புதுமனை புகுதல்

in சிறுகதை, புனைவு

கடந்த இருவாரங்களாய் நான் பார்த்தறியாத என் நண்பர், மொழிபெயர்ப்பாளர் லார்டு லபக்குதாசைப் பார்க்க இன்று காலை அவர் வீட்டிற்குச் சென்றேன். காலை அவர் வீட்டில்தான் டிபன். லபக்குதாஸ் வீடு மாற்றியிருக்கிறார். “ஃப்ளாட் சிஸ்டம்”. நான் காலிங் பெல்லை அழுத்தியதும் அவர் வீடமைந்த இரண்டாம் மாடியினுடைய பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தார். குசலங்கள் விசாரிக்கப்பட்டன. வழி கண்டுபிடிக்க சிரமமாக இருந்ததா என்று லபக்குதாஸ் கேட்டார். அதற்கு நான் பதிலளித்துக்கொண்டிருக்கையில் லிஃப்டைப் பயன்படுத்திக் கீழே வந்துவிட்டிருந்தார். நாங்கள் பேசிக்கொண்டே அவர் வந்த வழியே திரும்பிச் சென்றார் என்னுடன்.

வீடு பார்வையாக இருந்தது. அவர் ஃப்ளாட்டில் லிஃப்ட் இருப்பதாக ஒரு தகவலை மேலே தந்திருக்கிறேன். எனக்கு இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை என்கிற மறைதொனியில் போகிறபோக்கில் லபக்குதாசின் பொருளாதார நிலையைச் சொல்லிவிட்டு நாசூக்காக நகரும் நுட்பமான விவரம் அது. சிறுகதை வடிவத்திற்கே உரிய ரகசிய ஆசிரிய கண்ணடிப்பு. இன்றைக்குச் சென்னையில் லிஃப்ட் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் வீடு வாடகைக்கு எடுப்பதென்றால் குறைந்தது ரூ. 12,000 மாத வாடகை தர வேண்டும். எந்த இளிச்சவாயனும் அதற்குக் குறைவாக வாடகை வாங்க மாட்டான். 200 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தக் கதையைக் கைக்கடிகாரத்திலோ மூக்குக் கண்ணாடி ஹோலோகிராம் திரையிலோ படிக்கப்போகிற வாசகனுக்கு இந்த நுட்பம் புரியாது. அவன் காலத்தில் குடிசைகளில்கூட லிஃப்ட் இருக்கலாம். என்ன, எதிர்காலம் என்பதால் லிஃப்ட் என்று சொல்லாமல் அறிவியல் புனைவுகளில் வருவது போல் செந்தமிழில் ‘மின்தூக்கி’ என்பார்கள். அல்லது ‘மேல்நகரி’ என்பார்கள். ஒரு தர்க்கப்படி, அடுக்குமாடி வைணவக் கோவில்களில் லிஃப்ட் இருந்தால் அதை ‘ஆழ்வார் திருநகரி’ என்றும் சொல்லக்கூடும். அவர்கள் இஷ்டம். கேள்வி கேட்க நாம் இருக்க மாட்டோம். ஆனால் நாம் வாழும் காலத்து வாசகனுக்கு இத்தகைய காலச் சார்புள்ள நுட்பங்கள் அவசியம். கவிதையில்கூட இந்த உத்தியைச் செய்கிறார்கள்.

எனக்குத் தெரிந்து லபக்குதாசுக்கு மூவாயிரத்தைநூறுக்கு மேல் வாடகை கொடுக்க முடியாது என்பது என்னுடைய அனுமானம். மனைவிக்கு சொத்து இருந்தது. ஆனால் வேலைக்குச் செல்பவர் அல்ல. மனைவி செத்தால்தான் லபக்குதாஸ் வீடு வாங்க வசதி வரும். நான்கூட ஒரு முறை ஹிட்ச்காக் பட பாணியில் பரஸ்பர மனைவி ஒழிப்பு யோசனையை விளையாட்டாக முன்வைத்தேன். அவர் அதை நிஜமென நம்பினாற்போல் காட்டிக்கொண்டு பதறி உடனே நிராகரித்தார். அதெல்லாம் சினிமாவில்கூட நடப்பதில்லையே என்று பொருமினார்.

வாடகை எப்படிக் கட்டுபடியாகிறது என்று கேட்டால் நான் வயிற்றெரிச்சலால் கேட்பதாகப் புரிந்துகொண்டுவிடுவார். வயிற்றெரிச்சலாகவே இருந்தாலும் அது அவருக்கு ஏன் தெரிய வேண்டும்? எனக்கு ப்ரைவசி வேண்டாமா? எப்போதாவது அவர் ‘சரக்கு’ சாப்பிட்டுவிட்டு வரும்போது வழியில் மடக்கிக் கேட்டால் சொல்லிவிடுவார். (இங்கே இன்னொரு நுட்பம்: ‘வழியில் மடக்கி’ என்று எழுதுவதால் நான் குடிப்பவனல்ல என்று உணர்த்துகிறேன். குடிப்பவனாக இருந்தால் நண்பரான அவருடன் குடிக்கப் போபவனாக இருப்பேனே.)

லபக்குதாஸ் முதல் முதலாகப் புதுவீட்டு இரண்டாம் மாடி பால்கனியிலிருந்து என்னைப் பார்த்தபோது “குட்மார்னிங் மிஸ்டர் பேயோன் சார். ஹவ் டு யு டு?” என்று காலையில் உற்சாகமாக வரவேற்றிருந்தார் (காலையில் நடந்ததை எழுதுகிறேன் என்றால் நான் எழுதுவது மதியமாக அல்லது மாலையாக இருக்கலாம்). புதிய ஜாகை தந்த குஷி என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் புதிதாக வேறு ஏதாவது சந்தோஷ செய்தி இருக்குமோ – விருது, வெளிநாட்டுப் பயண வாய்ப்பளிப்பு மாதிரி ஏதாவது – என்ற சந்தேகம் மனதை அரிக்கத் தொடங்கியிருந்தது. அவர் இரண்டிற்கும் தகுதியில்லாதவர் என்பது அரிப்பின் சுமையைத் தீவிரப்படுத்தியிருந்தது.

லபக்குதாஸ் வழக்கம் போல் என்னிடம் சோபாவைக் கைகாட்டாமல் நேராக டைனிங் டேபிள் முன்பு இருந்த நாற்காலியில் உட்காரவைத்தார். “தண்ணீர் 24 மணிநேரமும் வருமா?” என்றேன். அதற்கு அவர் பதில் சொல்கையில் நான் கண்களை அளைந்து வீட்டை அங்குலம் அங்குலமாய் அளாவிப் பார்த்தேன். புதிய வீடு. நல்ல மெட்டீரியலில் கட்டியிருந்தார்கள். மாதம் ஏழாயிரம் சம்பாதிப்பவர் லபக்குதாஸ். எப்போதாவது ‘சர்க்கரை வியாதி கேள்வித்தாள்’ என்கிற மாதிரி எதையாவது அவசரமாய் மொழிபெயர்த்துக் கொடுத்து ஒரு ஆயிரம், ஆயிரத்தைநூறு வாங்கி இரண்டு நாள் பிலிம் போடுவார். ஆனால் இது வேறேதோ தறுதலை கேள்வித்தாளை செய்து கொடுத்து சம்பாதித்த பணத்தில் கிடைத்த வாழ்வு போல் தெரிந்தது. எப்படியும் வெறும் இட்லி சாப்பிட்டுவிட்டு என்னிடம் அதையவர் சொல்லப்போவதில்லை. அவரின் பிரிய ஓல்டு மாங்க்தான் தீட்சை கொடுக்க வேண்டும்.

இட்லி வரும் வரை சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருந்தோம். இட்லி வந்ததும் பேச்சு மாறியது. ஒரு சிறுகதையில் “lying dormant” என்பதை லபக்குதாஸ் “தூக்கத்தில்கூடப் பொய் பேசுபவன்” என்று மொழிபெயர்த்திருந்தார். எனக்கு அந்தப் பொருளில் ஐயம் இருந்தது. “Lying dormantly” என்றால்தான் நீங்கள் (லபக்குதாஸ்) கூறும் அர்த்தம் அமையும் என்றேன் நான். அவரும் அதை மறுத்தார். இட்லி வந்ததும் சினிமா பற்றிப் பேச ஆரம்பித்தோம். இட்லி ஃபோர்ட்டீன் இட்லியைவிடக் கொஞ்சம்தான் பெரிதாக இருந்தது ஏமாற்றம். ஆனால் சரியாக வெந்திருந்தது. சாம்பார் நல்ல இழப்பீடு. அவர் பார்த்த ஏதோ ஜெர்மானியப் படம் அவருக்குப் பிடித்திருந்தது. சமீபத்தில் திருட்டு டிவிடிகளில் திரளும் பணம் தாவூத் இப்ராகிமின் ஜேபிக்குப் போவதாக ஒரு செய்தி படித்தேன். முப்பது ரூபாய் கொடுத்து கொரியப் படம் வாங்குகிறோம் என்றால் பயங்கரவாதத்திற்கு மொய் எழுதுவதாகும். நாளைக்கே நம்மூரில் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்கிறதென்றால் அந்த வெடிப்பில் சிதறும் தீப்பொறிகளில் எந்தப் பொறி என் பொறி என்று கவிதையாகக் கேட்டுக்கொள்ள முடியாது.

அதைப் படித்ததிலிருந்து பர்மா பஜாரில் எனது ஆஸ்தான டிவிடி கடையைக் கைவிட்டு (கடைக்காரர் பெயர்கூட அப்துல். என்றைக்காவது ‘அப்துல் என்கிற அப்துல்லா’ என்று பேப்பரில் போட்டோவுடன் செய்தி வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை) டாரண்டிற்கு மாறிவிட்டேன். இதை லபக்குதாசிடம் அவர் எல்லாம் தெரிந்த பாவனை தலையாட்டலுடன் கேட்க பகிர்ந்துகொண்டேன். எதிர்காலத்தில் தாவூத் ஆபிரகாம் மாதிரி தீவிரவாதிகள் ஷாப்பிங் மால்களையும் காபி கடைகளையும் நிறுத்திவிட்டு அபார்ட்மென்ட்களைத்தான் குறிவைப்பார்கள் என்றேன். அவருக்குப் புரியவில்லை.

*

குறிப்பு: லபக்குதாஸின் ட்விட்டர் அடையாளம் @labakdoss. அவர் இப்போது ட்வீட் செய்வதில்லை.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar