5. ஒழிந்தான் ஓவியன்

in புனைவு

(‘ஒரு லோட்டா ரத்தம்’ நெடுங்கதையின் தொடர்ச்சி. முந்தைய, பிந்தைய அத்தியாயங்கள்: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஆறு)

ஏப்ரல் 1, 1890, பிரான்ஸ்.

“வான்கா, வான்கா, வான்கா. என் பெயர் அது அல்ல. ஆனாலும் வான்கா என்றால் செத்தா போய்விடப்போகிறேன்?” என்று நினைத்துகொண்டான் வேறு யார் வான்காதான். வின்சென்ட் வில்லெம் வான் கோ (1853-1890) சாகத்தான் போகவிருந்தான். அவனுக்கும் அது தெரிந்திருந்தது. ஏனென்றால் ஆரம்பத்திலிருந்தே அது அவனுடைய திட்டம்தான். இடுப்பில் இயந்திரத் துப்பாக்கி உறுத்தியது. இன்னும் சிறிது நேரம்தான், பொறுத்திரு என்று தனதிடுப்பை வான்கா சமாதானப்படுத்தினான்.

பார்வையைத் தொலைவில் செலுத்தியபடி நடந்தான் வான்கா. அவனால் காதலிக்கப்பட்டக் கோதுமை வயல்கள் தூர விரவிக் கிடந்தன. சூரியன் குழப்பமான வட்டக் கோடுகளால் சூழப்பட்டு திப்பித்திப்பியாக இருந்தது. ஆனால் இந்தா, இந்தா என்று கதிர்களை வீசிக்கொண்டிருந்தது. இது போதாதென்று வெயில் வேறு ராட்சதப் பூரான் போல வயல்களின் மேல் ஊர்ந்துகொண்டிருந்தது. தன் பங்கிற்கு வானமும் போஸ்ட்-இம்ப்ரஷனிச நீலவெளியாக விரிந்திருந்தது.

அவ்வளவு பெரிய வானத்தின் கீழ் தன்னை மிகச் சிறிசாக உணரத் தொடங்கினான் வான்கா. தினமும் இதே வாடிக்கையாய்ப் போயிற்று என்று அவன் அலுத்துக்கொண்டான். ஆனால் நீலம் அவனுக்குப் பிடித்த நிறம். ஏன், எல்லா நிறமும் அவனுக்குப் பிடிக்கும். அதனால்தான் வண்ணங்களை அவன் தாராளமாய்ப் பயன்படுத்தினான். வாழ்க்கையில், அதுவும் தன்னுடைய வாழ்க்கையில், அவன் விற்ற ஒரே ஓவியம் நானூறு பிராங்குகளுக்குப் போனது. ஆனால் அதற்கு பெயிண்ட் செலவே ஐநூறு பிராங்குகள். பிறகு சிறிசாக உணராமல் எப்படி இருக்க முடியும்?

ஆகாயம், சூரியன், காற்று, வயல், வீடுகள், பாலங்கள், தேவாலயங்கள் எல்லாம் வான்கா புகழ் வான் கோவின் தூரிகைக்கு மெழுகாகத் தயாராய் திருகியும் நெளிந்தும் கொண்டிருந்தன. அவனைப் பார்த்துக் காக்கைகள் பறந்தன. நிற்பது இயற்கை, நடப்பது நான், பறப்பது காக்கை என்று அவனுக்குப் பட்டது. இயற்கை பிரம்மாண்டமாக இருந்தாலும் அதை ஒரு கித்தானில் மீட்டுருவாக்கி சுருட்டி எடுத்துச் செல்வதோடல்லாமல் அதை மறந்துபோய் எங்கேயோ வைத்துத் தொலைந்துபோக்கவும் முடிவது சிறுசாக இருப்பதன் பலாபலன்தானே என்று சமாதானப்படுத்திக்கொள்ளத் தோணியது வான்காவுக்கு.

நடுவயலை அடைந்த பின் வான்கா ஈசலை ஓரிடத்தில் வைத்தான். அண்ணாந்து சூரியனைப் பார்த்தான். ஒன்று, பெய்து கடுக்கும், அல்லது காய்ந்து கடுக்கும் என்று அவன் இப்போது நினைத்தான். “செயற்கையைத் தீட்டாதே, இயற்கையைத் தீட்டு” என்பான் நாசகார பால் கொக்கெய்ன். எது இயற்கை, எது செயற்கை? தாஹிதியர்களுக்குக் கொடுத்த பால்வினை நோய் இயற்கையா? காதின் ஒரு ஓரத்தைக் கொஞ்சம் நறுக்கினால் முழுக் காதையும் நறுக்கியதாக ஊரெல்லாம் அவதூறு பரப்பியது இயற்கையா? அல்லது செயற்கையா?

சுபாவப்படி இயற்கையின் ஒரு பகுதியாகத் தன்னை உணர்ந்தான் வான்கா. இயற்கையைப் போலிசெய்வதில் பெருமிதம் அடைந்தான். இயற்கைதான் என் மூலம் தன்னை (“தன்னைத் தானே”) போலிசெய்துகொள்கிறது என்று புளகித்தான். இயற்கை தன்னைப் போலிசெய்துகொள்ளத் தன்னை (வான்காவை) பயன்படுத்தினாலும் போலிசெய்யப்படுவதை அது அறியாது என்று நினைத்தான் வான்கா. ஆனால் அப்படி நினைத்தால் இரண்டு இயற்கைகள் இருப்பது போலவும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போலவும் ஆகுமே என்றும் அவனுக்குத் தோன்றியது.

திடீரென இந்த சிந்தனையின் ஓட்டம் வான்காவின் தூரிகையின் கையினைப் பிடித்து நிறுத்தியது. கடவுளே! இதெல்லாம் என் சிந்தனைகள் அல்லவே? வெயில் பூரானா? இதென்ன வக்கிரம்? என் பெயர் வான்கா அல்ல. எங்கிருந்து வருகிறது இந்தத் தட்டும் சத்தம்? எனக்கு என்ன ஆயிற்று? வான்காவுக்கும் வியர்த்துக்கொட்டியது. நன்றாகத்தான் இருந்தான், ஆனால் திடீரென்று சாக வேண்டும் போல் இருந்தது. இடுப்பில் ஏதோ உறுத்தியது. வான்கா அங்கே கைவைத்துப் பார்த்தான். இயந்திரத் துப்பாக்கி. அதிர்ந்தான். என்ன இது? எப்படி என்னிடம் வந்தது? மரணத்தின் குரல் கேட்டுத் திரும்புவது போல் திரும்பியது துப்பாக்கி.

ரட்டட்டட்டட்டட்!

நெஞ்சில் பகீரென்ற வலி. தோட்டாக்கள் இதயத்திற்குப் பக்கவாட்டில் சென்று புதைந்துகொண்டன. வான்காவுக்கு ஒன்றும் புரியவில்லை. நெஞ்சைத் தொட்டுப் பார்த்தான். அக்ரிலிக் அல்ல, ரத்தம். அக்ரிலிக் இன்னும் விலை அதிகம்.

எனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது? பிரான்சில் உள்ள ஆர்லேயா இது? இந்த சூரியனுக்கு என்ன ஆயிற்று? யார் இந்த பால் கொக்கெய்ன்? இது என்ன மொழி? கேள்விகள் அலைபுரண்டன.

ஆனால் அவை மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தன.

Tags: , ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar