பேனா

in சிறுகதை, புனைவு

 

சட்டைப்பையில் பேனா இல்லாமல் நான் வெளியே போவதில்லை. திடீரென யாராவது ‘வாசகர்’ – ரசிகர் – எதிரில் வந்து புத்தகத்திலோ துண்டுச் சீட்டிலோ ஆட்டோகிராப் கேட்டால் புன்னகையுடன் கையொப்பமிட்டுத் தர பேனா இருக்காமல் போவது எழுத்தாளனுக்கு அசிங்கம். செய்கிற வேலையெல்லாம் கணிப்பொறி விசைப்பலகையில்தான். இருந்தாலும் எழுத்துத் தொழிலுக்குப் பேனா ஒரு மகத்தான குறியீடு என்பதால் அதை நினைவுச் சின்னமாக வைத்திருக்கிறேன். காசோலையில் கையெழுத்துப் போடவும் பேனா இன்றியமையாதது.

பிறகு நான் வெளியே கிளம்பலானேன். என் மேஜை மேல் ஓர் அழகிய மர பென் ஸ்டாண்டு இருக்கிறது. தன்னைக் கொண்டு உருவாக்கப்படும் எதையும் அழகாக்கிவிடுவது மரத்தின் இயல்பு. அதில் சாய்ந்து நின்று தூங்கிக்கொண்டிருந்தது எனது பேனா. என் வலதுபக்கக் கை, எதிர்பார்ப்புடன் நீட்டப்பட்ட விரல்களுடன் பேனாவை நெருங்கியது. அப்போது திடீரென ஓர் இடைஞ்சல் – மகன். பேனாவை நோக்கிப் புறப்பட்ட கை ஒரு கணம் உறைந்து, தளர்ந்து பின்வாங்கியது.

“அப்பா, என்னுடைய பென்சில் டப்பாவைப் பார்த்தாயா?”

என்னுள் கோபம் பிரவகித்தது. ஒருவருடைய பென்சில் டப்பாவைத் தொலைப்பது ஒரு வேண்டாத தினசரிச் சடங்கு.

“அதை நான் ஏன் பார்க்க வேண்டும்? அதைப் பத்திரமாக வைத்துக்கொள்வது உன் பொறுப்புதானே?” – இது நான்.

“கிடைத்துவிட்டது.”

“எங்கே இருந்தது?”

“பள்ளிக்கூடப் பையிலேயே இருந்தது.”

கடைசியில் இன்றைய அன்றாடப் பிரச்சினைக்கு இப்படியொரு ஜென்-தனமான முடிவு.

என் வலதுகை, விட்ட இடத்திலிருந்து பேனாவின் திசையில் தொடர்ந்தது. விண்ணென்று பாதத்தில் வலி. “அம்மா!” என அப்படியே பாதிக்கப்பட்ட காலைப் பிடித்துக்கொண்டு சில்லிடும் பிப்ரவரி மாத மொசைக் தரையில் உட்கார்ந்துவிட்டேன். ஒரு கூரிய முனை காலில் குத்திட்டு நின்றிருந்தது. மிகச் சிறிய முனை. முந்தைய தினம் வெறுங்கைகளால் பாதியாக உடைத்துப்போட்ட இயங்காத டிவிடிதான் ஒரு சிறிய கூர்துண்டாக என் வாழ்க்கையில் மறுபிரவேசம் செய்திருக்கிறது. அது குத்திய இடத்திலிருந்து ஒரு துளி ரத்தம் பெருகி வந்தது. வலி ஒரு சின்னஞ்சிறு நாய்க்குட்டியாய் அந்த இடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. நான் சுதாரிப்பதற்குள் முதல் துளி ரத்தம் என் வலதுகைக் கட்டைவிரல் ரேகையில் ஈஷியது. நான் அதைத் தரையில் துடைத்துவிட்டு மீண்டும் கட்டைவிரலைப் பார்த்தேன். ரத்த அபிஷேகத்தைக் கட்டைவிரல் கிட்டத்தட்ட மறந்துவிட்டிருந்தது அல்லது மறப்பதற்குத் தீவிரமாக விரும்பியதாய்க் காட்டிக்கொண்டது.

அந்தக் கட்டைவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே டிவிடி துண்டை இறுக்கமான ‘சாண்ட்விச்’ ஆக்கிக் குப்பைத் தொட்டியிடம் எடுத்துச் சென்றேன். எங்கள் வீட்டுக் குப்பைத் தொட்டி, வருவோர் பார்வையில் படாமல் சமையலறையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருக்கும். அதனுடைய திறந்த வட்ட வாய்க்கு நேர் மேலே கட்டைவிரல்-ஆள்காட்டி விரல் சேர்க்கையை வைத்துக்கொண்டு விரல்களைப் பிரித்தேன். டிவிடி துண்டு இரவின் இருளில் ஓசையின்றி உதிரும் பனி போல் சத்தமில்லாமல் சமையல் குப்பையில் விழுந்து மறைந்தது. விரல்களைப் பார்த்தேன். இறுகப் பிடித்திருந்த டிவிடி துண்டு அவற்றில் ஒரு மணல் துகளைக் கிடத்தும் அளவிற்குப் பள்ளத்தை ஏற்படுத்தியிருந்தது. அருகில் சென்று உற்றுப் பார்த்தால் சிறு நிழலும் தெரியக்கூடும்.

பார்வை கணப்பொழுதில் மேஜைக்குத் தாவியது. அழுத்தினால் ரீஃபிலை நீட்டிக்கொடுக்கும் தலையை மின்னிக்கொண்டு அமர்ந்திருந்தது பென் ஸ்டாண்டில் பேனா. அதை நான் பாதி எடுப்பதற்குள் என்னென்னவோ நடந்துவிட்டது. ஆனால் ஒரு “Still Life” ஓவியம் போல் சலனமின்றி இருந்தது பென் ஸ்டாண்டு. சமீபத்திய நிகழ்வுகளுக்கு சாட்சியாக இருந்த பின்னும் ஒரு ஞானியின் மௌனத்தைக் கடைபிடித்து வாழ்வியல் சம்பவங்களை எதிர்கொள்ளும் அணுகுமுறையின் கலையை நாம் ஜடப்பொருட்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஏதோ ஞாபகத்தை மீறி இடதுகையால் வாஷ்பேசின் குழாயைத் திறந்திருந்தேன் – சரியாகவே. ரத்தம் பட்ட கையோ வலது. ஒன்றையொன்று கட்டிப் புரண்டுகொண்டிருந்த வலதுகை விரல்களின் (இனி ‘விரல்கள்’) மேல் குழாய் தவற முடியாத கடமையாய் ஆவேசமாக நீரைப் பாய்ச்சிக்கொண்டிருக்கையில் இடதுகை தானாக டெட்டால் சோப்புக் கூழ் டப்பியை எடுத்து வலதுகைக்கு மேலே வைத்து அதன் தலையை அமுக்கியது. தன்னுடைய வலையின் இழையைப் பின்னிக்கொண்டே தொங்கி இறங்கும் சிலந்தி போல், ஆனால் தயங்கித் தயங்கி, கெட்டியாக இறங்கியது சோப்புக் கூழ். பின்னர் சட்டென ஒரு முடிவுக்கு வந்தது போல் தயக்கத்தை உதறி விரல்களின் மேல் விழுந்தது. ஏற்கனவே கட்டிப் புரள்வதில் மும்முரமாயிருந்த விரல்கள் சோப்புக் கூழ் பட்டதில் மேலும் உற்சாகமடைந்தது போல் தெரிந்தது. கைகள் சுத்தமாயின.

இரு கைகளிலிருந்தும் புது ஈரம் சொட்டச் சொட்ட கைகளின் துயர் துடைக்கத் துண்டு தேடினேன். வெண்ணிற பூத்துவாலை தனக்குத் சம்பந்தமில்லாத ஒன்று நிகழ்ந்துகொண்டிருப்பது போல் கொடியிலிருந்து வேடிக்கை பார்த்தபடி இருந்தது. முழு ஈரத்தையும் துவாலையின் மீது சுமத்த மனமின்றிக் கைகளை உதறியவாறு அதை நெருங்கினேன். இடதுகை துவாலையைக் கொடியில் வைத்தே ஏந்திக்கொள்ள, வலதுகை அது ஏற்படுத்திய குழிவில் புரண்டு புரண்டு ஒற்றிக்கொண்டது. அடுத்து இடதுகை.

துடைத்த கைகளின் எஞ்சிய நுனி ஈரத்தை பேண்ட்டின் தொடைப் பகுதியில் வருடி இடமாற்றிய பின் எனது சற்றைக்கு முந்தைய இலக்கை அணுகினேன். ஈரம் முழுவதுமாய் விடைபெற்று அதன் குளிர்ச்சி மட்டுமே மீதமிருந்த வலதுகையை பென் ஸ்டாண்டில் இருந்த பேனாவை நோக்கிச் செலுத்தினேன். பேனாவை எடுக்கவும் செய்தேன். அது என் சட்டைப்பையை அடைய சுமார் ஒன்றேகால் அடி தொலைவே இருக்கையில் ஒரு திடுக்கிடுத்தும் குரல். பரிச்சயப் பெண் குரல். மனைவியின் தவிர்க்கவியலாத குரல். எனக்குத் தொலைபேசியாம். கிட்டத்தட்ட விரக்தியானது என்றே சொல்லிவிடப்படத்தக்க ஒரு புன்னகையுடன் பேனாவை மேஜை மீது வைத்துவிட்டு அகன்றேன். பேனா மீண்டும் சலனமின்றிக் கிடந்தது. ஆனால் இம்முறை பென் ஸ்டாண்டிலன்றி நேரடியாக மேஜை மேல். நடந்த சம்பவங்களால் பேனாவை பென் ஸ்டாண்டில் வைப்பதில் நான் நம்பிக்கை இழந்துவிட்டிருந்தது போல் தெரிந்தது.

“?”

“…”

“…”

“?”

“…”

“…”

“…”

அழைப்பு முடிந்து பக்கத்து அறையிலிருந்து வெளியே சென்று மேஜைக்குத் திரும்பி வந்தேன். சிறிது நேரம் பேனாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு பேனாவை எடுத்து சட்டைப்பையில் வைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளிக்கிட்டுத் தெருவின் நிஜத்தில் கலந்தேன்.

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar