இன்றைய பொழுது

in சிறுகதை

காலையிலிருந்து ஜன்னலோர மேஜை மேல் ஒரு அன்ரூல்டு நோட்டுப் புத்தகம் கிடந்தது. ஸ்டேஷ்னரி கடையில் எட்டு ரூபாய் வீசியெறிந்தால் கிடைக்கும் 192 பக்க நோட்டுப் புத்தகம் அது. அங்குமிங்கும் நகராமல் அசையாமல் அதனுலகத்தில் ஆழ்ந்து கிடந்தது அந்த நோட்டுப் புத்தகம். நாள்பட்ட மனிதப் பயன்பாட்டின் அடையாளமாகச் சில தாள்கள் தனித்தனியாகவும் சக தாள்களோடும் லேசாக உடலை வெளியே நீட்டிக்கொண்டிருந்தன. வரிசையை மீறித் தெரிந்த தாள்களின் விளிம்பில் பால் பாயின்ட் பேனாவின் எல்லை மீறல்கள். மேற்பகுதியில் பைண்டிங் உரிந்து மெல்லிய நூல்நுனிகள் வெளிப்படத் தொடங்கியிருந்தன. நிறம் மங்கிக் கீறல் விழுந்த பூக்களைச் சுமந்த அட்டையின் இரு வெளிமுனைகள் மடங்கியிருந்தன. ஜன்னல் வழியாக வந்திருந்த வெயில் சூரியகாந்திகளை சூடாக்கிக்கொண்டிருந்தது. அந்த இடத்தையே தூசு சாம்ராஜ்யமாகக் காட்டியது புகுவெயில்.

அருகிலிருந்த பேப்பர் வெயிட்டிடம் மணி 12.30 என்றது குமாரின் கைக்கடிகாரம். குமார் மணிக்கட்டை உயர்த்திப் பார்த்து அதைத் தெரிந்துகொண்டான். ஒரு மணிப் பேருந்திற்கு இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும். – என்று நினைத்தானே தவிரக் கிளம்பவே வரவில்லை அவனுக்கு மனம். இந்த நோட்டுப் புத்தகம், பேப்பர் வெயிட், பால்பாயின்ட் பேனா ஆகிய இத்யாதிகளோடு இத்யாதியாய் நாமும் இருந்துவிட்டால் எத்தனை சுமைகள் மிச்சம் என்று பெருமூச்சு விட்டான். வெயிலும் நிழலும் மாறிமாறிப் படிந்த காலித் தெருக்களின் மதிய மந்தம் அவன் ஏறப்போகும் பேருந்தில் பிரதிபலிக்காது. கூட்டம் நெருக்கித் தள்ளும். சொந்த முயற்சியால் இம்மிகூட அசைய முடியாத நிலையில் ஒரு மணிநேர கடும் உடற்பயிற்சி பெறும் அனுபவத்தை பேருந்து அவனுக்குத் தந்துவிடும். அந்தப் பேருந்தில் ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து முடித்துவிட்டு தன் நிறுத்தத்தில் தன்னை உமிழ்ந்துகொண்ட பின் இருக்கிறது அலுவலகத்தில் பணிபுரி படலம்.

பேப்பர் வெயிட்டிற்குள் ஒரு கடலும் அதில் ஒரு பனி மலையும் இருந்தன. மலையின் அடிவாரத்தில் இருந்த கரையில் ஐந்து பெங்குவின்களும் ஒரு நீர் நாயும் குழுமியிருந்தன. அவை என்ன பேசினாலும் சத்தம் கண்ணாடியைத் தாண்டி வெளியே வரப்போவதில்லை. அலுவலகத்திற்கு போன் போட்டு உடல்நிலை சரியில்லை, இன்று வரவில்லை என்று சொல்லத் தோன்றியது குமாருக்கு. எந்த ஒரு பொய்மையையும் அவன் குரலை வைத்தே மேலாளர் கண்டுபிடித்துவிடக்கூடியவர். போதாக்குறைக்கு பியூன் யாரையாவதும் அனுப்புவார். இன்றைக்கு என்னென்ன வேலை? இன்றைக்குச் செய்ய வேண்டிய வேலை ஒன்று இருந்தது. அதை இன்றைக்குச் செய்யாமல் விட்டால் உலகம் அழிந்துவிடாது. அழிவதாக இருந்தால் இளவரசி பெண் பார்ப்பு விழாவிற்கு திடீர் விடுமுறை போட்டபோதே அழிந்திருக்க வேண்டும். அற்ப விஷயங்களுக்காக அழிந்து என்ன பயன்?

தன் அளவைவிடப் பெரிதான பூட்ஸை ஒற்றைக் காலில் அணிந்துகொண்டு நீந்தப் பார்க்கும் வாஷ்பேசின் போலக் கதவருகில் காரை பெயர்ந்திருந்தது. மனிதன் உருவாக்கிய தற்செயல் மேகம் போலப் பல வாரங்களாக வடிவம் மாறாமலே இருந்தது காரை. இந்தத் தொலைவிலிருந்து பார்க்கக் கறுப்பா சிவப்பா என்று தெரியாத ஒரு எறும்பு, காரைப் பிரதேசத்தை கவனமாகத் தவிர்த்து மொத்தப் பரப்பையும் சுற்றிவளைத்துச் சென்றுகொண்டிருந்தது. நேர்ப் பாதையில் செல்லத் தேவையில்லாத அளவிற்கு அவசரம் இல்லை போல; அவசரம் எல்லாம் நமக்குத்தான் போல என்று விரக்தியுடன் நினைத்துக்கொண்டான் குமார்.

அவனுக்கு ஒன்று புரியவேயில்லை. ஒரு விலங்கு என்ற முறையில் உயிர் பிழைத்திருப்பதுதானே மனிதனின் வேலை? காட்டில் வேட்டையாடி உண்டபோது அவன் நன்றாகத்தானே இருந்தான்? நாகரிகம் மனித வாழ்க்கைக்கு அப்படி என்ன மதிப்புக் கூட்டலைச் செய்துவிட்டது? சக்கரத்தையும் நெருப்பையும் கண்டுபிடித்தது போதாதா? எதற்காக இத்தனை கட்டிடங்கள், வாகனங்கள், இயந்திரங்கள், கோடானுகோடி சிக்கல்கள்? மனித அறிவின் உன்னதம் என்று சொல்லிக்கொண்டு ஒரு ராட்சத அபத்தத் தொழிற்சாலையை முடுக்கிவிட்டுவிட்டோம். விளைவு? மற்ற விலங்குகள் மனிதனை நம்பிச் சிக்கலில்லாது வாழ்க்கை நடத்துகின்றன. நாம்தான் ஆறறிவு என்ற பெயரில் அறிவுக்கொன்றாக அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறோம். வேலியில் போகிற ஓணான் நமக்குள்தான் உறங்கிக்கொண்டிருந்திருக்கிறது. நல்ல கூத்து இந்த அறிவு.

குமாருக்கு சக ஊழியர்கள் அனைவரும் மரவுரி தரித்துத் தன்னுடன் காட்டில் வேட்டையாடிக்கொண்டிருப்பது போன்ற காட்சி மனதில் தோன்றியது. சுடிதாரிலேயே சுண்டியிழுக்கும் இளவரசி மரவுரியில் கிறங்கடித்தாள். மற்றவர்களின் மும்முரம் கூர்தீட்டிய கம்பைக் கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு கரடியைப் பின்தொடர்வதிலேயே இருந்தது. வழக்கமாக ஏதாவதொரு சாக்கு வைத்துக்கொண்டு அவளுடன் பேச்சு வளர்த்தும் சுகுமாரே காலடிச் சத்தம் எழுப்பக்கூடாததில் உறுதியாக இருந்தான். இளவரசி அதே கோலத்தில் முன்னேறிச் சென்றாள், ஆனால் குமாரின் கவனமெல்லாம் அவள் மேல்தான் இருந்தது. அவன் அவளை வெவ்வேறு உடைகளில் கற்பனை செய்து பார்த்திருக்கிறான் என்றாலும் மரவுரி அவனுக்குப் புதிது. குமார், இளவரசி, சுகுமார், – இல்லை, இளவரசி, குமார், சுகுமார், – லிங்கேசன் சார், வேலு சார் எல்லோருமாகச் சேர்ந்து கரடியை அடித்தாயிற்று. அதை நெருப்பில் வாட்டி சாப்பிட்டுப் பசியும் ஆறியாயிற்று. அடுத்து என்ன? சுகுமார் இளவரசியை அணுகுகிறான். இளவரசி உறுமிச் சபித்து அவனை விரட்டுகிறாள். லிங்கேசன் சாரும் வேலு சாரும் நிஜத்தில் தமது வயது காரணமாகக் கல்பனாவைப் பொருட்படுத்தாதவர்கள். ஆனால் ஒரு அழகிய இளம்பெண் மரவுரியில் இருந்தால் எந்த நடுத்தர வயது ஆண்களுக்குத்தான் சபலம் ஏற்படாது? திருமணம் நிச்சயமாகிவிட்ட பாதுகாப்பு, கற்காலத்தில் செல்லாது. வேட்டையாடி வேட்டையாடி உடல் இந்த இருவருக்கும் கல்லாகியிருந்தது. ஒரே சமயத்தில் இருவரையும் கையாள்வது கடினம்… குமாருக்கு இந்தச் சிந்தனையோட்டம் கசப்பூட்டியது. அநாவசிய நினைவுகளைக் கிளறியது. இன்றைக்கு அலுவலகத்திற்குப் போகாமல் இருக்க இன்னொரு அரூபக் காரணம் கிடைத்தாற்போல் ஆனது.

ஜன்னல் சட்டத்து ஆணியில் மாட்டியிருந்த சைக்கிள் சாவி எந்த உணர்ச்சியுமின்றி குமாரை வெறித்தது. கடலில் ஊறும் பனி மலையை மேஜை மேல் வைத்து உருட்டத் தொடங்கினான் குமார். ஒரு பெங்குவினின் மண்டையிலிருந்து ஆகாயம் வரை விரிசல் விரிந்திருந்ததை அப்போதுதான் கவனித்து எரிச்சலடைந்தான். இது எப்போது? விடுமுறை கிடைக்காத சாத்தியங்கள் சட்டெனக் குறைந்துவிட்டது போலிருந்தது… ஏதோ திடீர் வாசனை. மண். பலமாகத் தூறிக்கொண்டிருந்தது. வானமும் அதனால் அறையும் இருண்டிருந்ததை அவன் கவனித்திருக்கவில்லை. வேலைக்குச் செல்ல விடாத சோம்பல் வெறுப்பு, மழையால் வலுத்தது. நாட்களை எண்ணினான் குமார். ஞாயிறு வருவதற்கு இன்னும் இரு நாட்கள். தன் மொத்த வாழ்க்கையுமே ஞாயிறுகளை நோக்கிய தளர்ந்த நடையாக அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை இளவரசிக்குத் திருமணம் நிச்சயமாகாமல் இருந்திருந்தால் அலுவலகம் இவ்வளவு கசக்காதோ என்று கேட்டுக்கொண்டு உடனே அந்தக் கேள்வியை நிராகரித்தான். இளவரசியுடனான உறவு, வேலையுடன் இருந்த உறவு போல் தொடக்கத்திலேயே சபிக்கப்பட்டிருந்தது. நாம் இப்போது எதிர்கொண்டுவருவது வாழ்க்கை. வாழ்க்கையிலிருந்து யாரையும் யாராலும் காப்பாற்ற முடியாது. சக அறைவாசிகளைப் பொறாமைப்படவைத்த பிச்சை சம்பளத்தையும் தாண்டி வேலை இருப்பதும் ஒன்று, இல்லாததும் ஒன்று என்னும் தத்துவ மனப்பான்மைக்குத் தட்டுத் தடுமாறி வந்து சேர்ந்துவிட்டதாக நினைத்துக்கொண்டான் குமார்.

“பழைய பேப்பர், இரும்பு சாமான்!”

அமைதிக்குள் தலையை நுழைத்த கூக்குரலைக் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தான் குமார். இருட்டியது இருட்டியதாகவே இருந்தது. ஆனால் தூறல் நின்றுவிட்டிருந்தது. தெருவில் தனியாக வாடிக்கை வியாபாரி பாலிதீன் உறையைத் தலையில் கவிழ்த்துக்கொண்டு தள்ளுவண்டியை சாவகாசமாகத் தள்ளிச் சென்றுகொண்டிருந்தான். மழை நனைத்த தரையில் தள்ளுவண்டி இரும்புகள் தடதடக்க நகர்ந்தது. வியாபாரி வண்டியைத் தள்ளுவதைவிட அதன் கரங்களைத் தட்டாமாலை சுற்ற விரும்பியது போல் பிடித்துக்கொண்டு பின்தொடர்வது போலிருந்தது. பண்டங்களைக் கூவியபடி எந்தப் புறமும் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தான் வியாபாரி, தெருக் கோடி மரத்தில் வண்டியும் தானுமாய்க் கரையும் வரை.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar