9. பூலோக ரம்பம்

in புனைவு

(‘ஒரு லோட்டா ரத்தம்’ நெடுங்கதையின் தொடர்ச்சி. முந்தைய அத்தியாயங்கள்: ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு)

புனித பீட்டர்ஸ்பர்க், 1875.

நெவ்ஸ்கி தெரு அருகே பியோனிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய வேனில் பூங்காவில் ஒரு பிர்ச் மரத்தடியில் அமர்ந்திருந்தார் ஃபியதோர் மிஹைலவிச் தஸ்தயெவ்ஸ்கி என்கிற தாஸ்தாயெவ்ஸ்கி. நரையோரக் காதுகளில் ஒன்றின் மடலுக்குப் பின் செருகியிருந்த பென்சிலை பழகிய லாவகத்தோடு எடுத்தார். கண் முன்னே விரிந்துகொண்டிருந்த மனித நாடகத்தைக் குறிப்பெடுக்கத் தொடங்கினார்.

ஒரு சிறுவன் – பன்னிரண்டு வயதுக்கு மேல் இருக்காது – தன்னைவிட ஏழெட்டு வயது மூத்தவனான ஒரு இளைஞனின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான்.

“சாஷா! நீ என்னிடம் இறைஞ்சுவதற்குப் பதிலாக உன் தமக்கையிடம் பேச முயல வேண்டும். இனியும் என்னால் பொறுமை காக்க முடியாது – ”

“காவ்ரில் அலெக்சியெவிச், தயவுசெய்து ஒரு கணம் நான் கூறுவதைக் கேளுங்கள்! ஜென்யாவின் இதயம் எங்கிருக்கிறது என உங்களுக்குத் தெரியாதா?”

இருவரும் பேசிக்கொண்டே அவர் பார்வையை விட்டு விலகிச் சென்றனர். தாஸ்தாயெவ்ஸ்கி குறிப்பேட்டைப் பையில் வைத்துக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார்.

கண் முன்னே நடந்தவை ஒரு புதிய நாவலின் கருவை அவருக்குள் விதைத்திருந்தன. நூறு பக்கத்தில் அடக்கிவிடலாம். முன்பணத்தில் முதலில் புகையிலைக்காரன் இவான் வசீலியெவிச்சின் கணக்கை பைசல் செய்ய வேண்டும். புது இறகையும் மைப்புட்டியையும்கூடப் பிறகு வாங்கிக்கொள்ளலாம். புதுத் தீர்மான சுறுசுறுப்பில் விருட்டென்று எழுந்து தெருவிற்குச் சென்றார் தாஸ்தாயெவ்ஸ்கி. நெவ்ஸ்கி பாதசாரிகள் ஒவ்வொருவரும் தான் படைக்கவிருக்கும் இளம் கதாநாயகனின் தார்மீகப் போராட்டங்களைப் பற்றி மனதிற்குள் பல விதமாக விவாதித்துச் சென்றபடி இருந்தது போல் தாஸ்தாயெவ்ஸ்கிக்குத் தோன்றியது.

கண்டது கதையாக வளரத் தொடங்குவதற்குள் மண்டையில் ஓங்கி ஒரு போடு. மன வேதனைக்கு ஸ்தூல வடிவம் கொடுத்தது போல் வலித்தது அவர் தலையில். புனித பீட்டர்ஸ்பர்கின் வேனிற்கால இரவு தமக்கெனப் பிரத்தியேகமாகக் கவிந்தது போலிருந்தது தாஸ்தாயெவ்ஸ்கிக்கு. வலியின் தீவிரத்தைக் கொண்டு கட்டையா வெண்கலமா என்று ஊகித்துக்கொண்டு, முந்தைய அனுபவம் ஒன்றின் நினைவில் வெண்கல முனை பொருத்திய பழைய மரத்தடி என்று (சரியாக) தீர்மானித்து மயங்கினார். அவருக்குத் தெளிவதற்குள் இரவாகிவிட்டிருந்தது.

சிறிய, சற்றே இருண்டதொரு அறையில் அவர் கண்விழித்தார். அவர் படுத்திருந்த படுக்கையைச் சுற்றிக் கொசு வலை போல மெல்லிய திரை மூடியிருந்தது. மனிதக் கதகதப்புக்குப் பழக்கப்பட்டதாகத் தெரிந்த அந்த இடத்தில் படுக்கைக்கு எதிரே ஒரு கனத்த நாற்காலியில் ஓர் உருவம் அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. கண்களுக்கு அரையிருள் பழகப் பழக தாஸ்தாயெவ்ஸ்கி பரிச்சயமான ஓர் இளைஞனை அவ்வுருவத்தில் அடையாளம் கண்டார். பரிச்சய உணர்வு அவரது அதிர்ச்சியை விழுங்கியது. அப்போதும் அது மெய்யென அவர் நம்பவில்லை. அதன் சாத்தியத்தை அவர் அங்கீகரிக்கவில்லை. எனினும் அவர் தன்னைக் கேட்டுக்கொள்ளத் தவறவில்லை – இவன் இடியட் நாவலில் வருபவன் அல்லவா?

அந்த அகன்ற மொரோசோவ் நாற்காலியில் இளவரசன் லெவ் நிகோலாயெவிச் மிஷ்கின் அசையாமல் கிடந்தான். தாஸ்தாயெவ்ஸ்கியின் அசைவுகளை அவன் பார்த்ததோ கேட்டதோ போலத் தெரியவில்லை; ஆனால் அவன் கண்கள் இருளில் கனன்றன, காட்டுத்தனமான ஒரு வெறித்தலில் நிலைகுத்தியிருந்தன.

படுக்கையை விட்டு இறங்கி நின்ற தாஸ்தாயெவ்ஸ்கி அவனை மிகுந்த எச்சரிக்கையுடன் பார்த்தார். திடீரென இளவரசன் குபீரெனச் சிரித்தான், அத்தனை நேரமும் சிரிப்பு விரதம் இருந்தவனைப் போல.

“முற்றிலும் நேர்மறையான, அப்பட்டமான அழகுடைய இயல்புள்ள ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க ஆசைப்பட்டாயாமே?” என்றான் இளவரசன் குத்தலாக.

தாஸ்தாயெவ்ஸ்கி பீதியில் உறைந்து அவனைப் பார்த்தார். கிறிஸ்துவின் உருவமா? இளவரசன் சட்டென அமைதியடைந்தான். தாஸ்தாயெவ்ஸ்கி தன்னை உருவாக்கியதன் நியாயத்தை அவர் முகச் சுருக்கங்களில் படிக்க முயன்றது போல் ஆராய்ந்தான். பிறகு அவரை முழுவதும் மறந்துவிட்டது போல் இருந்தான். அவர் அவனையே பார்த்துக்கொண்டு காத்திருந்தார். அரை மணிநேரம் கடந்தது.

இளவரசன் எழுந்து கைகளை கோட்டுப் பைக்குள் நுழைத்துக்கொண்டு அறைக்குக் குறுக்கும் நெடுக்கும் நடக்கவும் அர்த்தமின்றி முணுமுணுக்கவும் தொடங்கினான்; பிறகு கத்தவும் சிரிக்கவும் ஆரம்பித்தான். தாஸ்தாயெவ்ஸ்கிக்குக் கால்கள் நடுங்கின. அவற்றைச் சிறிது நேரத்திற்குப் பயன்படுத்த முடியாதென உணர்ந்தார்.

“உம்முடைய நகல் கிறிஸ்து எத்தகைய துன்பத்தையும் தாங்குவான். ஆனால் அது புனைவுக்குள். நடந்தது என்ன தெரியுமா?”

தாஸ்தாயெவ்ஸ்கி பதில் சொல்லவில்லை. அவருடைய புகழ்பெற்ற நாக்கு, வாய்க்குள் ஒரு ஓரமாக ஒதுங்கியிருந்தது.

இளவரசன் கோட்டுப் பையிலிருந்து ஒரு அச்சிட்ட தாளை உருவியெடுத்தான்.

“உனக்கு பூலோக கிறிஸ்துவா வேண்டும்? இந்தாரீர், நான் உனக்கு அந்துகிறிஸ்துவைத் தருகிறேன் பின்வருமாறு:”

இளவரசன் மிஷ்கின் உலக இலக்கியத்தின் சிறப்பான பாத்திரங்களில் ஒன்று. மிஷ்கின் தாஸ்தாயெவ்ஸ்கியின் பாத்திரங்களிலேயே மிக நல்லவனும்கூட. ஆண்டவராகிய யேசு கிறிஸ்துதான் தாஸ்தாயெவ்ஸ்கிக்கு இந்தப் பாத்திரத்தை உருவாக்குவதற்கான முன்மாதிரியாக இருந்திருக்க வேண்டும். அவருடைய ‘த இடியட்’ நாவலினுடைய இந்தக் கதாநாயகன் நாவலின் தொடக்கத்தில் ஒரு நிகழ்வைச் சொல்கிறான். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவன் அந்தத் தண்டனையை அனுபவிக்கக் கடைசி நிமிடத்தில் தவறுவதால் குழந்தைகளிடம் கல்லடி படுவதை மிஷ்கின் கூறுகிறான். இது தாஸ்தாயெவ்ஸ்கிக்குக் கிடைத்த சொந்த அனுபவம். ஜார் மன்னரால் தடைசெய்யப்பட்ட தத்துவங்களை விவாதித்தமைக்காக தாஸ்தாயெவ்ஸ்கியும் அவரின் நண்பர்களும் சிறையிலடைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனை நாளில் அவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்காக வரிசையாக நிறுத்தப்படுகிறார்கள். மரணம் மட்டுமே அவர்கள் வாழ்க்கையில் எதிர்பார்க்கிற ஒரே விசயம் என்ற நிலையில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு வெறும் சிறைத் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. மரண தண்டனை நிறைவேறாத அதிர்ச்சியில் சிலருக்கு மனச்சோர்வும் சிலருக்கு மனச்சிதைவும் ஏற்படுகிறது. மொத்த நிகழ்வும் அவர்களை மிரட்டுவதற்காக நடத்தப்பட்டிருக்கிறது (mock execution). தாஸ்தாயெவ்ஸ்கிக்கு நான்கு குழந்தைகள் இருந்தார்கள். 1867இல் அவருடைய மனைவி நிலத்தடி மனிதனுக்கு அருகில் வட்டமாக ஒரு குதிரை…

தாஸ்தாயெவ்ஸ்கியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. பெரும் வேதனையை அடக்கிய ஓர் அலறல் அவரது ஆன்மாவிலிருந்து வெடித்துக் கிளம்பியது.

இளவரசன் சலனமின்றி அவரை வேடிக்கை பார்த்தான்.

“பொது அறிவுத் துளிகள் மாதிரி எதையாவது எழுதிவிட்டுப் போக வேண்டியதுதானே, இலக்கியம் என்ன வேண்டிக் கிடக்கிறது?” என்றான் வெறுப்புடன்.

இளவரசனை பூராவும் வேறு விதமாகக் கற்பனை செய்திருந்த தாஸ்தாயெவ்ஸ்கி நொந்து சரிந்தார். கை கால்கள் இழுத்துக்கொண்டன. வாயில் நுரை தள்ளியது.

இளவரசன் தன் கழுத்தில் இருந்த 20 கோப்பெக் தகரச் சிலுவையை அறுத்து அவர் மார்பின் மேல் போட்டான். அதற்குப் பிறகு அவன் அங்கு இருக்கவில்லை.

Tags: , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar