உபரிப் பூக்கள்

in கட்டுரை

உதவி கேட்டு வந்த நண்பருக்குச் சொன்ன அறிவுரை:

நமக்கொரு பிரச்சினை என வரும்போது அதனை உடனடியாகத் தீர்ப்பதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். நாம் இன்னொருவரிடம் போய் உதவி கேட்கும் வரை காத்திருக்கக் கூடாது. மகிழ்ச்சியான குடும்பங்கள் ஒரே மாதிரியாக மகிழ்ச்சியாக இருக்கின்றன என்றும் வருத்தமான குடும்பங்கள் தனித்தனி பாணியில் வருத்தமாக இருக்கின்றன என்றும் டால்ஸ்டாய் ஒரு நாவலில் எழுதுவார். அது போல நம் பிரச்சினைகள் நம்முடைய தனிச் சொத்துகள். சேச்சே, இல்லையே, இது எனக்கான பிரச்சினையல்லவா என்று இன்னொருவர் அதை வந்து உரிமை கொண்டாட முடியாது. நம் பிரச்சினைகள் நம்முடைய சொந்தக் குழந்தைகள், நம் தோட்டத்தில் மலர்ந்த பூக்கள். அவற்றை நாமேதான் சூடிக்கொள்ள வேண்டும்.

* * *

என் மகன் கெட்ட வார்த்தை பேசக் கேட்டு அவனைக் கண்டித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் வாசகர் ஒருவர் (எனக்கு நண்பர்களைவிட வாசகர்கள் மிகுதி) என் வீட்டு வாசற்படியில் அடியெடுத்து வைத்துக்கொண்டிருந்தார். நான் என் மகனைத் திருத்துவதைப் பார்த்து அவருக்கு ஆச்சரியம் பற்றிக்கொண்டது. நான் மட்டும் பேச்சிலும் எழுத்திலும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவது சரியா என்பது அவர் கேள்வி.

நான் “வாங்க வாங்க” என வரவேற்றபடியே அவருக்கு என் குழந்தை வளர்ப்புக் கொள்கையை விளக்கினேன். கெட்ட வார்த்தை மட்டுமல்ல, பொய் பேசுதல், உண்மை பேசுதல், சூது-வாது ஆகியவை மரணம் போல குழந்தைகள் செய்யக் கூடாத காரியங்கள். இவைகளை நாம் செய்கிறோம் என்றால் நமக்குத் தெரியும் நாம் ஏன் செய்கிறோம் என்று. ஏண்டா இப்படிச் செய்தாய் என்று கேட்கப்படும்போது மனசாட்சிக்கு விரோதமாகவோ விரோதமில்லாமலோ விளக்கம் கொடுக்க நமக்குத் தெரிகிறது. குழந்தைகளுக்குத் தெரியுமா? கேட்டவர் தெளிந்தார்.

* * *

ஒரு ஆண் திருமணத்திற்குப் பின்னர் பெண்வெறுப்பாளன் (misogynist) ஆகவில்லை என்றால் அதற்கு மூன்று காரணங்களே இருக்க முடியும்:

1. அவன் மணந்திருப்பது இன்னொரு ஆடவனை.
2. திருமணமானவுடன் மனைவி இறந்துவிட்டாள்.
3. திருமணமானவுடன் அவனே இறந்துவிட்டான்.

* * *

‘ஒரு லோட்டா ரத்தம்’ நெடுங்கதைக்காக ஓரான் பாமுக்கையோ விஸ்லாவா சிம்போர்ஸ்காவையோ அல்லது இருவருமையோ சாகடிக்கும்படி வாசகர்கள் – இல்லை, ரசிகர்கள்; எனக்கேது வாசகர்கள்? – தொடர்ந்து மின்னஞ்சலும் குறுஞ்செய்தியும் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் சாக வேண்டிய வெளிநாட்டவர்கள் என பெரிய பட்டியல்களைத் தட்டச்சு செய்து அனுப்புகிறார்கள். உங்கள் ஆசையும் தர்ம சீற்றமும் எனக்குப் புரிகின்றன. ஆனால் நாவலாக எழுதினால்கூட அத்தனை பேரையும் ஒவ்வொருவராக சாகடிப்பது படிப்பவர்களுக்கு அலுப்பூட்டக்கூடியதாக இருக்கும். மொத்தமாக ஒரே சமயத்தில் எல்லோரையும் தீர்த்துக்கட்டுவது சில தர்க்கப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். சிம்போர்ஸ்காவை சாகடிக்க விரும்புபவர்களே, என்னால் அவரைக் கொல்ல முடியாது. நீங்கள் வேண்டுமானால் அவர் கவிதைகளை தொடர்ந்து மொழிபெயருங்களேன். அல்லது அஞ்சலிக் கட்டுரை எழுதுங்களேன். ஒரே சமயத்தில் சாகவும் அடித்து அஞ்சலியும் எழுதிய மாதிரி இருக்கும்.

* * *

இன்றைய தேதி வரை தமிழில் நூற்றுக்கணக்கான சினிமாக்களைப் பார்த்துவிட்டாலும் நான் பல முறைக்கு மேல் பார்த்த மறக்க முடியாத படம் என ஒன்று உண்டென்றால் அது இயக்குநர் மகேந்திரன்சாரின் ‘உபரிப் பூக்கள்’தான். நல்ல படம்.

Tags: , , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar