இயற்கைவழி பாலின சமத்துவத்தின் இன்றைய தேவை

in கட்டுரை

அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதற்கு என்பார் தாத்தா
நீ படித்து என்ன ஆகப்போகிறது என்பார் அப்பா
படித்த திமிர் என்கிறான் கணவன்
எல்லாம் என் நேரம்.
– சொந்த கவிதை

It is amazing how complete is the delusion that beauty is goodness.
– Leo Tolstoy, The Kreutzer Sonata

நடப்புக் காலத்தில் எல்லாமே மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுவருகிறது. அதன்வழியில் ஆணாதிக்கவாதம் என்ற புராதன மதிப்பீடும் இன்றைய யுகத்திற்கேற்ப நிகழ்நிலைப்படுத்தப்பட வேண்டும். எப்படி நாம் மரபை முழுவதுமாக நிராகரித்துவிடாமல் அதன் ஆக்கபூர்வமான அம்சங்களை வைத்துக்கொள்கிறோமோ, எப்படி நம்மில் சிலர் கடவுள் நம்பிக்கை இல்லாதபோதிலும் கோவில்களை ரசிக்கிறோமோ, அதே போல ஆணாதிக்கவாதத்தின் எதிர்மறையான அம்சங்களை ஆராய்ந்தறிந்து நீக்கிவிட்டு நல்லவைகளை மட்டும் வைத்துக்கொண்டு புதிய அரசியல் பொருத்தப்பாடுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். அது ஆண் என்ற ஓர் இனத்தின் அடிப்படை அடையாளம் சார்ந்த தத்துவம் என்பதன் வெகுஜன புரிபடலுக்கு வழிகோல வேண்டும்.

முதலில், ஆண் ஏன் ஆதிக்கம் செலுத்தக்கூடாது? ஆளுவதில் பெண்ணுக்குள்ள உரிமை ஆணுக்கும் உள்ளதுதானே? என்று நாம் தர்க்கத்திற்காவது கேட்டுக்கொள்ளலாம். இன்று கல்வித், தொழில்துறை, மருத்துவம், கலை-இலக்கியம், அரசியல், அறிவியல்-தொழில்நுட்பம், குற்றம் என எங்குமெதிலும் பெண்கள் இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் இருப்பது போல் பெண் எழுத்தாளர்களும் கவிஞர்கள் இருப்பது போல் பெண் கவிஞர்களும் இன்றைக்கு உருவாகிவிட்டார்கள் (அதுவும் ஔவையார் வகையறா அல்ல, பாப்லோ நெரூடா வகையறா). சமூக அதிகாரப் பகிர்வில் 95-05 என்ற பங்குநிலை மாறி 60-40 என்று கிட்டத்தட்டிய சமநிலை அடையப்பட்டுள்ளது. இதை நேர்மையான பின்ஆணாதிக்கவியல்வாதிகள் (feminists) யாரும் மறுக்க முடியாது.

அரசியல் பிரச்சினைப்பாடுகள் ஒருபுறமிருக்க, ஆண்கள் என்கிற முறையில் நாம் ஏன் ஆணாதிக்கவாதத்திற்கு ஒரு கவர்ச்சிகரமான பெயரை இட்டு மீளறிமுகம் செய்யக்கூடாது (முதலில் அதை ஒரு சித்தாந்தத்திற்குரிய மரியாதையைத் தந்து ‘ஆணாதிக்கவியல்’ என்று அழைப்போம்)? ஏனெனில் ஆணாதிக்கவியல் குறுகிய உலகப் பார்வையுள்ள சில ஆண்களிடம் சிக்கியிருக்கிறது. அவர்களிடமிருந்து அதை மீட்டு அனைத்து ஆண்களையும் அரவணைத்துச் செல்லக்கூடிய ஒரு பொது தத்துவார்த்த மரபின் நீட்சியாக அதை பரவலாக்கப்படுத்த வேண்டும். இது நம்மைப் போன்ற படித்த அறிவுஜீவிகளின் கையில் இருக்கிறது.

ஆணாதிக்கவியல் ஒரு தோல்வியுற்ற கடவுளாகும். அதிகாரபூர்வமாக அது ஏறத்தாழ வழக்கொழிந்துவிட்டது. திரைப்படங்களில் வெறும் வெற்றிக்கான வணிக “ஃபார்முலாவாகவும்” ஆணின் பாதுகாப்பின்மை உணர்வில் பிறக்கும் வெற்று மிரட்டல்களாகவும் மட்டுமே அதை நாம் இன்று பார்க்க முடிகிறது. இந்தச் சித்தரிப்பானது எந்தவொரு உண்மை நிலையின் கொண்டாட்டப் பிரதிபலிப்பாகவும் இல்லாமல் ஆண் நனவிலியின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் படிமங்களின் தட்டையான தொகுப்பாக நீர்த்துவிடுகிறது. ‘ரொட்டி ஜித்தன்’ என்ற பங்கை ஒருகாலத்தில் தனியாக ஆற்றிய ஆண் இனம், நடப்புக் காலத்தில் அந்தப் பங்கு ‘தாய்க்குலம்’ என்ற பெண் இனத்தால் சிறுத்துவருவதன் கையாலாகாத சாட்சியாகக் கிடக்கிறது. ஆண் தனது இனத்தைப் பெருக்கிக்கொள்ள உருவாக்கப்பட்ட அமைப்பான குடும்பம் என்பதில் ஏற்படும் குற்றங்களைத் தடுக்க வந்த சட்டங்கள் ஆண் இனத்தையே அதிகளவு தண்டிக்கின்றன.

பெண்மை மட்டும் பல சமூகப் பங்குகளை உள்ளடக்கிய பன்முக அடையாளம் போலவும் ஆண்மையானது பரிணாம வளர்ச்சியின் ஆதிக் கட்டங்களிலேயே தங்கிவிட்ட ஒற்றைப் பரிமாணம் கொண்ட முரட்டியல்பு போலவும் நிறுவ முயலப்படுகிறது. ஆண்மை என்பது கெட்ட வார்த்தையாகி ஆண் அவனது இயல்புக்குரிய நல்லதனங்களை எல்லாம் இழந்து பெண்ணையும்விடத் தாழ்ந்தவனாகப் பார்க்கப்படுகிறான். இது போன்ற அபாண்டமான சித்திரங்களை சில ஆண்களும் நம்பி ஏற்றுப் பரப்புவதுதான் சோகம். ஆண்மை ஆணின் தனித்துவமான பாலினத்திற்கு உரிய இயல்பு எனப் புரிந்துகொள்ளப்படவும் அவன் அதிகபட்சம் ஒரு “genial giant”ஆகப் பார்க்கப்படவும் ஆண் அறிவுஜீவிகளும் ஆணுக்கு முன்னுரிமை தரும் இயற்கைவழி பாலின சமத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கலந்த நம்பிக்கையைக் கொண்ட பெண் அறிவுஜீவிகளும் பாடுபட வேண்டும். ஒரு சுற்றுலாத் தலம் விளம்பரப்படுத்தப்படுவது போல் ஆண்மையின் நல்நிஜங்கள் குறித்து சமூகத்திடமும் சில “reformist” ஆண்களிடமும் விளம்பரப்படுத்த வேண்டும். இல்லை என்றால் விரைவிலேயே ஆண்மை என்பது வெறும் மோட்டார்சைக்கிள் விசயமாகிவிடும்.

பல முகமிலி பிம்பங்கள் கூட்டிணைந்த சமூகம் என்கிற அமைப்பு, பெண் எனும் பிம்பத்தை பலவீனமானதாகக் காட்டுகிறது. பெண்ணுக்குள்ள ‘பொறுப்புச் சுமை’, புற அழகு, குறிப்பாக உடல் சார்ந்த பலவீனம் ஆகியவை இந்த பலவீன நிலையின் அம்சங்களாக முன்வைக்கப்படுகின்றன. ஆயினும் பொறுப்பு, அழகு, பலவீனம் ஆகிய எதுவுமே இல்லாத ஏகப்பட்ட பெண்களை நாம் பார்க்கிறோம். அந்தந்தப் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் இந்தக் குணாம்சங்கள் பெண் இனம் முழுமைக்கும் பொதுமைப்படுத்தப்பட்டு வழக்கமான ஆண்xபெண் இருமை நிலையைச் சுட்டி அந்தப் பலவீனத்திற்கு ஆண்தான் காரணம் என்பதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது நன்றாக இல்லை என்றால் அது மிகையாகாது.

ஆணின் இனப்பெருக்கத்தில் பெண்ணுக்குள்ள இடம் இன்றியமையாததாலேயே பெண்களுக்குச் சலுகைகள் அளிப்பதில் உள்ள தர்க்கத்தை ஆண்களில் ஒருவன் என்ற முறையில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவை பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்குத் தனி இருக்கை வரிசைகள் போன்ற வெறும் ஆறுதல் பரிசு விநியோகமாக நில்லாமல் ஆட்சியமைப்பில் 33% இடஒதுக்கீடு போன்ற தூக்கிக்கொடுத்தல்களாகப் பெருத்துவிடுவதுதான் நம் முன் உள்ள நிஜமான, அவசரமான பிரச்சினை.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar