ரஜினி என்னும் சினிமா நடிகர்

in கட்டுரை

ரஜினிசார் (சுருக்கமாக ரஜினி) யார் என்று கேட்டால் சின்னக் குழந்தையும் சொல்லும் என்று ஒரு திரைப்பாடல் இருக்கிறது. குழந்தைகள் மட்டுமா, பெரியவர்கள்கூடச் சொல்வார்கள். ஏனென்றால் ரஜினி கவராத வயதே இல்லை. மனித வயதுகளில் எந்த வயதை எடுத்துப் பார்த்தாலும் அதைச் சேர்ந்தவர்கள் யாராவது ரஜினி ரசிகராக இருப்பார்கள். அவருக்கு 1,50,000 ரசிகர் மன்றங்கள் இருப்பதாக ஒரு இணையப் புள்ளிவிவரம் கூறுகிறது. சில நடிகர்களுக்கு ரசிகர்கள்கூட அந்த எண்ணிக்கையில் இருப்பார்களா என்பது சந்தேகமே. ஆனால் இந்தக் கட்டுரை எண்ணிக்கைகளைப் பற்றியதல்ல, எண்ணங்களைப் பற்றியது. அந்த எண்ணங்கள் ரஜினியைப் பற்றிய என்னுடையவை.

எட்டு வயதில் அபூர்வ ராகங்கள் பார்த்தபோது திரையில் சிறிது நேரமே தோன்றிய ரஜினிதான் என்னைக் கவர்ந்தார். பிறகுதான் ஸ்ரீவித்யா மேடம். கேபிசாரின் இயக்கம், கமல்சார், ஸ்ரீவித்யா ஆகியோர் நடிப்பு, இளையராஜா சாரின் தெய்வீக இசை ஆகிய பல விசயங்களால் எனக்கு அந்தப் படம் இன்றுவரை மறந்தபாடில்லை.

கேபிசார் படத்தில் ஒரு சிறிய கௌரவ வேடத்தில் நடிப்பது எவ்வளவு பெரிய கௌரவம்! அதற்குப் பின்னர் ரஜினிக்குப் பட வாய்ப்புகள் குவிந்தன. இன்றைய தேதி வரை நிறைய படங்களில் நடித்துவிட்டார். இது இவ்வாறிருக்க, மற்றவர்களைப் போல எனக்கும் பிடித்த ரஜினி படங்கள் என்று சில இருக்கின்றன. அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, அவர்கள், புவனா ஒரு கேள்விக்குறி, தில்லுமுல்லு, தளபதி, பாட்சா, இன்சாஃப் கௌன் கரேகா, பாபா, வள்ளி என்று பலவற்றைச் சொல்லலாம். எல்லாவற்றைக் காட்டிலும் மேலானதாக 1977ல் வெளிவந்த ஆறு புஷ்பங்கள் என்ற படத்தினைச் சொல்வேன். இந்தப் படத்தினை அந்தக் காலத்திய ரஜினி ரசிகர்களே மறந்திருக்கக்கூடும். ஆனால் இது முக்கியமான படம்.

இந்தப் படத்தை இயக்கிய கே.எம். பாலகிருஷ்ணன் வேறு படங்களை இயக்கியுள்ளாரா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு ரஜினி படம் எடுத்துவிட்டால் வேறு படமே எடுக்கத் தேவையில்லை என்பது தயாரிப்பாளர்களது நிலைபாடு. ஆறு புஷ்பங்கள் படத்தில் ஆறு மகள்களைப் பெற்ற வஞ்சனையில்லாத தந்தையாக எஸ்.வி. சகஸ்ரநாமம் நடித்திருக்கிறார் (1956இன் ஒன்றே குலம் படத்தில் நடித்தவர்). ரஜினியும் எஸ்.வி. சகஸ்ரநாமமும் இணைந்து நடித்த முதல் படம் இது என்பதை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும் (இந்தத் தகவல் தவறாகவும் இருக்கலாம்). வறுமையில் திணறும் ஒரு மத்தியதரக் குடும்பம் உழைப்பால் பட முடிவில் உயர்வது கதை. அந்த ஆறு மகள்களில் இருவரான ஸ்ரீவித்யாவிற்கும் ஒய். விஜயா மேடத்திற்கும் ஜோடியாக ரஜினியும் விஜயகுமார் சாரும் நடித்துள்ளனர். யாருக்கு யார் ஜோடி என்பதை கவனித்ததாக நினைவில்லை. ரஜினிக்கு இந்தப் படம் ஒரு முக்கியமான பயிற்சிப் படமாக இருந்திருக்கும்.

ரஜினி ஒரு “மசாலா” நடிகர் என்பதாகவே பொதுப்புத்தியில் பதிந்திருக்கிறது. மசாலா என்பது தீமை என்கிற பார்வையிலிருந்து வருகிறது இந்தச் சிந்தனை. உண்மையில் ரஜினி நடிக்காத பாத்திரங்களே இல்லை. பற்ற வைக்கும் பரட்டையாக, ராணுவ வீரராக, கோவிலில் கடவுள் சிலையுடன் வாக்குவாதம் செய்யும் கடத்தல்காரராக, கன்னட சாமியாராக, யானை வளர்ப்பவராக, பணக்காரராக, டிரம்ஸ் கலைஞராக, தொழிலதிபராக, நேர்மையான போலீஸ் அதிகாரியாக, பெண் தொழிலதிபரின் கொட்டத்தை அடக்கும் தொழிலாளியாக, பால்காரராக, நியாயமான ஆட்டோ ஓட்டுநராக, பாடகராக, ஜமீன்தாராக, மனநல மருத்துவராக, ஏன், நடமாடும் இயந்திரமாகக்கூட நடித்திருக்கிறார். இதை விட்டால் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஆங்கிலம் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். வேறு எந்த நடிகர்களிடம் இத்தனை “வெரைட்டி” இருக்கிறது? அட ஒரு தகவலுக்காகக் கேட்பதாகவேகூட வைத்துக்கொள்வோமே!

தீவிர சினிமா ஆர்வலர்கள் ரஜினியின் நடிப்பிலுள்ள ‘ஸ்டைல்’ என்கிற விசயத்தை ஒரு குறையாகச் சொல்கிறார்கள். நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. நடிப்பில் அதுவொரு அணுகுமுறை என்பது என் துணிபு. வசனம் பேசி முகபாவத்தைக் காட்டி புனைவினுள் புகுந்தேறி நடிப்பது ஒரு உத்தி என்றால், நடிப்புடன் நடனத்தைக் கலந்து இன்னொரு கலை வடிவத்திற்குத் தாவுவது மறு உத்தி. ரஜினியின் பிரபல ‘ஸ்டைல்’களாகிய சிகரெட்டைத் தூக்கிப் போட்டு வாயிற்பிடித்தல், தலைமுடி கோதுதல், துண்டினை பலமுறை சுழற்றித் தோளில் போடுதல் ஆகியவை நடப்பது, உட்காருவது போன்ற அன்றாட உடலசைவுகள் அல்ல. ரஜினி ஸ்டைல்களை நிதர்சனத்தில் யாரும் செய்வதில்லை. அவை புனைவுத் தன்மை கொண்டவை. நடன அசைவுகளைப் போன்றவை. தலையைக் கோதுவது, சிகரெட்டை வாயால் பிடிப்பது எல்லாம் நடன முத்திரைகள்தாம். இது ரஜினி சிறுவயதில் யட்சகானம் நிறைய பார்த்திருக்கக்கூடியதன் விளைவாக இருக்கலாம்.

ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் மற்றும்/அல்லது ரஜினி ரசிகர்கள் உலகெங்கும் பரவியுள்ளார்கள். ரஜினி பற்றிய விக்கிபீடியா கட்டுரை ஜெர்மன், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜப்பானியம், சீனம், நார்வீஜியன் உட்பட பதினொரு மொழிகளில் கிடைக்கிறது. விக்கிபீடியா கட்டுரைகள் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா போலின்றி அன்பால் சேர்ந்த கூட்டத்தினரால் எழுதப்படுபவை என்பது தெரிந்ததே. என்னதான் அவர் பெயர் “ரசினிகாந்து” என எழுதப்பட்டாலும்.

ரஜினி ரசிகர்கள் உலக வியாபகம் பெற்றிருப்பினும் இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ள தேசம் ஜப்பான் ஆகும். இந்த ரசிகர்களை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். நான் அடிக்கடி வருகை புரியும் ஜப்பானிய நகரமான ஒசாகாவில் இவருக்குத் தெருவிற்குத் தெரு ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. கோபயாஷி நகரில் ரஜினி பெயரில் இருக்கும் தேனீர் விடுதியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். புகழ்பெற்ற ஜப்பானிய தேநீர்ச் சடங்குகள் இந்தக் கடையில் ரஜினி ஸ்டைலில் செய்யப்படுகின்றன. நாமிங்கே “ரஜினிசார்” என்று சொல்வது போல ஜப்பானில் அவரை “ரஜினிசான்” என்கிறார்கள். இது ஜாக்கி சானில் வரும் “chan” அல்ல. ஜப்பானில் வயதினால் தாழ்ந்த பெண்களைக் குறிக்கத்தான் “chan” என்பார்கள். ரஜினிசான்-ல் வருவது மரியாதையைக் குறிக்கும் san.

கேபிசார் தயாரித்து கே.எஸ். ரவிக்குமார் சார் இயக்கிய முத்து, ஜப்பானில் ‘முத்து மகாராஜா’வாக வசூல் சாதனை படைத்தது. கேபிசார் இயக்கியிருந்தால் இது நடந்திருக்காது. ரஜினிக்கும் ஜப்பானுக்கும் உள்ள தொடர்பானது முத்து படத்தில் தொடங்கியதோடு முடியவில்லை. மணிசாரின் தளபதியில் “சுந்தரி, கண்ணால் ஒரு சேதி” பாடலில் ரஜினி ‘ரோனின்’ வேடத்தில் கொண்டையும் அதனூடே ஒரு சுள்ளியுமாக வருவார். ‘ரோனின்’ என்பவர் வேலையில்லாத சமுராய். அத்தோடல்லாது, ஜப்பானின் தொழில்நுட்ப உயர்வும் மோகமும் உலகறிந்தவை. எந்திரன் படப் பாடல்களில் ஜப்பானிய பிரேஸ்புக்கைச் சேர்ந்த பல வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அறிபுனை ஆடிவெள்ளி போல் எடுக்கப்பட்டதால் ஜப்பானிய ரசிகர்களை “எந்திரன் கவர்ந்திருப்பான்” என்பதில் சந்தேகம் இல்லை.

எவ்வளவு பெரிய மலையானாலும் அடிவாரம் என ஒன்று இருக்கும். அது போல ரஜினியிடமும் சில குறைகள் உள்ளன. முதல் குறை அவரது தமிழ் உச்சரிப்பு. பல பத்தாண்டுகளாகத் தமிழ்நாட்டில் இருந்தபடி ஏராளமான படங்களில் தமிழ் வசனம் பேசி நடித்த ஒரு நடிப்பாளுமைக்குத் தமிழ் உச்சரிப்பு ஏனோ பயிற்சியாகவில்லை. இன்றைக்கும் கன்னட ஒலியுடனே பேசுகிறார். இதையும் மீறி “என் வழி தனி வழி”, “நான் ஒரு முறை சொன்னால் அது நூறு முறை சொன்னதற்கு நிகராகும்”, “கதம் கதம்” போன்ற வசனங்கள் மக்கள் பேச்சில் கலந்துவிட்டன என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும். இன்னொரு குறையானது, அவருக்கு நடிகர் திலகம் சார் போலவோ கமல் போலவோ அழ வரவில்லை. இத்தனைக்கும் அவர் இருவரோடும் சில படங்களில் நடித்திருக்கிறார். ரஜினியின் அழுகையில் விரக்தி ததும்புகிறதே தவிர நாயகன், தேவர் மகன் பட அழுகைகள் போன்று வேதனையும் தத்துவமும் கலந்தாற்போல் வெளிப்படவில்லை. ஒருவருடைய அழுகையை வைத்து அவரது திறமையை எடைபோடக் கூடாதுதான். ஆனாலும் சற்றுக் கூடுதலாக அழுதிருக்கலாமே என்கிறேன், அவ்வளவுதான். வேறு குறைகள் இல்லை.

ரஜினி என்னும் உன்னதமான கலைஞரை அரசியலுக்கு இழுக்கும் முயற்சிகள் செவ்வனே நீண்டகாலமாக எடுக்கப்பட்டுவருகின்றன. இது அவர் கலைஞர் என்பதால் இருக்கலாம். ஆனால் அவரது கலை, திரைப்படக் கலை சார்ந்ததே தவிர அரசியல் சார்ந்ததல்ல. ரஜினியிடம் ஒரு கலைஞனுக்குரிய வெகுளித்தன்மை இருக்கிறது. அரசியலில் அழுக்காறு, அவா, இன்னாச்சொல் போன்றவைக்கு இடமிருக்கிறது. வெகுளிக்கு இல்லை. பிரியாணியால் சேரும் கூட்டம் அவருக்கு ஆகாது. ஆகவே தமிழ் மக்களுக்கு என்றென்றும் அவரது ஆதரவு வெளியிலிருந்தே கிடைக்கட்டும்.

கடைசியாக ஜப்பான் தொடர்புகளில் விடுபட்டுப்போன ஒன்றை முத்தாய்ப்பாக வழங்கிட விரும்புகிறேன். இந்த ஆண்டு (2011) ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமிப் பேரழிவுகளில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவ ரஜினி நிறைய நிதி அளித்ததோடு சக நடிகர்களையும் உதவச் செய்தார். குசேலன் படத்தில் தேர்ந்த நடிகரான பசுபதியைப் போட்டியாக நினைக்காமல் பணம் கொடுத்து உதவுகிறார் ரஜினி என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் பாட்சா படத்தில் வருவது போல ரஜினிக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது மாணிக்கம். நடிகருள் மாணிக்கம்.


‘இந்தியா டுடே’ வார இதழின் ரஜினிசார் சிறப்பிதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar