காதலும் காதலர் தினமும்

in கட்டுரை

“தமிழின் முக்கிய எழுத்தாளுமையான நீங்கள், கார்ப்பரேட் நிகழ்பொருளாகிவிட்ட காதலர் தினத்திற்கு ட்விட்டரில் வாழ்த்து சொல்கிறீர்களே, இது வாசகர்களுக்குத் தவறான சமிக்ஞைகளை அனுப்பிவிடாதா?” என்று நானேதான் என்னைக் கேட்டுக்கொண்டேன். பதில் சொல்லக் கடமைப்படாதிருக்க முடியுமா? நான் ஏன் காதலர் தினத்தை, அதன் மூலம் காதலை, கொண்டாடுவதை ஆதரிக்கிறேன் என்று சில துரித குறிப்புகளின் மூலமாகச் சொல்கிறேன்.

காதலர் தினம் பல நூற்றாண்டுகளாக இருந்துவருவது. காதலர் தினத் துறவியான புனித வேலண்டைன், பெப்சி, கொக்ககோலா நிறுவனங்கள் தோன்றுவதற்கு முன்பே வாழ்ந்து மரித்தவர். இந்து, பௌத்த, சமண மதங்களின் ஸ்வஸ்திக் சின்னத்தை நாஜிகள் தங்களுடையதாக்கிக்கொண்டது போல் வணிக நிறுவனங்கள் காதலர் தினத்தின் ரத்த வாடையை முகர்ந்து “ஹைஜாக்” செய்திருக்கின்றன. கார்ப்பரேட்களுக்கு எல்லாமே விற்பனைக்குரிய பொருட்கள்தாம் என்பதால் அவை காதலர் தினத்திற்கு விசேச அந்தஸ்து கொடுத்து சுவீகரித்திருப்பதாக நினைக்கக்கூடாது. காதலர் தினம் காதலர்களுடையதே. காதலர் தின ப்ராடக்டுகளை வாங்காதிருப்பதையும் காதலர்கள் தங்கள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வைத்துக்கொள்ளலாம். ஏனென்றால் காதலைக் கொண்டாடுவது, அதுவும் பகிரங்கமாகக் கொண்டாடுவது முக்கியமான சமூக செய்தியை அனுப்புகிறது.

காதலித்தல் தன்னளவிலேயே புரட்சிகரமான ஒரு செயல். இது தெரிந்தால் நம்மில் பலர் இதைச் செய்யாமல் இருந்துவிட வாய்ப்புள்ளது. நல்லவேளையாக அது தானாக ஏற்படுகிற ஒன்றாக உள்ளது. சமூகம் துதிக்கும் பல மதிப்பீடுகளைக் காதல் மதிப்பதில்லை. கௌரவம், சுதந்திரம் என்னும் மதிப்பீடுகளையும் காதல் தகர்க்கிறது. சுதந்திரம் சுமையாகிறது, அலட்சியத்தின் அறிகுறியாகிறது. காதலில் அடிமைத்தனமும் சரணாகதியும் முக்கியமாகிறது. சமரசம் உதவுகிறது. ஆண்டாளும் பாரதியாரும் பக்தியை வெளிப்படுத்தும் ஒரு உணர்வாகக் காதலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். பக்தியின் தீவிரத்தைக் காட்ட அவர்களுக்குக் காதல் வேண்டியிருந்திருக்கிறது. காதலுக்குச் சூடும் சுரணையும்கூட இல்லைதான்.

காதல் பரஸ்பர பிம்பங்களைச் சார்ந்தும் இயங்குகிறது. இந்த பிம்பங்கள் கலையும்போது காதல் உடைகிறது. சில சமயங்களில் இந்த உடைவு அல்லது கண்திறப்பு திருமணத்தால் ஏற்படலாம். இது முதல் காதலுக்கே உரிய பலவீனம். பாலியல் தன்மை தொடங்கும் பருவத்தில் பிறக்கும் முதல் காதல் பெரும்பாலும் உண்மையான, முதிர்ச்சியான காதலுக்குப் பகுதியளவு முன்னோட்டமாக உள்ளது. முதல் காதல் ஒரு அழகிய வாழ்த்து அட்டை போல முக்கியமான நினைவு. ஆனால் அதற்குப் பிறகு வேறு காதல் எதுவும் அமையும் பட்சத்தில் அது வெறும் முக்கியமான நினைவே. முதல் அடியை இரண்டாம் படியிலிருந்தும் வைக்கலாம், அல்லவா?

பெண் பொருளாகப் பார்க்கப்படுவது பற்றி நாம் இன்று வாய்கிழியப் பேசுகிறோம். காதலில் காதலர்கள் இருவரும் பொருளாகிறார்கள். நகைகளைப் போல், வீடு வாசல் போல் பாதுகாக்கப்பட வேண்டிய உடைமைகள் ஆகிறார்கள். காதலின் இலக்கு அன்பு செலுத்துவதே. ஆனால் அன்புக்கு நேரெதிரான செயல் அன்புக்குரியவருக்குத் தீங்கு செய்தல். காதலர் காதலிக்கப்படும் நபருக்கு அறிந்தே சிறியதும் பெரியதுமாகத் தீங்கு செய்வது காதலிலிருந்து பிரிக்க முடியாத அம்சம். அணுவணுவாகக் காதலிப்பவர்கள் இந்த வேதனையை ரசிக்கவே செய்வார்கள். பொதுவாக எதிர்மறையானவையாகக் கருதப்படும் உணர்வுகள் காதலால் ஏற்படும்போது ஒளிவட்டம் சூழப்பெறுகின்றன, இனிய வலியைத் தருகின்றன. கோபம், பொறாமை, பயம், கவலை, உரிமையுணர்வு, பாலியல் வேட்கை, குரோதம், துரோகம், சுயபச்சாதாபம், பகைமை, பழிவாங்கல், நிறுத்தக்குறிப் பிழைகளுடன் கவிதை எழுதுதல் என காதலின் மெனுவில் ஐட்டங்கள் அதிகம்.

தூய்மையான காதல் சாதி, மதம், இனம், மொழி, தேசம், தோற்றம், வயது, அந்தஸ்து, பாலினம் என எதையும் பார்ப்பதில்லை. இதுதான் என்று வரையறுத்துக் குறுக்கிவிட முடியாதபடிக்குக் காதல் பல முகங்களைக் கொண்டிருக்கிறது. இப்படி எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிடுவது புரட்சியின் இயல்பு. அதனால்தான் காதலையும் அதன் பகிரங்கக் கொண்டாட்டத்தையும் பாசிச அமைப்புகள் எதிர்க்கின்றன.

காதல் மனித ஆயுளைப் போன்றது. அதனால் ஒரு வாழ்நாள் காலம் நீடிக்கவும் முடியும், நொடியில் மறைந்துவிடவும் முடியும். அது எவ்வளவு வலுவானதோ அந்தளவிற்குப் பலவீனமானது. சுயங்கள் அழிந்து ஒரு கூட்டுச் சுயம் பிறக்குமிடம் காதல். சுதந்திரம், தனிநபரியம் போன்ற விசயங்களுக்குக் காதலில் இடமில்லை. காதலுக்கும் மரணத்திற்கும் நேரடித் தொடர்பு உள்ளது. அது போல காதலையும் காமத்தையும் பிரிக்கும் கோடு மிக மெல்லியது. காதலைவிட சுவாரசியமான ஒரு விசயம் உண்டென்றால் அது காமம்தான். காமம் மட்டும் காதலைவிட நீண்டகாலம் நீடிக்கிற ஒன்றாக இருந்தால் காமத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கிடைத்திருக்கும். காதலைப் பற்றி அடுத்த புத்தகக் கண்காட்சி வரை எழுதிக்கொண்டேயிருக்கலாம். ஆனால் இந்த உணர்வைப் பற்றி தாஸ்தாயெவ்ஸ்கிவும் டர்ஜெனிவும் மார்க்வெஸும் சொல்லாத எதையும் நான் சொல்லிவிடப்போவதில்லை.

எனவே, கடைசி வரியை எதிர்பார்த்தது போல் முடிக்கப்போனால், அனைவருக்கும் என்னுடைய காதலர் தின வாழ்த்துகள்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar