ஒரு விறகுவெட்டியும் மூன்று கோடரிகளும்

in புனைவு

(குழந்தைகளுக்கான புனைவு)

காலத்தால் வயதை அளக்கவியலாத தாவர யானைகளைப் போன்ற அடர்பெரு மரங்களாலான வனம் ஒன்றிருந்தது. அதனைச் சுற்றியும் ஊடாகவும் சுழித்துச் சுழித்து ஓடிக்கொண்டிருந்தது ஒரு சர்ப்ப தோற்ற நதி. இவ்விரண்டையும் மேகக் கண்ணாடி அணிந்து மேலிருந்து பார்த்ததொரு மலை. வனத்தின் விலங்குகள் இன்றைய காலத்தில் நமக்குக் கிடைக்காத இயற்கையைச் சுவாசித்துக்கொண்டு பொதுவாக ஒரு காட்டில் மிருகங்கள் என்னவெல்லாம் செய்யுமோ அவைகளை மிருகத்தனத்தோடு செய்துகொண்டிருந்தன. வனத்தின் ஓரத்தில் வயல்கள் விரவிக்கிடந்தன. மொத்தத்தில் அப்பிரதேசம் முழுவதையும் இயற்கையானது சப்த வர்ண ஆகாயத் தனுசாகிய கிரீடத்தை அணிந்து ஆண்டுவந்தது.

மேற்படி வனத்தினுடைய புறவிளிம்பில் ஜாகை வகித்து வாழ்ந்துவந்தான் ஒரு நேர்மையான ஏழை விறகுவெட்டி. குழந்தைகளே, விறகுவெட்டி என்றால் wood cutter. கானகத்தின் நீள் இருளை அளாவி விறகுதாரி மரங்களைத் தேடி வனத்தின் மையஞ்சென்று கூர்மிகு கோடரியால் மரங்களினின்று விறகுகளைப் பிரித்தெடுத்து வருவான் நமது நபர். ஒருநாள் வனத்தினூடே தினமும் சென்ற நதியின் அருகில் வேர்புதைந்த ஒரு மரச் செறிவினுள் விறகுவெட்டி புகுந்தான். ஓடும் வயிறெல்லாம் வண்ண மீன்களாய்ச் சுமந்து சென்றது நதி. தனது கோடரியைக் கரையோரம் அகன்றதோர் விருட்சத்தின் பூதவுடலுக்குள் சடுதியில் பாய்ச்சினான். உட்புகுந்த கோடரியைக் கவ்வியது மரம் தானாடி இலையுதிர. விறகுவெட்டி அதனைப் பிய்த்தெடுத்து மீண்டும் பாய்ச்சி மரத்தில் அடுத்த பிளவினைச் செதுக்கினான்.

மீள் பாய்ச்சலுக்காய் கோடரியை விறகுவெட்டி வீச, உழைப்பின் வியர்வை உள்ளங்கையில் கசகசத்துப் பிடி நழுவிக் கூர்கோடரி பாய்ந்தது பக்கத்து நதியினுள் மீன் கூட்டமொன்றினைக் கலைத்தும் நதியில் மிதந்தவோர் உலர்ந்த மரத்துண்டை அநாவசியமாய்ப் பிளந்தும் எட்டுத் திக்கிலும் அதிர்வலைகளை வீசி. ஏழை விறகுவெட்டி நடுங்கிய நிலம் போல் அதிர்ந்தான். நதியில் விழுந்த கோடரியின்றி இனி எதனை வெட்டுவது? சற்று ஓங்கிக் கிள்ளினால் சாய்ந்துவிடுமா எந்த மரமும்? அல்லது குத்துவிட்டால்தான் குடைசாயுமா? அட கெஞ்சினாலும்தான் கழன்று வருமா? சரி, சுரண்டினால் மட்டும் சுருண்டு விழுமா? கோடரியின் கோரிக்கையின்றி இறகு போடுமா தாவர யானை? இழந்த கோடரியை மீட்பதைக் காட்டிலும், நிலைமை புரியா மனையாளின் கோடரி நாக்கிலிருந்து நழுவுவது எப்படி? வரிசையாக விக்கித்தவனுக்கு நதி தன்னாயிரம் திவலையிதழ்களால் பேசிய சலசலப்பு கேட்காத வர்ணம் கவலை காதடைத்தது.

நதியில் குளிக்கும் சாக்கினில் கோடரியைத் தேடிப் பார்த்திடலாமா என்ற எண்ணம் விறகுவெட்டிக்கு எழும்பித் திரும்பினான். மறுகணம், நதியிலிருந்து பிரகாசமாய் ஒரு பெண்ணுரு புறப்பட்டு அவனெதிரில் நீர்வழிய நின்றது. அக்கானகத்தின் காவல் தெய்வம் அந்த ஜாஜ்வல்யை. விறகுவெட்டி பொழுதன்றைக்கும் அக்காட்டில் பட்ட பாட்டினை அவள் பார்க்காத நாள் இல்லை. எனினும் கூப்பிட்டுக் கொடுக்கப்படும் வரங்களுக்குப் பலனேதுமில்லை என்பதை அறிந்திராத தேவதை அல்ல அவள். அவனுக்குச் சகாயம் செய்ய தக்க தருணத்தை அவள் எதிர்பார்த்திருந்தாள். காத்திருந்த சந்தர்ப்பம் விறகுவெட்டியின் நதி விஜய வடிவில் வந்துகொடுத்தது.

கண்கூசும் மஞ்சள் ஒளியை வெளியிட்ட தங்கக் கோடரியை நீட்டி தேவதை விறகுவெட்டியிடம் கேட்டாள்: “விறகுவெட்டியே, இது உன்னுடைய கோடரியா?” விறகுவெட்டி சொர்ணத்தைக் கண்டு சொக்கினான். அவன் மனதில் நேர்மையும் ஏழ்மையும் தம்மில் சிலம்பாடின. தேவை சார்ந்து மாற்றங்காண்பதா உண்மை? தன்னுடைய கோடரி இரும்புக் கோடரி என்பதல்லவா உண்மை? “இல்லை” என்றான் விறகுவெட்டி. அவன் நேர்மை கண்டு அதிசயித்த வனமோகினி, அடுத்து பளிச்சிடும் வெள்ளிக் கோடரியைக் காட்டிக் கேட்டாள் “இது உன்னுடைய கோடரியா?” என. விறகுவெட்டி வெள்ளியைக் கண்டு வெம்பினான். அவன் மனதில் நேர்மையும் ஏழ்மையும் தம்மில் சிலம்பாடின. தேவை சார்ந்து மாற்றங்காண்பதா உண்மை? தன்னுடைய கோடரி இரும்புக் கோடரி என்பதல்லவா உண்மை? “இல்லை” என்றான் விறகுவெட்டி. தேவதை அதற்கும் அதிசயித்து அவனது இரும்புக் கோடரியை நீட்டிக் கேட்டாள், “இதுவாவது உன்னுடைய கோடரியா பாரேன்?” விறகுவெட்டி நிம்மதிப் பெருமூச்சுடன் தன் கோடரியைக் கைப்பெற்றான்.

அவனது குணத்தை மெச்சிய தேவதை, “விறகுவெட்டியே, உன் நேர்மைக்குப் பரிசு இந்தா, ஆனால் நீ போய் வேறு யாரையும் அனுப்பாதே” என மூன்று கோடரிகளையும் அவனுக்குக் கொடுத்தளித்தாள். விறகுவெட்டி அவற்றைப் பெற்று வறுமையைக் கைவிட்டு சாகும் வரை மகிழ்ச்சியாக இருந்தான். ஆகையால் குழந்தைகளே, இந்தக் கதை சொல்லும் செய்தியை மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: வலிக்காமல் பலிக்காது.


இந்தக் கதையைப் படித்தவர்கள் இந்தக் கதைகளையும் படித்தார்கள்:

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar