகாமல் கண்ணிட்டுப் படித்தாலே போதும்.

எழுத்தாளர் கதை கேட்ட பத்திரிகைக்குக் கதையைச் சிறு குறிப்போடு அனுப்பியதும் அது மன்னிப்புக் கோரலுடன் திரும்பி வந்தது. இன்னும் சில பத்திரிகைகளும் நெளிந்து கைவிரித்துவிட்டன. எந்தப் பத்திரிகையும் வெளியிடாததால் எழுத்தாளர் இதற்குத்தானே எல்லாமென்று அதைத் தனது இணையதளத்திலேயே வெளியிட்டுக்கொண்டார்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar