மே 2012

in கவிதை

இன்றைக்கு 42 டிகிரி என்கிறது இயற்கை
எதற்கு ஒரே நாளில் இத்தனை வெக்கை?
மழை, குளிர் காலங்களில் மூத்திரம் போல்
அடக்கிவைத்த வெக்கையைத்தான்
இப்படி மஞ்சளாய்ப் பெய்கிறாயோ சூரியனே?
நம்மூரின் நடுத்தெருவில் நடப்பது
குழந்தைகளும் பெண்களும்
முதியோரும் ஊனமுற்றோரும்
கூடத்தான் என்றுனக்குத் தெரியாதா?
குன்னங்குருவியும் கூட்டோடே குந்துகிறதே
பிஞ்சுகள், மலர்கள் வழக்கத்தைவிட கூடுதலாய்
வாடி வெம்புவதைப் பாராய் என் மஞ்சள் நிலவே
நீயும் இயற்கை அவையும் இயற்கை எனில்
ஏனெதற்கு அகயுத்தம் அநாவசியமாய்?
உலகம் பூராவும் உனக்குக் கீழ் இருக்கையிலே
எல்லோருக்கும் வெயிலைச் சரிசமமாய்ப்
பகிர்ந்தளியாமல் எங்களை மட்டும் வதக்குவதடுக்குமா?
உன் வெக்கையைக் கொட்டியே
ஆக வேண்டும் என்றால்
ஜீவராசிகள் வாழாத மிச்ச கிரகங்களில்
கொட்டலாமே கதிரவா.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar