சம்பவ மதியம்

in சிறுகதை, புனைவு

மதியத்தில் ஒரு நேரம். ஒரு பேருந்துக்காக அதன் நிறுத்தம் ஒன்றில் காத்திருந்தேன். பேருந்து என்னை நெருங்கப்போவதற்கு முன்னோட்டமாகப் பேருந்து வரும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. மணி இரண்டரை என்று சொன்ன கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். காலம் கனிய இன்னும் ஐந்து பத்து நிமிடங்கள் காத்திருந்தன. வெயிலில் காய்ந்துகொண்டிருந்த எதிர்வரிசையின் கடைகள் அவற்றின் உரிமையாளர்களுடைய மதிய உணவிற்காக மூடியிருந்தன. என் பக்கமெல்லாம் நிழல். என்னோடு நிழற்குடையும் சேர்ந்து நிழலை அனுபவித்துக்கொண்டிருந்தது.

அப்போது பக்கத்தில் தானும் பேருந்திற்காகக் காத்திருந்த ஒருவர். ஆளுயரம் இருந்தார், வயது நடுத்தரம். கோலம் போடத்தக்க அளவு சப்பட்டையான முகம். நுனி மட்டும் உள்ளிருந்து எட்டிப் பார்ப்பது போன்ற சிறு மூக்கு. “என் அப்பா செங்கல்பட்டு தாசில்தார் ஆபீசில் வேலை பார்த்தார். 1970இல் அவர் ரிடையர் ஆனதும் நான் இங்கே சென்னைக்கு வந்துவிட்டேன். சிங்கபெருமாள் கோவிலில் நிலம் இருக்கிறது. என் தெய்வாதீனம், நான் சென்னைக்கு வந்ததும் எனக்கு வேலை கிடைத்தது. மனைவி ஹவுஸ்வைஃப். இரண்டுமே பிள்ளைகள். பெரியவன் எஸ்.ஆர்.எம்.மில் இன்ஜினியரிங் படித்தான். இங்கேயே ஒரு நல்ல படித்த பெண்ணாகப் பார்த்து கல்யாணம் செய்துவைத்தேன். இப்போது பெங்களூரில் வசதியாக இருக்கிறான். அவனுக்கும் இரண்டுமே பிள்ளைகள். சின்னவன் பாலிடெக்னிக் படிக்கிறான். அவனுக்குப் பாடுவதில் கொஞ்சம் ஆர்வம். போட்டியிலெல்லாம் பரிசு வாங்கியிருக்கிறான். நான் இருப்பது டபுள் பெட்ரூம் வீடு. சொந்த வீடுதான். வேளச்சேரி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஐந்து நிமிடம் நடக்க வேண்டும். நல்ல இடம். எல்லாமே பக்கத்திலேயே இருக்கிறது. ஆனால் மழை பெய்தால் நாறிவிடும். மற்றபடி அருமையான இடம். அங்கே எல்லோரும் நன்றாகப் படித்து ஓரளவு நல்ல நிலையில் இருப்பவர்கள். மாடர்னான ஏரியா. நாங்களும் மாடர்ன்தான். என் மனைவி கொஞ்சம் பழைய காலத்துப் பெண்பிள்ளை. மற்றபடி நாங்கள் ரொம்ப ஃபார்வர்டு. சின்னவன் எப்போதும் மொபைல்தான். நிறைய தோழிகள் இருக்கிறார்கள். சில நாட்களில் அவர்களை வீட்டுக்குக் கூட்டி வருவான். நான் அதையெல்லாம் கேட்டுக்கொள்ள மாட்டேன். ‘எனக்கு உன் வயது புரிகிறது. என் வயதை நீ மதிப்பது போல் உன் வயதை நான் மதிக்கிறேன் – ‘ என்ன? ‘உன் சுதந்திரத்தில் நான் தலையிட மாட்டேன். ஆனால் முக்கியமான டெசிஷன் மேக்கிங்கை உன் பெற்றோரிடம் விட்டுவிடு. நீ நன்றாக இருப்பாய், நான் கியாரண்டி.’ நம் காலத்தில் நமக்கு இது மாதிரி விஷயத்தில் சாய்ஸ் இல்லை. பெற்றோர் பேச்சுதான் நமக்கு ஜி.ஓ., ஹெஹ்ஹெஹ்ஹே. அதனால் நமக்கு ஒன்றும் குடிமுழுகிவிடவில்லை. என் மனைவி மாதிரி ஒருத்தி கிடைப்பது அபூர்வம். பிள்ளைகளை முழுக்க அவள்தான் வளர்த்தாள் (அவளுக்கு ஏற்கனவே பி.பி., கொலஸ்ட்ரால் இருக்கிறது. இன்னும் மூன்று வருஷங்களில் இதயநோய் வந்து பைபாஸ் செய்ய வேண்டியிருக்கும். அடுத்து எனக்கு ஹெர்னியா ஆபரேஷன், காடராக்ட் என மூன்று லட்சம் செலவாகிவிடும்). ஆனால் நம் சந்ததிகளுக்கு சாய்ஸ் இருக்கிறது. அதன் அருமை, அதன் வலிமை அவர்களுக்குத் தெரியுமா என்றால், எல்லா பிள்ளைகளுக்கும் தெரிவதில்லை. எத்தனையோ பேர் நாசமாகப் போகிறார்கள். பெரியவனுக்கு நானேதான் பார்த்துத் திருமணம் செய்துவைத்தேன். கைநிறைய சம்பளம், விக்கிரகம் மாதிரி குழந்தைகள். சின்னவனிடம் சொல்லிவிட்டேன், ‘வெள்ளைக்காரியைத் தவிர யாரானாலும் உன் இஷ்டம்.’ வெள்ளைக்காரி என்றால் கலாச்சார ரீதியாக ரொம்ப தூரம். நிற்காது. எனக்கு இன்னும் ஒரு வருஷம்தான் சர்வீஸ். மணலியில் மூன்று பெட்ரூம் வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன். முடித்தாயிற்று கட்டி. ரெஜிஸ்ட்ரேஷன் ஆயிற்றென்றால் பால் காய்ச்சிவிடலாம். அதற்குத்தான் போய்க்கொண்டிருக்கிறேன். ஆட்டோவில் போகலாம் என்றால் ஆட்டோவிற்கே விலை சொல்கிறான்” என்பது போன்ற முகபாவத்துடன் என்னிடம் ஏதோ பேச வாயைத் திறக்கத் தொடங்கினார்.

அந்த சமயம் பார்த்து என் கைபேசி ஒலித்தது. நான் சற்று நகர்ந்து நின்றுகொண்டு கைபேசியை எடுத்தேன். காதில் அதை வைத்து எதிர்முனையிடம் இப்படிக் கேட்டேன்:

“ஹலோ, யார் பேசறது?”

» சம்பவ மாலை

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar