காணோளி விவகாரம்

in கட்டுரை

பிப்ரவரி 6ந்தேதி கர்நாடக சட்டமன்ற அவையில் மூன்று பா.ஜ.க. அமைச்சர்கள் செல்போனில் ஆபாச வீடியோ பார்த்தார்கள். இதனையொட்டி எழுந்த சர்ச்சையையடுத்து இவர்கள் மூவரும் பிப்ரவரி 8ந்தேதி ராஜினாமா செய்தார்கள். – செய்தி

பலருக்குக் கர்நாடக பா.ஜ.க. அமைச்சர்கள் சட்டமன்றத்தில் பாலியல் படம் பார்த்த பிரச்சினையின் தீவிரம் புரியவில்லை. காணோளியின் இயல்பான ஆபாசம் போக, வரலாற்றுப்பூர்வமாக சட்டமன்றம் என்ற இடத்தின் ஆபாசத்தன்மையைப் பற்றிக் கூறவே தேவையில்லை மற்றும் கன்னடமே கேட்க ஆபாசமானதொரு மொழி என்பதால் இந்த நிகழ்வு மும்மடங்கு ஆபாசமாகிறது.

ஆபாசம் 1 – காணோளிச் சம்பவம் நிகழ்ந்தது ஒரு சட்டமன்றத்தில் என்பதைப் புதிதாக நிரூபிக்கத் தேவையில்லை. ஆபாசம் 2 – இங்குள்ள அரசியல்வாதிகளிடம் இருப்பது போல மொழிப் பற்றும் மொழி அறியாமையும் கலந்த ஒரு மொழிப் பற்று கர்நாடகத்திலும் உள்ளது. இதன் வாயிலாக அவர்கள் பார்த்தது ஆபாச கன்னடப் படமாகத்தான் இருக்க வேண்டும். இது நம்மைச் சற்று விரிவான இந்த மூன்றாவது புள்ளிக்கு எடுத்துச் செல்கிறது.

ஆபாசம் 3 – காணோளியில் நமக்குக் காணக் கிடைப்பது ஒரு கியூபிச ஓவியத்தில் கிடைப்பது போன்ற அரைகுறையான ஒரு சித்திரமே. ஒரு கியூபிச ஓவியன் அவன் வரையும் படத்தில் மனித உறுப்புகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தூவிப் புதிராக்குகிறான். கவிதைக்கும் ஓவியத்திற்கும் நெருங்கிய உறவு உள்ளதால் கவிதைக்கும் உரிய புதிர்த்தன்மை இது. பௌலோ பிகாசோ, பெர்டினாண்டு லெஜர் போன்ற கியூபிச ஓவியர்கள் வரைந்த நிர்வாண ஓவியங்களை இன்றைய செய்தித்தாள்களின் ரயில் விபத்துப் புகைப்படங்களின் முன்னோடிகள் எனலாம்.

இப்புதிர்த்தன்மையையும் மீறி காணோளியில் நடப்பதை நாம் ஊகிக்க முடிவது சொந்த ஏக்கத்தால் உந்தப்பட்ட கற்பனையின் வலிமை மட்டுமல்ல, காட்சி ஊடகத்தின் பலமும்கூட. இந்தக் காணோளியில் flesh toneகளின் நடமாட்டத்தை வைத்து காட்சித் தொடரை மனதிற்குள் இட்டு நிரப்ப முடிகிறது. அப்படிக் கிடைத்த சித்திரத்தைக் கொண்டு பார்த்தால் இது மைசூர் மஜ்ஜிகே என்ற பாலியல் படத்தில் வரும் காட்சியாகும். மைசூர் மல்லிகே ஒரு தம்பதியினர் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் தங்கள் படுக்கையறைக் காட்சிகளைப் பதிவு செய்வதைப் பேசுகிறது. வணிக ரீதியாகவும் அழகியல் ரீதியாகவும் கன்னட சினிமா இருக்கும் நிலையில் இன்றைய தேதிக்கு அதிகம் காணப்பட்ட கன்னடப் படம், பாலியல் புனைவு வகைப்பட்ட மைசூர் மஜ்ஜிகேதான் என்று கன்னட திரைப்படத் துறை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சபாநாயகரின் பேச்சொலியை விலக்கி காணோளியிலிருந்து வெளிப்படும் ஒலியை மட்டும் கவனமாய் தனிப்படுத்திக் கேட்டால் “ஈவாகே இல்லி ஜரூராகி பன்பிட் அதனெ தெகது இதல்லி பிட்தீரா”1, “ஸ்நானா ஆயித்தா”1 போன்ற வசனங்களைக் கேட்கலாம். இவ்வசனங்கள் மைசூர் மஜ்ஜிகேயில் வருபவையே.

உடலுறவை வெகுஜன நுகர்வுக்காக அழகியல் ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான2 சமரசங்களுடன் காட்சிப்படுத்துதல், பெண்ணை சமத்துவம் பேசுகிற, கவிதை எழுதுகிற வெறும் பெண்ணாகப் பார்க்காமல் சுவாரசியமான பொருளாகப் பார்த்தல் உள்ளிட்ட சமூக-கலாச்சார அம்சங்களின் பக்கம் நான் போக விரும்பாத அதே சமயத்தில், ‘காணோளி’ என்ற சொல்லின் பிறப்பியல் குறித்த புதிய தெளிவு கிடைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

அமைச்சர்கள் பாலியல் காட்சிகளைச் சட்டமன்ற அவையில் கைபேசியில் பார்த்தது வம்புக்கு அழைப்பு விடுக்கும் செயல். இவர்கள் அலுவலக நேரத்தில் அதே கைபேசியில் கிரிக்கெட்டைப் பார்த்திருந்தால் அல்லது ஆபாச மின்னூல் படித்திருந்தால் தம் பதவியைத் துறக்க வேண்டியிருந்திருக்காது. இது ஏன் என ஆழ்ந்து சிந்தித்தால் திரும்பத் திரும்ப காட்சி ஊடகத்தின் பலத்தில்தான் வந்து நிற்கிறது.

1 30 நாட்களில் கன்னட பாஷை, 1971, பாலாஜி பப்ளிகேஷன்ஸ்
2 My Speech to the Graduates, 1979, New York Times, Woody Allen

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar