பத்து காதல் கவிதைகள்

in கவிதை

1

நகத்தைக் கடிக்கும்போது
நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்!
அற்ப வன்முறையையும் அழகாக்கிவிடுகிறாய்.

2

ஒரு பேருந்துக் குலுங்கலில்
நம் உதடுகள் சந்திக்கின்றன
தற்செயல் ஸ்பரிசமாயிருந்தாலும்
அதிகாரி நீ அங்கீகரித்தால்
அது முத்தமாகும்.

3

உன்னை விரும்பித் தொட்ட பின்பு
வேறெந்தப் பெண் மேலும்
தவறிப்போய்கூடப் படுவதாகத்
திட்டமில்லை.

4

அழகாக இருப்பதுதான்
உன் முழுநேர வேலை போல்
நடந்துகொள்கிறாய்.

5

உன் பார்வை
சிலருக்கு உயிர் தருகிறது
சிலரைக் கொல்கிறது
ஆக மொத்தத்தில்
செத்தது சென்சஸ் துறை.

6

சிகரெட்டைப் பொருத்திக்கொள்கிறேன்
வேண்டாமென உதட்டிலிருந்து பிடுங்கி எறிகிறாய்
இன்னொன்றை வைத்துக்கொள்கிறேன்
அதையும் எறிகிறாய் பிடுங்கி
இப்படி ஒரு முழு பாக்கெட்டையும்
நீயே காலி பண்ணுகிறாய்.

7

உன் கொலுசுச் சத்தமும்
உன் குரலில் ஒரு பகுதியாகவே
மாறிவிட்டது.

8

என்னைப் பற்றிய உன்னையும்
உன்னைப் பற்றிய என்னையுமே
நாம் காதலிக்கிறோம்.

9

உன் ஓரக்கண் பார்வைகளுக்கு
ஒரு அகராதி போடவாவது
நான் ஓவியனாக வேண்டும்.

10

உன்னை நான் நினைக்கும்போதெல்லாம்
காதலைக் கண்டுபிடித்தவன்
கல்லறையில் புன்னகைத்துப் புரண்டு படுக்கிறான்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar