என் வாட்ச்சு கொஞ்சம் ஸ்லோ

in கவிதை

தனிமையைப் புகைத்தபடி
கால்களால் சாலை தேய்த்து
ஏதோ காரியமாய் தெருவில் போகும்
என்னை நிறுத்தி நேரம் கேட்கிறாய்

உனது நோக்கத்தைப் பொறுத்து
எனது பதில் மாறக்கூடும்
எதற்காக நேரம் கேட்கிறாயென
உன்னைக் கேட்டால் சொல்ல மாட்டாய்
நேரத்தை உள்ளபடி காட்டும்
கருவியல்ல எனது கடிகாரம்
காலத்தைவிட மெதுவாகவே ஓடுமது.

பதினொன்றென மணி சொன்னால்
அதை நீ உண்மையென நம்பிவிட சாத்தியமுள்ளது
கடிகார தாமதத்தைக் கூற விழைகையில்
உன் அவசரத்தில் நீ அதைக்
கேட்காமல் போய்விடக்கூடும்
என் பதிலால் உன் காரியம் தடைபடக்கூடும்
ஏதாவதொரு இழப்பை நீ சந்திக்கக்கூடும்

வேண்டாமினி இந்த ஊடாடல்
சகஜங்களிலிருந்து தவறவிடுதல்களுக்கு
இது இட்டுச்சென்றுவிடும்
காலத்தைச் சுமந்தலையும் கைகள்
ஆயிரமுண்டு இத்தெருவில்
அவைகளிடம் போய்க் கேள்.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar