மூட்டைப்பூச்சி

in சிறுகதை

(இது நான் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய நாவலின் கதைச் சுருக்கம். சிறப்பாகவே எழுதிவிடுவது என உத்தேசம்.)

ஒரு ஊரில் ஒரு ஜெர்மன்காரன் இருக்கிறான். அந்த ஊரும் ஜெர்மனியில்தான் இருக்கிறது. இந்த ஜெர்மன்காரன் ஒரு பாங்கியில் வேலை பார்க்கிறான். ஒரு திங்கட்கிழமை காலை இந்த ஆள் தூங்கியெழுந்து பார்த்தால் பெரிய மூட்டைப்பூச்சியாக உருமாறியிருக்கிறான். உடனே பதற்றம் கவிகிறது. இருந்தாலும் வேலைக்குப் போக வேண்டிய தேவை இருக்காதோ என்கிற நப்பாசை அவனுக்குள் எட்டிப் பார்க்கிறது.

ஜெர்மன்காரன் படுக்கையில் இருந்த சாதாரண மூட்டைப்பூச்சிகள் இவனைக் கண்டு மிரண்டோடிவிடுகின்றன. மல்லாந்த நிலையிலிருந்து குப்புற நிலைக்கு மாறும் முயற்சியை இவன் சிரமேற்கொள்ளும்போது செய்யும் ரகளையில் வீட்டில் இருப்பவர்களுக்கு இவனுடைய திடீர் குட்டு உடைந்துவிடுகிறது. இவன் அம்மாவே பதறிப்போகிறாள். இதற்கு என்ன தீனி போடுவது? குடும்பத்தினர் கைபிசைய, ஜெர்மன்காரன் ஒரு வழியாகக் குப்புறக் கவிழ்கிறான்.

இப்போதைக்கு இதை யாரிடமும் சொல்லாமல் யாராவது நல்ல மந்திரவாதியைப் பார்க்கக் குடும்பத்தினர் முடிவுசெய்கிறார்கள். தங்களுக்கும் மூட்டைப்பூச்சிகளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் வெளியுலகில் காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் மறைமுகப் புழுக்கத்திலிருந்து மட்டும் நிறுத்தம் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் அதே ஊரில் இன்னொரு வீட்டில் இன்னொரு ஜெர்மன்காரன் மூட்டைப்பூச்சியாகிறான். பின்னர் இன்னொரு வீட்டில் ஒரு குடும்பத்தலைவி மூட்டைப்பூச்சி ஆகிறாள். அடுத்து ஒரு அழகான குழந்தை. இப்படியே ஒரு வாரத்திற்குள் அந்த ஊரில் பெரும்பாலோர் மூட்டைப்பூச்சி ஆகிறார்கள். ஒரு கட்டத்தில் அது வாடிக்கையாகிவிடுகிறது.

முதலில் சொன்ன ஜெர்மன்காரனுக்கு இரண்டாம் பாகத்தில் ஒரு அண்ணன் இருக்கிறான். இவன் மட்டும் உருமாறாமலே உள்ளான். ஊரில் எல்லோரும் உருமாறத் தொடங்கியதும் அண்ணனுக்கு ஒரு பயம் பிடித்துக்கொள்கிறது:- நாம் கடைசி வரை மாறாமலே இருந்துவிட்டால்? சமூகத்தின் கூட்டு அன்னியமாதல் இவனை மூட்டைப்பூச்சி ஆக நிர்ப்பந்தப்படுத்துகிறது. இவனென்ன வேண்டாம் என்றா சொல்கிறான்? மாற முடியவில்லையே!!

இது வரை ரொம்ப யோக்கியமாக என்னுடைய இந்த நாவலைப் படித்துக்கொண்டிருப்பவர்கள் இந்தக் கட்டத்தில் கதையில் ஆர்வமிழந்து ஒவ்வொருவராக எழுந்து போக ஆரம்பிக்கிறார்கள். கடைசியில் நாவலின் பிரதிகள் பாதி படித்த நிலையில் போட்டது போட்டபடி காற்று மட்டுமே பக்கங்களைப் புரட்டிக்கொண்டிருக்க தனியாகக் கிடக்கின்றன. படிக்க ஆள் யாரும் இல்லாதபோது கதை என்ன செய்யும்? அப்படியே நின்றுவிடுகிறது.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar