8. லூவர் தீவிபத்து

in புனைவு

(‘ஒரு லோட்டா ரத்தம்’ நெடுங்கதையின் தொடர்ச்சி. முந்தைய அத்தியாயங்கள்: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது)

MONA LISA TOTAL DAMAGE என்றது சங்கேதமொழிக் குறுஞ்செய்தி. தமது ஐபோனை எடுத்துப் பார்த்த மைக், அதை அடக்கிவிட்டு மடிக்கணினியில் சாலிட்டேரைத் தொடர்ந்தார். குமார் மாஸ்கோ செல்லும் விமானத்தின் ஜன்னலுக்கு வெளியே மிதந்துகொண்டிருந்த மேகக் கம்பளத்தின் மேடு பள்ளங்களில் லயித்தவனாக இருந்தான்.1

“லூவர் மியூசியத்தில் மோனாலிசா ஓவியத்தை யாரோ எரித்துவிட்டார்களாம்” என்றார் மைக், பார்வையைத் திரையிலிருந்து எடுக்காமல்.

குமார் அதிர்ச்சியில் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

“படைப்பாளிகள் சாவதுகூடப் பரவாயில்லை… படைப்புகளும் அழிய ஆரம்பித்திருப்பதுதான் பிரச்சினை… திஸ் இஸ் ரியலி ஒரியிங்” என்றார் மைக்.

“வேறு ஏதாவது விவரங்கள் தெரிந்ததா சார்?” என்றான் குமார்.

“இல்லை, குறுஞ்செய்திதான் வந்தது… அரை மணிநேரத்தில் ரிப்போர்ட் அனுப்புவார்கள்… ஆனால் இதற்கும் கொலைகளுக்கும் தொடர்பிருப்பதில் எனக்கு சந்தேகம் இல்லை…”

“அனேகமாய்…”

“அதுவும் இவ்வளவு குறுகிய காலத்தில் – மை காட், இன் டூ டேஸ்! – இத்தனை குற்றங்களைச் செய்ய முடிவதைப் பார்த்தால் இதன் பின்னால் ஒரு அமைப்பின் பலம் இருக்கும் என்று தோன்றுகிறது…”

“எனக்கும் அப்படித்தான் சார் தோன்றுகிறது… அது யாரென்றும் ஊகிக்க முடிகிறது…”

“யெஸ், அது வெள்ளிடை மலை… கலை இலக்கியத்தில் ஆர்வமுள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றே ஒன்றுதான்…”

“டு யு மீன்…” குமாரின் கண்களை வியப்பு அகல விரித்தது…

“நோ, நீ நினைப்பது போல் அரசியல் கட்சிகள் எதையும் சொல்லவில்லை… நான் சொல்வது அ.கொ.தீ.க. என்கிற அழிவு கொள்ளை தீமை கழகத்தை” என்றார் மைக் அமைதியாக.

“அப்படியென்றால் நாம் முதலில் சந்தேகப்பட்ட நபர்களை விட்டுவிடுவதா?”

“அவர்கள் ஏன் அ.கொ.தீ.க.வின் தமிழக கிளையாக இருக்கக் கூடாது என்பதுதான் இப்போது என் கேள்வி… இந்தக் கோணத்தைத் துரத்தினால் அவர்களை விட்டுவிடலாமா வேண்டாமா என்று முடிவு செய்யலாம்… ஏனென்றால் ஒரு அமைப்பின் பலம் கிடைத்தால் அவர்கள் மேலும் ஆபத்தானவர்களாகிறார்கள்…”

“பிரில்லியன்ட் தியரி” என்றான் இந்த முறை குமார்.

“ஆமாம்… இந்தத் தியரியில் இன்னொரு வசதி இருக்கிறது… குற்றங்களுக்கு நோக்கம் கற்பிக்க வேண்டியதில்லை” என்றார் மைக், வான்கா கொலைக்குக் குமார் அளித்த விளக்கங்களை நினைவுகூர்ந்து.

மைக்கின் மடிக்கணினியிலிருந்து மின்னஞ்சல் ஒலி எழுந்தது.

“ரிப்போர்ட் வந்துவிட்டது” என்றார் மைக்.

வந்தது ரிப்போர்ட் அல்ல. சம்பவ இடத்தின் புகைப்படங்களும் வேறு தடயங்கள் இல்லை என்ற ஒரு சிறு குறிப்பும்தான்.

மோனாலிசா ஓவியத்தின் ஃப்ரேம்கூட எரியாமல் படம் மட்டும் எரிந்து சாம்பலாகியிருந்தது. அக்கம்பக்கத்தில் வேறு எந்தச் சேதமும் இல்லை. குறிவைத்து நடத்தப்பட்ட கச்சிதமான தாக்குதல். மைக் மீண்டும் குற்றவாளியின் தொழில் நேர்த்தியை வியந்தார். கடைசி புகைப்படத்திற்கு வந்தவர், அதில் இருந்த காட்சியைக் கண்டு புதிரடைந்தார். குமாரிடம் காண்பித்தார்.

“குமார், கேன் யூ ரெகக்னைஸ் திஸ் ஆப்ஜெக்ட்? இது அங்கே கண்டெடுக்கப்பட்டது… இஸ் திஸ் சம் கைண்ட் ஆஃப் வெப்பன்? நின்ஜாக்கள் பயன்படுத்தும் ஷுரிக்கென் போல் இல்லை?”

குமார் பார்த்துத் திகைத்தான். அவன் அந்தத் தடயத்தை எதிர்பார்க்கவில்லை. பிறகு உதடுகளில் ஒரு வெற்றிப் புன்னகையைத் தவழ விட்டான்.

“சார், இது ஆயுதம் அல்ல, தின்பண்டம்… இதற்குப் பெயர் முறுக்கு…”


1 விமானம் பறக்கும்போது அதன் பயணிகள் கைபேசி பயன்படுத்த அனுமதி இல்லை.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar