பிரசுரிக்கப்படாதது

in ஓவியம், புனைவு

‘திசை காட்டிப் பறவை’ நெடுங்கதைக்கு முதலில் எழுதிய கடைசி அத்தியாயமிது. வெளிவந்த அத்தியாயம் போலவே இதிலும் நெடுங்கதையின் அத்தியாயவாரியான சுருக்கத்தையே கடைசி அத்தியாயமாகத் தந்திருந்தேன். ஆனால் “பி அண்ட் சி” வாசகர்களுக்காக இந்த அத்தியாயத்தை எளிமைப்படுத்தித் தருமாறு பதிப்பாளர் கேட்கவே, நான் அவர்படி எளிமைப்படுத்தியதோடு சுருக்கியும் தந்தது அந்த நெடுங்கதையைப் படித்தவர்களுக்கு நினைவிருக்கலாம். இனி கடைசி அத்தியாயம்.

சேல்ஸ் பிரிவில் வேலைபார்த்த தங்கமான 31 வயது குமார் இருக்க சொந்தப் பிரச்சினைகளால் இரண்டு ஆண்டுகள் என்னால் எழுத முடியாமல் போய்த் திரும்ப எழுதத் தொடங்கியதும் குமாருக்கு 33 வயதாகிப் பணப் பிரச்சினை ஏற்பட்டபோது தெய்வாதீனமாக அதைத் தீர்க்கும் வண்ணம் குமாருக்கு பணக்காரப் பாகிஸ்தானியரான அவனது அப்பா அறிமுகமாக, அப்பா குமாருக்கு இருப்பது போல் எனக்கும் உண்டு என்பதால் இதற்கிடையில் என் அப்பாவைப் பார்க்க அப்பாவின் நண்பர் வந்து இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது என்னிடமிருந்து நானே பேனா இரவல் வாங்குகிற இழிநிலை ஏற்படுகையில் பேனா வாங்கப்பட்டபின் என்ன எழுதப்பட்டது என்றால் குமாரின் அப்பா பாகிஸ்தானியராக இருந்த காரணத்தால் அவனது இரண்டாவது தங்கைக்குத் திருமணம் அசாத்தியமாகிக்கொண்டிருந்த நிலையில் நான் அந்த அப்பாவைச் சீனராக மாற்றிக் குமாருக்கு மீளறிமுகம் செய்துவைத்ததும் குமார் ரஷ்யாவில் ஒரு புகையிலைக் கடைக்காரரின் மகளைக் கெடுக்கப் பார்த்து முடியாமல் திருந்தி அக்டோபர் புரட்சியை விளைவித்து நானோ குமாரோ மொட்டை மாடியில் சிந்தனையில் ஆழ்ந்து கிடக்க, குமாருக்குக் கண்ணாடி உடைந்தால் பிரச்சினை ஏற்படும் என்பதும் கிடக்க, குமாருக்கு நிழலுண்டா என்ற தத்துவக் கேள்விக்கு முன்கதைச் சுருக்கத்தில் இடமில்லாமல் செல்போன் வைத்திருக்கும் குமார், சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக 33க்கு மேல் வயதாக மறுத்து மூக்குள்ள ஒரே கலைப் படைப்பான ஒரு ஓவியத்தைத் தோற்றுவித்து தொடர்பான நிகழ்வாக நான் ஒருநாள் காலையில் எனது பாலிய கால ஓவிய ஆசிரியரைப் பார்த்தபோது நினைவுத் தோட்டத்தில் காரட், பாகற்காய், கத்தரிக்காய் விளைய இந்த நாவலைத் தானே எழுதுவதான பிரமையில் மூழ்கும் குமாரை ஆள்மாறாட்டம் செய்ய வேறு குமார் ஒருவன் முயல்வதை என்னைக் காதலிக்கும் ரிசப்ஷனிஸ்ட்டின் துணையுடன் முறியடித்து அவள் காதலை நிராகரிக்கும் நான் அவள் காப்பாற்றிய குமாரிடமே அவளைச் சேர்த்த பின் குமார் அவன் தெரு முனையிலுள்ள வீட்டில் ஏற்படும் திருட்டைக் கண்டு கொதித்தாலும் அடுத்த அத்தியாயத்திலேயே சாந்தலட்சுமியைக் காதலிக்கும்போது உதவ அவள் அண்ணன் கணேசு இல்லாமல் வருந்துகிறானா, அதோடு முடிந்தது கதை.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar