ராட்சத மலர்

in கட்டுரை, கவிதை

யானையே, நீ ஒரு ராட்சத மலராவாய்
உன் இதழ்களிலேயே மெல்லியவை உன்னிரு காதுகள்
ஈக்களும் குளவிகளும் மகரந்தம் எடுக்க
ரீங்கரித்தருகில் வருகையில்
உன்னிதழ்கள் சாமரமாய் அசைந்தவற்றை விரட்டுமோ?
அதிசயப் பெருமலரே, உன் நீண்ட வெண்கொம்புகள்
உன் இதழ்களைக் காக்கும் விலைமதிப்பற்ற முட்களாகும்.
தொட விழையும் ஒரு இரு மடங்கு ராட்சத விரலை
குத்திவிடக்கூடியவையோ உன்னிரு வெண்முட்கள்?

இறைச்சி மலை உன்னுடல் எனினும்
தரைதொடு காலடியின் தோற்பரப்பில் மட்டுமேனோ
குழந்தையின் கன்ன மென்மை?
காலிதழ்கள் நான்கிலும் யானைக் கால்
ஆயினும் நீ ஊனம் அறியாய்
கல்லில் வடித்த கருந்தென்றலாய் அசைவாய் நீ
ஒரு சிறுமியின் ஒற்றைச் சடை
போன்றவுன் வால் உனதின்னோரிதழாகும்.

மூக்கு நீண்டு உருப்பெருத்த எருமையாய்
நீ யதார்த்த வனத்தில் வீற்றிருக்கையில்
காற்று உனைப் பூவாய் அசைத்திடாதது எதற்காக?
பாகனொடு பிறவா நேற்றின் விலங்கே,
இத்துணைக் காலம் உயிர் பிழைத்ததெங்ஙனம்?
கடல் மட்டத்திற்கு மேல் பிழைக்கும் உயிரினங்களில்
நீதான் ஆகப்பெரிதென அறிவாயா?
ஆமெனில் எப்படி என் குண்டுக் குழந்தையே?

வானூர்தி காணாத காலத்தின் விமானம் நீ
கொடும்பல் விலங்குகளின் வாயிற்படாமல்
கானகம் பார்க்க
மலர்த் தண்டு உன் முதுகில் இவர்ந்தாடினால்
போதும் என் பாதுகாப்புக்கு.
காட்டுத் தாய் குழைந்த வண்ணங்களைப் பூசியலையும்
புலி, சிங்கம், பனிக் கரடி, ஒட்டகச் சிவிங்கி,
வரிக் குதிரை, பெங்குவின், மலைப்பாம்பு போல்
நீயுமொரு வண்ணத்தைச் சுமந்து திரியக்
கிடைக்காததொரு சோகம்.
ஆனால் அதனினும் சோகம்
காட்டில் தன்னார்வமாய்த் திரியாமல்
கோவில் சிறையில் சங்கிலி முருகனாகினாய்.
பெரிய இறக்கைகள் போன்ற
செவிகளையுடைய பிராணியே,
உடலெடை குறைத்திருந்தால்
பறவையாகியிருப்பாயோ நீ?

சுற்றுச்சூழல் படலம் நீங்கிட
ஜலத்தினை சுயத்தில் வீசும் கன புஷ்பமே,
உன்னைப் பார்த்தெவனோ ஒருவன் வரைந்த ஓவியத்தை
என் வீட்டுச் சுவரில் மாட்டியிருக்கிறேன்
அலுவலக நேரம் முடிந்து வீடடைந்தபின்
அழுக்கில் குளித்த காலணிகளைக் கழற்றி எறிந்துவிட்டு
வீட்டுக்குள் வந்து சோபாவில் உனக்கெதிரே அமர்கிறேன்
சுவராணியில் மாட்டிக்கொண்டு அசையாமல்
தொங்குமுன்னை ஒருமுறை பார்க்கையில்
கோப்புகள் தோளேற்றிய பணிச் சுமை சடுதியில் மறைகிறது.
புனைவின் மரச் சட்டத்திற்குள்ளிருந்து பார்க்கையில்
தெரிவேனோ நானுனக்கு?

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar