சம்பவ மாலை

in சிறுகதை, புனைவு

புதுவையில் ஒரு இலக்கிய நிகழ்வை முடித்துக்கொண்டு திரும்பிய எனக்காக வீட்டில் ஒரு கடிதம் காத்திருந்தது. என் மேஜை மேல் கிடந்த சின்னஞ்சிறு வெளிர்நீல நிற அஞ்சல் உறையது. எனக்கு முன்பு அதை யாருமின்னும் பிரிக்கவில்லை. எனக்கு வரும் கடிதங்களை வேறு யாராவது பிரித்தால் வீட்டை சந்தி சிரிக்கச் செய்துவிடுவேன் என்பதால் இந்த ஏற்பாடு.

கடித உறையில் ஜப்பானிய அஞ்சல் தலை ஒட்டப்பட்டிருந்தது. உள்ளே ஜப்பானியர்களுக்கே உரிய நேர்த்தியான கையெழுத்தில் சீரான ஆங்கிலம். அதைப் படிக்கத் தொடங்கினால் இப்படி இருந்தது –

அன்புள்ள பேயோன் அவர்களுக்கு,

மாலை வணக்கம். உங்களுக்கு என்னைத் தெரியாது, ஆனால் சற்று நேரத்தில் தெரிந்துகொள்ளத்தான் போகிறீர்கள். 1997ல் உங்கள் முதல் ஜப்பான் பயணமாக க்யோட்டோவிற்கு வந்தபோது எங்கள் வீட்டினருகே இருந்த கொமாச்சி விடுதியில் தங்கினீர்கள். நீங்கள் தங்கியது அங்கெனினும் சாப்பாடு எங்கள் வீட்டில் என ஒழுங்காகியிருந்தது. நீங்கள் தினமும் ஐந்து முறை எங்கள் வீட்டில் சாப்பிட்டீர்கள். உங்களுக்குப் பிடித்த உணவு யுடோன் நூடுல்ஸ். ஒவ்வொரு முறையும் அதை நிறைய சாப்பிட்டுவிட்டு “உடல், மனம் இரண்டும் நிரம்பிவிட்டது” என்று அலுப்பில்லாமல் ஒவ்வொரு முறையும் சொல்வீர்கள். நினைவிருக்கிறதா? ஒருமுறை உங்களுக்குப் பிடித்த யுடோன் நூடுல்ஸ் கிடைக்கவில்லை. சுஷிதான் இருந்தது. ஆனால் நீங்கள் ஏமாற்றமடையவில்லை. “ஜப்பானிய உணவுதானே?” என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு அதையும் நிறைய சாப்பிட்டீர்கள்.

உங்களுக்கு அன்று தின்ற சுஷியை நினைவிருந்தால் எங்கள் வீட்டு சச்சிகோவையும் நினைவிருக்கும். சச்சிகோ கிமுரா எங்கள் வீட்டில் இருந்த ஒரு முப்பது வயது முட்டாள். ஆனால் உங்கள் பார்வையில் அவள் அழகாகத் தெரிந்திருக்கிறாள் போலும். நான் அந்த சச்சிகோவின் மகன். அந்த தர்க்கப்படி உங்கள் மகனும்கூட. உங்களைக் காதலித்ததுதான் சச்சிகோ செய்த கடைசித் தவறு என்று சச்சிகோ அடிக்கடி சொல்வாள். இப்போது அவளுக்கு வேறு திருமணமாகிவிட்டது. வசதியாக, திருப்தியாக இருக்கிறாள். நான் க்யோட்டோவின் சகாஷிடாமோன் அகாடமியில் படிக்கிறேன். அந்தப் பள்ளி என் வளர்ப்புத் தந்தையுடையது. அவர் நல்ல மனிதர், ஆனால் பணத்தின் அருமை தெரியாதவர். அதனால் பணத்தை வங்கிக் கணக்கின் பிடியிலிருந்து விடுவிக்க மறுக்கிறார்.

நீங்கள் க்யோட்டோவுக்கு வந்தது 1997ல். இப்போது 2012. ஆக, எனக்கு 14 வயதாகிறது. 14 வயதில் எனக்குள்ள செலவுகளைப் புரிந்துகொள்ள யாருமில்லை. என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் எல்லாமே என் வளர்ப்புத் தந்தையின் பெயரிலுள்ள வங்கிக் கணக்கில் முடங்கிக் கிடக்கிறது. இதை நான் எந்தப் பெண்ணிடமாவது சொன்னால் எடுபடுமா? அல்லது என் வளர்ப்புத் தந்தையின் இன்சூரன்ஸ் பத்திரத்தைக் காட்டி கடையில் பீர் வாங்கத்தான் முடியுமா? முடியாதுதானே?

என் உயிரியல் தந்தையைப் பற்றி என் தாயிடம் பல முறை கேட்டிருக்கிறேன். என் கண்கள் உங்களுடையவை போலிருப்பதாக சச்சிகோ சொல்லியிருக்கிறாள். நீங்கள் இறந்துவிட்டதாகச் சிறிது காலம் என்னை நம்பவைத்தாள் சச்சிகோ. ஆனால் என் செலவுகள் அதிகரித்துக்கொண்டே போவதைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது, இந்த ஆள் எங்காவது உயிரோடு இருப்பார் என்று. நிறைய செலவு செய்து உங்களைக் கண்டுபிடித்திருக்கிறேன். எனக்கு என் தலைமை ஆசிரியரிடம் பணம் கேட்டு நிற்பது அலுத்துவிட்டது. நீங்கள் அனுப்பப்போகும் சிறு தொகையை முதலீடாக வைத்து என் நண்பர்களுடன் சேர்ந்து டோக்கியோவில் ‘பச்சிங்கோ பார்’ ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறேன் (பச்சிங்கோ பாருக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் கூகுளில் தேடுங்கள். கூகுளும் தெரியாது என்றால் அகராதியில் பாருங்கள். அகராதி வைத்திருக்கிறீர்கள்தானே?).

நீங்கள் வாழும் கலாச்சாரத்தில் ‘கடந்த காலத்திற்கு’ அனுமதி இல்லை என்று எனக்குத் தெரியும். இதுதான் விஷயங்களைச் சிக்கலாக்குகிறது. ஒருவேளை உங்களால் பணம் அனுப்ப முடியவில்லை என்று வையுங்கள், எனக்கு திடீரென்று சகோதர பாசம் பொங்கி வழியத் தொடங்கிவிடும். எனக்கொரு அரைச் சகோதரன் இருப்பதை நான் அறிவேன். அவனுக்கு ஒரு கடிதம் அல்லது என் அன்பிற்குரிய சின்னம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதினால் உங்கள் சொகுசான வாழ்க்கை தடம் புரண்டுவிடாது? போன் செய்து பேச ஆசைதான், ஆனால் எனக்கு ஆங்கிலம் தெரியாது. அதை வேகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இதைக்கூட என் வக்கீல்தான் எனக்காக எழுதுகிறார். நீங்கள் அனுப்பும் பணத்தில் ஒரு பகுதி அவருக்குக் கட்டணமாகும்.

உங்கள் பணத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். என் தொழில் முயற்சி பாதுகாப்பாக நடைபெற என் யாகுசா நண்பர்கள் உதவுவார்கள். நீங்கள் ஒருமுறை அனுப்பினால் போதும். நானும் ஒருமுறைதான் கேட்பேன். 500,000 யென்னுக்குக் குறையாமல் அனுப்புங்கள். கண்டிப்பாக டாலரில் அனுப்புங்கள்.

இவண்
ரியுனோசுகே யோஷிடா,
க்யோட்டோ

உதவியவர்
இச்சிரோ யோஷிடா,
யோஷிடா & பார்ட்னர்ஸ், எல்எல்பி.,
க்யோட்டோ

நான் படித்தது என்னை சிந்திக்கவைத்தது. இதயம் மிக வேகமாக அடித்துக்கொண்டது. சடக்கென்று அந்தக் கடிதத்தைக் கசக்கிப் பந்தாகச் சுருட்டிக் குப்பைத் தொட்டியில் எறிந்தேன். பிறகு என்ன தோன்றியதோ, எறிந்ததை வெளியே எடுத்து இரண்டாக, நான்காக, எட்டாக, பதினாறாக, முப்பத்தியிரண்டாக, அறுபத்திநான்காக, நூற்றியிருபத்தியெட்டாக, நூற்றிமுப்பதாக, நூற்றிமுப்பத்திமூன்றாக கிழித்து மீண்டும் குப்பைத் தொட்டியிலேயே போட்டேன்.

போட்டு நிமிர்ந்தால் அறை வாசலில் மனைவியின் நிழலாட்டம்.

“யாருகிட்டேந்து லெட்டர்?” என்றாள்.

“பணம் கேட்டு யாரோ பையன்” என்றேன் வெலவெலத்து.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar