7. மோனாலிசாவின் கண்கள்

in புனைவு

(‘ஒரு லோட்டா ரத்தம்’ நெடுங்கதையின் தொடர்ச்சி. முந்தைய அத்தியாயங்கள்: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு)

உலகில் ஒவியங்கள் ஏகப்பட்டவை இருக்கின்றன. அவற்றில் பதினாறாம் நூற்றாண்டு இத்தாலிய ஓவியர் லியோனார்டோ டாவின்சியின் ‘மோனாலிசா’ முதன்மையானது. உலகின் ஆகப்புகழ்பெற்ற இந்த ஓவியம், தற்போது பிரெஞ்சில் பாரிசின் லூவர்1 அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நான் முதல் முறையாக பிரெஞ்சிற்குச் சென்றபோது லூவருக்குச் சென்று இந்த ஓவியத்தைப் பார்த்திருக்கிறேன். அருகில் இருந்த பல அமரத்துவம் பெற்ற ஓவியங்கள் ஈ ஓட்டிக்கொண்டிருக்க, மோனாலிசாவிற்கு மட்டும் சிறப்பு போணி ஆகிக்கொண்டிருந்தது. இந்தப் பிரபலம் எப்படி சாத்தியமானது?

நாம் பல தருணங்களில் இந்த ஓவியத்தைப் பார்த்து வியந்து மறந்துவிட்டிருக்கிறோம். கூகுள் படத் தேடலில் monalisa என்று தேடினால் monalisa hot முடிவுகளும் சேர்ந்து கிடைக்குமளவு மோனாலிசாவின் பயணம் தமிழ்ச்சூழல் வரை வந்துவிட்டிருக்கிறது. இந்தப் பெண்ணிடம் அப்படி என்ன இருக்கிறது, நிர்வாணப் படமாகக்கூட இல்லாத ஒரு ஓவியம் ஏன் இவ்வளவு பிரசித்தி பெற்றுள்ளது என என்றைக்காவது நாம் நம்மை நாமே கேட்டுக்கொண்டிருக்கிறோமா? அங்கேதான் நான் வருகிறேன்.

ஒரு படைப்பைப் புகழ்பெற்றதாக்குவது எந்தத் தன்மை? படைப்பின் ‘உண்மை’ப் பொருள் எதுவாயினும் அதைத் துய்ப்பவர் தான் காணும் அர்த்தத்தை அதில் ஏற்ற அனுமதிக்கிறது கலை. பல பரிமாணங்களைக் கொண்டதுதான் உண்மையான கலைப் படைப்பு. அதனால்தான் கியூபிச ஓவியர்கள்கூட ஒரு ஒவியத்திலேயே எல்லா பரிமாணங்களையும் ஒரே சமயத்தில் கொண்டுவந்துவிடப் பார்த்தார்கள். டாவின்சியின் மோனாலிசா, காட்சியைக் கலைத்துப்போடும் விளையாட்டுகளில் இறங்காமலே பல்பொருள்கூறுதன்மையைச் சாதிக்கிறது.

டாவின்சியின் மோனாலிசா சொரசொரப்பான பரப்பில் வரையப்பட்டிருக்கிறாள். நேர் வகிடு, தலையை மூடிய மெல்லிய முகத்திரை, அரைகுறை முன்வழுக்கை என்று சொல்லத்தக்க பெரிய நெற்றி, மீசையில்லாத கமல்சாரை நினைவுபடுத்தும் புருவங்கள், வர்ணிக்க முடியாத சிறிய கண்கள், நீண்ட, கூரிய, ஆனால் எடுப்பில்லாத மூக்கு, அளவான புன்னகை, சிறிய தாடை, புஷ்டியான தோள்களைத் தொடும் குட்டையான கூந்தல், பொருத்தமான சந்தர்ப்பங்களில் விம்மக்கூடிய மார்பகங்கள், கட்டிய கைகள், கித்தான் மீதுள்ள கறைகளைத் தவிர மாசு மருவற்ற சருமம், இவற்றைச் சுற்றிப் பெண்கள் அணியும் ஒரு ஆடை, இலக்கணப் பிழையில்லாத உடல்மொழி… இதுதான் மோனாலிசா.

உழைப்புக்குப் பழக்கப்படாத உடல், வாழ்வியல் சிரமங்கள் எதையும் பிரதிபலிக்காத, “நன்றாகத்தான் இருக்கிறேன், எனக்கென்ன கேடு?” என்று பதிலை எதிர்பாராமல் கேட்கும் முகம் மோனாலிசாவுடையன. கூந்தலுக்கு நீளமான வண்ணம், தோலுக்கு மென்மையான வண்ணம், சதைப்பாங்கான இடங்களுக்குத் திரட்சியான வண்ணம் என்று பயன்படுத்தியிருப்பது வின்சியின் மேதைமைக்கு எடுத்துக்காட்டு. முக நிழல்கள் அவள் வயதை அம்பலப்படுத்திவிடுகின்றன. மோனாலிசாவை இளம்பெண் என்று வர்ணிக்க முடியாது, ஆனால் அப்படி வர்ணிப்பதும் புரிந்துகொள்ளப்படக்கூடியதே. அவளின் ஆடை பளபளப்பாக, மடிப்பு குலைந்தாலும் கசங்காத தரமுள்ளதாக இருப்பதிலிருந்து அதை அணிந்திருப்பவரின் பொருளாதார நிலை வசதியானது என்று காட்டுகிறார் வின்சி.

ஆகச்சிறந்த இலக்கியப் படைப்புகளைப் படிக்கும்போது அவை நம்மைப் பற்றிப் பேசுபவையாக உணர்கிறோம். மேகங்களற்ற இரவில் சாலையில் நடந்து செல்லும்போது நிலவைப் பார்த்தால் அதுவும் நம்மைப் பார்ப்பது போல உணர்கிறோம். இந்த மரபில் மோனாலிசாவின் விழிகளும் நம்மையே பார்ப்பது போல் நமக்குத் தெரிகின்றன. ஆனால் அவள் கண்ணின் கருவிழிகளைப் பாருங்கள். அவை விழிகளுக்கு நடுவில் இல்லை; வலது ஓரத்தில் இருக்கின்றன. அவை நம்மைப் (ஓவியரைப்) பார்க்கவில்லை, நமக்கு அருகில் இருப்பவரைப் பார்க்கின்றன. படம் வரையப்பட்டபோது ஓவியருக்கு அருகில் யார் இருந்திருக்க முடியும்? ஓவியத்தை வரையுமாறு வின்சியை ‘கமிஷன்’ செய்தது பட்டுத்துணி வியாபாரியான அவரது கணவர் டான் மோனாலிசா. மனைவியின் உருவப்படம் வரையப்படுகையில் அதைக் கணவர் அருகில் நின்று பார்ப்பதுதானே இயற்கை? கலை விமர்சகர்களால் புதிரான புன்னகை என்றும் நம்மவர்களால் மையமான சிரிப்பு என்றும் விவரிக்கப்படும் மோனாலிசாவின் சாந்தமான புன்னகை, கணவனை இலக்கிட்டுச் செய்யப்படுகிற ஒன்று. இந்தச் சூழலைக் கொண்டு ஊகிக்கும்போது, ஒரு பிரபல ஓவியரால் தனது உருவப்படம் வரையப்பட வேண்டும் என்ற ஒரு மேட்டுக்குடி மனைவியின் ஆசை நிறைவேறுவதில் எழும் திருப்திப் புன்னகையது என்று கூறலாம்.

புகைப்படக் கலைஞர்களுக்கு இருப்பது போல் ஓவியர்களுக்கும் ஸ்டுடியோக்கள் உண்டு. லிசாவைத் தனது ஸ்டுடியோவில் உள்ள ஒரு பிரம்மாண்டமான நிலப்பரப்பு ஓவியத்தைப் பின்னணியாக வைத்து வரைந்திருக்கிறார் வின்சி. இங்கே பெண் நிஜம், பின்னாலுள்ள படம் புனைவு. நிஜத்தையும் புனைவையும் தனிப்படுத்திக் காட்ட வின்சி இருவேறு வண்ணத் தொனிகளைப் பயன்படுத்துகிறார். ஆனால் ஓவியம் என்பதும் புனைவுதானே? ஒரு புனைவுக்குள் புனைவாகச் சித்தரிக்கப்படும் புனைவையும் (நிலப்பரப்பு ஓவியம்) நிஜமாகச் சித்தரிக்கப்படும் புனைவையும் (பெண்) கொண்டிருப்பது இந்த ஓவியத்தின் சிறப்பு.

லூவர் அருங்காட்சியகத்தில் மோனாலிசா ஓவியத்திற்கு முன் கூட்டம் போடும் கலைப் பிரியர்கள் சமூக, வரலாற்றுப் பின்னணிகளைப் பற்றிக் கவலைப்படாத சுற்றுலாப் பயணிகள். மோனாலிசாவின் புன்னகையில் பொதிந்திருக்கும் ஒரு பிரபஞ்ச உண்மையே அவர்களைச் சுண்டியிழுக்கிறது. ஒரு மலரை அதன் செடியிலிருந்து பறித்துப் பயன்படுத்துவது போல எந்த ஒரு கலைப் படைப்பையும் அதன் சூழலிலிருந்து பெயர்த்தெடுத்து ரசிப்பதும் அவசியம். மோனாலிசா விசயத்தில் இதுதான் நடக்கிறது. புயலுக்கு முந்தையதோ பிந்தையதோ அல்லாத ஒரு அமைதியைக் கண்களில் ஏந்தி, ஒரு புன்னகையின் தொடக்கத்தை மெல்லிய இதழ்களில் காட்டி, “நான் பெண்ணாகவே இருந்தாலும் யாருக்கும் ஆபத்தில்லாமல் சமர்த்தாகக் கைகட்டி உட்கார்ந்திருக்கிறேன் பார்” என்பது போல் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள் மோனாலிசா. ‘பெண்ணுக்கு வேண்டியதைக் கொடுத்துவிடு, அவள் சமர்த்தாக இருப்பாள்’ என்பதுதான் ஒரு கலைஞன் என்ற முறையில் வின்சி நமக்குச் சொல்லும் செய்தி போலும்.

1 Fodor’s Paris 2011

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar