மேலும் ஜென் கதைகள்

in புனைவு

துறவைத் துறத்தல்

ஞானி ஷிமிஸு அவரது அறிவிற்காக ஜப்பான் முழுவதும் மதிக்கப்பட்டார். ஒரு நாள் அவர் தமது சீடர்கள் அனைவரையும் அழைத்தார். “நான் துறவை அறிந்துவிட்டேன். இனி இந்த வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. இல்லற வாழ்க்கையில் ஜென்னைத் தேடப்போகிறேன்” என்று ஷிமிஸு அறிவித்தார். பின்னர் மடாலயத்தை நடத்தும் பொறுப்பைத் தமது தலைமை சீடரிடம் அளித்துவிட்டு வெளியேறினார். கானகத்தை விட்டு நகரத்திற்குச் சென்ற ஷிமிஸு, திருமணம் செய்துகொண்டு ஒரு குழந்தை பெற்றுக்கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு நாள் அவர் மடாலயத்திற்கு ஒரு சிறு பையுடன் திரும்பி வந்தார். அவரை யாரும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

உண்மைக்காகக் காத்திருத்தல்

ஹச்சிபெய் என்ற ஞானிக்கு ஒரு இளம் சீடன் இருந்தான். “குருவே, உண்மை என்றால் என்ன?” என்று ஒரு நாள் சீடன் கேட்டான். “அடுத்த மாதம் சொல்கிறேன்” என்றார் ஹச்சிபெய். அதன் பின் அந்தச் சீடன் அதே கேள்வியை விடாமல் கேட்டுக்கொண்டிருந்தான். ஞானியும் அவன் கேட்கும்போதெல்லாம் “அடுத்த மாதம் சொல்கிறேன்” என்று பதிலளித்தார். சீடன் நம்பிக்கையுடன் முப்பதாண்டுகள் பொறுமையாகக் காத்திருந்தான். பிறகு ஹச்சிபெய் மரணப் படுக்கைக்குப் போனார். அப்போதும் சீடன் அந்தக் கேள்வியைக் கேட்டான். ஹச்சிபெய் புன்னகையை பதிலாக அளித்துவிட்டு இறந்தார். சீடனுக்கு அந்தக் கணமே ஞானம் வந்தது. இருந்தாலும் “இந்தப் புன்னகையை முப்பதாண்டுகளுக்கு முன் பூத்திருக்க வேண்டியதுதானே” என்று அவன் கேட்கத் தவறவில்லை.

வணக்கம் புத்தரே

ஒரு மூத்த துறவியும் அவரது இளம் சீடரும் காட்டில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது எதிரில் இன்னொரு மூத்த துறவியும் அவரது இளம் சீடரும் வந்தார்கள். ஒரு மூத்த துறவி இன்னொரு மூத்த துறவியைப் பார்த்து “வணக்கம் புத்தரே” என்றார். அவரும் “வணக்கம் புத்தரே” என்றார். பிறகு இருவரும் வெவ்வேறு திசைகளில் செல்ல, ஒரு சீடர் “உங்களுக்கு அவரை முன்பே தெரியுமா?” என்று தனது குருவிடம் சந்தேகம் கேட்டார். “தெரியாது. ஆனால் எங்கள் இருவருக்குமே எதிரொலி விளையாட்டு தெரியும்” என்றார் துறவி.

புத்தரைக் கைவிடுதல்

பிரசித்தி பெற்ற காமாகுரா மடாலயத்திற்கு சீனத் துறவி ஹான் ஜிங் வந்திருந்தார். அவர் மிகவும் வயதான துறவி. பறவைகளின் கீச்சொலி, இலைகளின் சரசரப்பு, நீரோடையின் மெல்லிய ஓசை தவிர அமைதியாக இருந்த அந்த இடத்தைப் பார்த்ததும் ஹான் ஜிங்கிற்குப் பிடித்துவிட்டது. தியானம் செய்ய ஏற்ற இடம் என்று அந்தத் துறவி நினைத்தார். ஆனால் அந்த மடாலயத்தில் ஒரு ஈ இருந்தது. அவர் தியானம் செய்தபோது அந்த ஈ ரீங்கரித்துக்கொண்டே இருந்தது. அவரால் மனதை புத்தரிடம் செலுத்த முடியவில்லை. தினமும் தியானிக்க முயன்று முயற்சியைக் கைவிட்டார் ஹான் ஜிங். பிறகு ஒரு நாள் துறவிக்கு ஒரு யோசனை தோன்றியது. புத்தரைக் குறித்து தியானம் செய்வதைக் கைவிட்டு ஈயின் ரீங்காரத்தைக் குறித்து தியானித்தார். அது அவர் நீண்ட காலத்திற்குப் பிறகு செய்த மிக ஆழ்ந்த தியானமாக இருந்தது. அதன் பிறகு அவர் புத்தரை நினைக்கவேயில்லை.

கல்வியின் போதாமை

குரு யான்ஷூ தியானம் செய்வதற்காக மடாலயத்திற்கு வெளியே நீண்ட தூரம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சீடருக்கு யான்ஷூவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. ஒருமுறை யான்ஷூ தியானத்திற்குக் கிளம்பியபோது சீடர் அவரைப் பின்தொடர்ந்தார். குரு காட்டை விட்டு வெளியேறி ஊரில் இருந்த ஒரு வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்தார். சிறிது நேரத்திற்குப் பின் அந்த வீட்டினுள் நுழைந்த சீடர், தமது குரு ஒரு பெண்ணுடன் தீவிர சல்லாபத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். “குருவே, என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். “ஏன், தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறாய்?” என்றார் யான்ஷூ.

“இன்மையை முழுமையால் நிரப்புகிறேன்” என்று குரு சொன்னதாகவும் ஐதீகம் உண்டு.

திடீர் பழம்

ஒரு பயணி வயல்களின் வழியே பயணித்துக்கொண்டிருந்தபோது புலி ஒன்று எதிரில் வந்தது. அவன் தப்பியோட, புலி துரத்தியது. ஒரு உயர்ந்த பாறையின் உச்சிக்கு வந்த பயணி, அதன் விளிம்பிலிருந்து தாவி எதிரே இருந்த காட்டுக் கொடியைப் பிடித்துக்கொண்டு தொங்கினான். அவன் தலைக்கு மேலே புலி நின்று உறுமியது. அவனுக்குக் கீழே இன்னொரு புலி அவனை சாப்பிடக் காத்திருந்தது. அந்தக் கொடி மட்டுமே அவனைத் தாங்கியது. இரு சுண்டெலிகள் அந்தக் கொடியை மெல்லக் கடித்துத் தின்னத் தொடங்கின. அப்போது தன் கையருகே ஒரு ஸ்ட்ராபெரிப் பழம் தொங்கிக்கொண்டிருந்ததை அவன் பார்த்தான். கொடியை ஒரு கையால் பிடித்துத் தொங்கியபடி இன்னொரு கையால் ஸ்ட்ராபெரியைப் பறித்துத் தின்றான். சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்!


குறிப்பு: இங்குள்ள ஜென் கதைகள் நானே சொந்தமாக எழுதியவை. எனவே இவற்றை அனுமதியின்றி சொற்பொழிவுகளில் பயன்படுத்துவதோ ஜென் கதைத் தொகுப்புகளில் சேர்ப்பதோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar