முன்னுரைக்காக எழுதியது

in கட்டுரை

(‘பாம்புத் தைலம்’ நூலின் முன்னுரை)

‘பாம்புத் தைலம்’ என்று தலைப்பிட்ட என் புத்தகத்திற்கு முன்னுரை எழுதிக்கொண்டிருக்கிறேன். நன்றாக இருக்கிறது இப்படி எழுதுவது. ஏன் தெரியுமா? ஒரு நூலின் பொருளடக்கப் பட்டியலில் இருக்கிற படைப்புகள் எந்தக் குறிப்பிட்ட நோக்கமோ இலக்கோ இல்லாமல் படைப்பூக்கத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு எழுதப்படுகின்றன. ஆனால் முன்னுரை அப்படியல்ல. அது தான் முன்னுரைக்கிற புத்தகத்தைப் பற்றியது. போன முறை இதே மாதிரி ‘திசை காட்டிப் பறவை’ (சுருக்கமாக திசைகாட்டிப்பறவை) என்ற புத்தகத்திற்கு முன்னுரை எழுதினேன். அதுவும் என்னுடைய புத்தகம்தான்.

வாசகர் மரியாதை கலந்த எதிர்பார்ப்புடன் கையில் பிடித்துக்கொண்டிருக்கிற இந்தப் புத்தகம் மிக முக்கியமான ஒன்று. பாம்புத் தைலத்தில் என்ன விசேஷம் என்றால், அதிலுள்ள படைப்புகள் எல்லாமே ‘சுருங்கக் கூறின்’ ரகம். நமக்கு நன்றாக எழுத வராது; சுருக்கமாகவாவது எழுதுவோமே. பொதுவாகவே நான் ஒரு பக்கத்தில் சொல்ல முடிகிற ஒரு விசயத்தைப் பத்து பக்கத்திற்கு நீட்டி முழக்கி வளவளவென்று எழுதித் தள்ள மாட்டேன். நான்கு பக்கத்தோடு முடித்துக்கொள்வேன். இதுதான் என்னுடைய எழுத்தளவின் ரகசியம். இந்தத் தகவல் பொழிவு யுகத்தில் மனிதன் கவனங்கூர்ந்து படிக்கும் திறனை இழந்துவருகிறான். அவன்தான் எனது வாசகன். எனவே படைப்புச் சுருக்கம் என்பது அவசியமாகிறது.

இந்தப் புத்தகத்தில் இருப்பவைகளைவிட சுருக்கமான படைப்புகள் என்றால் அவை என் கவிதைகளே. எல்லாமே எட்டு வரி, பத்து வரிதான் இருக்கும். ரொம்ப உணர்ச்சிவசப்பட்டிருந்தால் ஒரு இருபது வரி எழுதியிருப்பேன். கவிதைகள் ‘காதல் இரவு’ என்ற தொகுப்பாக வந்திருக்கின்றன. நம்மாட்களுக்குக் காதல் என்றால் ஒரு மயக்கம். தலைப்பில் காதல் வந்தால் நாலு பேர் வாங்குவான். பெண்களும் வாங்குவார்கள். காதல் கவிதைகள் பெண்களைப் பற்றியவைதானே.

‘தி.கா.பறவை’யுடன் ஒப்பிட்டால் பல சுவாரசிய வித்யாசங்கள் பாம்புத் தைலத்தில் தெரியலாம். நடப்புத் தமிழ்ச் சூழலுக்கு செய்யுள்களை யாராவது அந்த காலத்தினர் எழுதிப் படித்துத்தான் ப(வ)ழக்கம். இந்தப் புத்தகத்தில் ஒரு செய்யுளை நானே உருவாக்கியிருக்கிறேன். புதிய முயற்சியாக உரைகளை மட்டும் தனியாக எழுதி அதற்குரிய செய்யுள்களை எழுதுமாறு அறைகூவல் விடுத்திருக்கிறேன். கவிதை அகராதி எதுவும் இல்லை, ஆனால் கவிதை செய்முறை குறித்த கலந்துரையாடல் உண்டு. குழந்தைகளுக்காக மூன்று கதைகள் இல்லை, ஒரே ஒரு கதைதான் இந்த முறை. ஆனால் மனப்பாடப் பகுதி போல செய்யுளும் உரைகளும் வள்ளுவ, பாரதி மீள்வாசிப்புகளும் இருக்கின்றன. விற்பனையைக் கூட்ட ஒரு சினிமா நடிகரைப் பற்றி ஒரு கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது. “படித்தேன், புரியவில்லை” என்று சொல்லிக்கொள்ளும்படியாகவும் சிற்சில படைப்புகளை வைத்திருக்கிறேன்.

இந்தப் புத்தகத்திற்காக எழுதத் திட்டமிட்ட ஒரு துப்பறியும் கதை, அகலிகை பற்றி ஒரு சிறுகதை (எழுத்தாளனாக இருந்துகொண்டு வைதீக இதிகாசங்களைப் பற்றி ஒரு கதையாவது எழுதாதிருக்க முடியுமா?), மன்னர்களே வராத ஒரு சரித்திரக் கதை, மேலைத் தத்துவம் குறித்து யோசனையாக நாலு பக்கம், நிறுத்தக்குறிகளே பயன்படுத்தாமல் எழுதப்பட்ட பரிசோதனார்த்தமான ஒரு சிறுகதை, நகர்ப்புற மனித உறவுகள், சொந்த ஊர் நினைவுகள் என்று ஏதாவது ஆகியவைகளை எழுத ஒதுக்கியிருந்த நேரத்தைக் கடைசி நிமிடத்தில் வீட்டுப் பம்பில் ஐந்து குட நீரடிப்பு எடுத்துக்கொண்டது துரதிர்ஷ்டம். ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியத்திற்கும் முப்பது பக்கம் கூடுதலாகக் கிடைத்திருக்க வேண்டியது. இந்த இழப்பு அடுத்த சீசனில் ஈடுசெய்யப்படும்.

தி.கா.பறவைக்கு மதிப்புரையை முந்தி வெளியிடுவதில் சிறுபத்திரிகைகளும் வெகுஜனப் பத்திரிகைகளும் சரிசமமாய்ப் போட்டியிட்டன என்றே சொல்லலாம். பல மதிப்புரையாளர்கள் அந்த நூலிற்கு ‘உயரப் பறக்கும் திசை காட்டிப் பறவை’, ‘திசை காட்டிப் பறவை சிறகடித்துப் பறக்கிறது’ என்கிற ரீதியில் புகழாரங்களை மழையாகப் பொழிந்தார்கள். ‘பேயோன் 1000’ஐ ‘பேயோன் 1500’, ‘பேயோன் 2300’ என்றெல்லாம் போற்றினார்கள். நடப்பு நூலுக்கு ‘பாம்புத் தைலத்தை உடம்பெல்லாம் பூசிக்கொள்ளலாம்!’ போன்ற பாராட்டுகளை இப்போதே கணித்துப் பார்க்க முடிகிறது.

03-12-2011

பேயோன்
ஒசாகா

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar