ஒரு வேண்டுகோள்

in பிற

அன்பின் வாசகர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். நான் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கிய புதிதில் நான் பார்த்த திரைப்படங்களாக ஃபேஸ்புக்கில் பட்டியலிட்டுக்கொள்ள படப் பெயர்களைத் தருமாறு வேண்டுகோள் விடுத்ததும் உங்களில் பெரும்பாலோர் படப் பெயர்களை எனக்கு அளித்து அவற்றை சேர்த்ததும் உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம். அதை விக்கிபீடியா அளவில் பிரம்மாண்டமாக செய்யத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் தவிர்க்கவியலாத காரணங்களால் அதை மேற்கொண்டு தொடர முடியவில்லை.

2012 சென்னை புத்தகக் காட்சி எனது இன்னொரு கண்ணாகிய புத்தகங்களைப் பற்றிய அதே மாதிரி ஆசையைக் கிளறியிருக்கிறது. இந்த முறை புத்தகக் காட்சியில் பலருடன் பேச வேண்டியிருந்ததால் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க நேரமில்லை. அதனால் நான்கைந்து புத்தகங்களையே வாங்க முடிந்தன. அவற்றையும் இணையத்தில்தான் வாங்க முடிந்தன. புத்தகக் காட்சியில் புத்தகமே வாங்கவில்லை என்றால் என்னை ஆதர்சமாகக் கொண்ட இளம் வாசகர்கள் யாராவது ஏமாந்து தீக்குளித்தாலும் ஆச்சரியமில்லை. என்னால் இவர்கள் சாவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆதலால் வாசகர்களாகிய நீங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியலை எனக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த நூல்கள் நீங்கள் வாங்கிய புத்தகங்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியம்கூட இல்லை. புத்தகக் காட்சியிலோ நடைபாதைக் கடைகளிலோ கண்ணில் பட்டு அரைகுறையாய் நினைவில் தங்கிய புத்தகங்களாக இருந்தாலும் போதும். நீங்கள் அனுப்பும் புத்தகப் பட்டியல்களை நான் பரிசீலித்து என் ரசனைக்கு ஒத்துப்போவது போல் தெரியும் புத்தகங்களை நான் வாங்கியதாகப் பட்டியலிட்டுக்கொள்வேன். இதன் தார்மிகம் குறித்துக் கேள்வியெழுப்ப விரும்பும் அன்பர்களுக்கு: பார்க்காத படங்களை பார்த்ததாக சொல்லிக்கொள்ளும் தேவை இருப்பது வேறு, இனிமேல்தான் படிக்கவே போகும் புத்தகங்களை வாங்காமலே வாங்கியதாகச் சொல்லிக்கொள்ளும் அவசியம் ஏற்படுவது வேறு.

புத்தகப் பட்டியல்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். குறிப்பு:- முழு புத்தகங்களை யாரும் அனுப்ப வேண்டாம். புத்தகத்தின் பெயர்களை மட்டும் அனுப்பவும். சென்ற ஆண்டு படப் பெயர்களை கேட்டபோது சிலர் டிவிடிகளை அனுப்பியிருந்தார்கள். ஒருவர் ஒரு முழு இரானிய திரைப்பட யூனிட்டினரை அஞ்சல் செலவின்றி என் வீட்டிற்கு அனுப்பியிருந்ததால் நான் தண்டம் கட்ட வேண்டியிருந்தது.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar