முதல் காதல்

in கவிதை

உன்னைப் பிடிக்கும் என்று
நான் சொன்ன பின்
நீ என்னோடு பேசவில்லை
கூப்பிட்டால் சாக்கு சொல்லி
மண்டப வெளியில் நழுவிக்
கூட்டத்தில் ஒளிந்தாய்
உன் மௌனப் பார்வைகள்
என் வயதுக்கெட்டாத அர்த்தங்களைச்
சொல்லி விழலுக்கிறைந்தன
மதியப் பந்தி முடிந்த பின்பு
என் சேட்டைகளைப் பற்றிய
அத்தை பாட்டி கதைப் பேச்சுகளை
வாடிய மல்லிகைப் பூக்களும்
குங்கும அரிசிகளும் சிதறிய
முரட்டுக் கம்பளத்தில் முழங்கை ஊன்றி
உள்ளங்கையில் முகம் வைத்து
ஆர்வமாய் அமர்ந்து கேட்டாய்
என்னோடு மட்டும் ஏனோ
பேச்சைக் குறைத்துக்கொண்டாய்
என் முதல் பெரிய வேதனையில்
இரு நாட்கள் இலக்கின்றிக் கழிந்தன
ஊர் திரும்பப் பிரியும் நேரம்
வந்த பின் உன்னிடம்
விடைபெறத் தேடிய எனக்கு
உன்னைக் காணவில்லை
இனி எப்போதும் ஒருபோதும்
நீ வேண்டாம் எனக்கு
என அன்று முடிவு செய்தேன்
இன்றைக்கு நான் இங்கே
இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்
நீ என்றைக்கு
என்ன செய்துகொண்டிருக்கிறாயோ.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar