சொந்த ஜென் கதைகள்

in புனைவு

நிரப்புதல்

துறவி ரியோகான் ஒரு மலை உச்சியிலிருந்து சிறு கற்களை ஒவ்வொன்றாக எறிந்துகொண்டிருந்தார். அவரை சாப்பிட அழைக்க வந்த இளம் சீடன், “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் குருவே?” என்று கேட்டான். “இந்தப் பெரும்பள்ளத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறேன்” என்றார் ரியோகான். “உங்களுக்கென்ன பைத்தியமா? இது சாத்தியமா?” என்றான் சீடன். அதற்கு ரியோகான், “அதை நீ பள்ளத்திடம் அல்லவா கேட்க வேண்டும்?” என்றார்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நாமே செய்வதாக நம்புவது முட்டாள்தனம்.

ஊற்றுதல்

மெய்ஜி காலத்து ஜென் குருவான தனகவாவைப் பார்க்க ஒரு பல்கலைக்கழகப் பேராசியர் வந்தார். ஜென் பற்றிய முழுமையான விளக்கத்தை அளிக்கும்படி தனகவாவிடம் பேராசிரியர் கேட்டுக்கொண்டார்.

தனகவா பேராசிரியருக்காக ஒரு தேனீர்க் கோப்பையை எடுத்துவைத்து அதில் தேனீரை ஊற்றினார். கோப்பை நிரம்பியது. ஆனால் தனகவா நிறுத்தாமல் ஊற்றிக்கொண்டிருந்தார். பேராசிரியர் திகைத்துப் போய் பார்த்துக்கொண்டிருந்தார். தனகவா இன்னொரு குடுவையில் மேலும் தேனீர் வரவழைத்து தொடர்ந்து அதே கோப்பையில் நிரம்பி வழிய ஊற்றினார். பேராசிரியர் பொறுமையிழந்து, “அதுதான் நிரம்பிவிட்டதே. பிறகு ஏன் விடாமல் ஊற்றுகிறீர்கள்?” என்று கேட்டார்.

“வாழ்வில் அபத்தங்களுக்கு முடிவே கிடையாது” என்றார் தனகவா.

சுமத்தல்

ஒரு மூத்த துறவியும் இளம் துறவியும் மடாலயத்திற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தனர். மழை பெய்து சாலைகளில் குட்டைகளை உருவாகியிருந்தன. ஓர் இடத்தில் ஓர் அழகிய இளம்பெண் ஒரு குட்டையைத் தாண்டிச் செல்ல முடியாமல் நின்றிருந்தாள். மூத்த துறவி அவளிடம் சென்று அவளைத் தூக்கிக்கொண்டு சாலையின் மறு பக்கத்தில் இறக்கிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

“துறவிகளான நாம் ஒரு பெண்ணைத் தொடலாமா?” என்று இளம் துறவி மூத்த துறவியிடம் கேட்டார். “இது தெரிந்தே கேட்கிற கேள்வி மாதிரி இருக்கிறதே” என்றார் மூத்த துறவி.

அறிந்ததைக் கடந்து புதியதை அறி என்று ஜென் கூறுகிறது.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar