அசரீரி

in சிறுகதை, புனைவு

1

தெருவில் நடந்துகொண்டிருந்தேன். ஏதோ ஒரு தெரு. இங்கே அது முக்கியமில்லை. எது முக்கியம் என்றால் நான் ஒரு ஆளைக் கொலை செய்யப் போய்க்கொண்டிருந்தேனே, அது. ஒருவனைக் கொல்லச் சென்றுகொண்டிருப்பதும் போகிற வழியில் அலட்டிக்கொள்ளாத மன உறுதிக்கார புத்திசாலி தொனியில் முகம் தெரியாத ஒருவரிடம் அதைப் பகிர்ந்துகொள்வதும் கவர்ச்சிகரமாக இல்லை? நினைத்தேன்.

இந்தக் கொலை நான் நீண்ட காலமாகத் திட்டமிட்டுவந்த ஒரு குற்றச் செயல். என் குழந்தைப் பருவக் கனவு. ஒரு கொலைக்கு ஏன் இவ்வளவு நாள் என்கிறீர்களா? ஒரு சிகரெட் புகைப்பில் முழு கொலையைத் திட்டமிடும் தொழில்முறைக் கொலையாளி அல்ல நான். யாரையும் ‘குளோஸ்’ செய்வது என் பொழுதுபோக்கும் அல்ல. கொல்வதில் எனக்கு அனுபவம் இல்லை. அனுபவமே இல்லை என்றும் சொல்லலாம். ஆனால் எதற்கும் ஒரு முடிவு இருப்பது போல் தொடக்கமும் இருக்கும், இல்லையா? அதுதான் இது. சரி, என் நோக்கம்? பூஜ்யம். சும்மா கொல்வதற்கு நோக்கமெல்லாம் தேவையில்லை. உண்மையில் என் மனதை அகழ்வாராய்ச்சி செய்தால் கொலைக்கான பொறி எங்காவது புதைந்திருக்கலாம். அம்மாதிரி போஸ்ட்மார்ட்டங்களை பிறகு வைத்துக்கொள்கிறேன்.

எவனோ ஒருவனின் சாவுக்காக இரண்டு பஸ் பிடித்து வந்திருந்தேன். என் திட்டம் எளிமையின் மறு உருவம். என் ஊரிலிருந்து நான்கு மணிநேர பேருந்துப் பயண தூரத்தில் உள்ள ஒரு இடத்திற்குச் சென்று அங்கே இருட்டில் தனியாக இருக்கும் யாரையாவது போட்டுத்தள்ளிவிட்டு பேசாமல் திரும்பி வந்துவிட வேண்டும். யாராலும் கண்டுபிடிக்க முடியப்போவதில்லை. ஏனென்றால் சாகிறவனை எனக்குத் தெரியாது, சம்பவ இடத்திற்கு நான் போகக் காரணமே இல்லை. அங்கே எனக்கு யாரையும் தெரியாது. எனவே கொலையை என்னோடு தொடர்புபடுத்தவோ நோக்கம் கற்பிக்கவோ முடியாது. அதனால்தான் ‘அலிபி’ எதுவும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. என்னைப் பிடித்தால்தானே கேள்விகள் வரும். ‘இது பழைய டெக்னிக்’ என்று அலுத்துக்கொள்வது உங்கள் சுதந்திரம். ஆனால் யாராவது இப்படி ஒரு கொலையைச் செய்ய முயன்று மாட்டிக்கொண்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லைதானே?

இதிலிருந்து எங்கே போவேன் என்று என்னால் ஊகிக்க முடிகிறது. நான்தான் ‘கொலையாளி’ என்பது கண்டுபிடிக்கப்படாது. அந்த தைரியத்தில் இன்னொரு கொலை செய்வேன். அதுவும் அனாதைக் கொலையாகும். பிறகு கொல்வதே ஒரு போதைப் பழக்கமாகிவிடும். ஒவ்வொரு கொலைக்குப் பிறகும் ‘இன்றே கடைசி’ என்று தீர்மானிப்பேன். ஆனால் திடீரென்று நிறுத்த கொலை என்ன சிகரெட் பழக்கமா? ஒவ்வொரு விக்கெட்டாக சாய்ந்துகொண்டிருக்கும். காலைகளில் காபி சாப்பிட்டபடி செய்தித்தாளில் என் கொலைச் செய்திகளை புன்னகையுடன் படிப்பேன்.

ஒரு கொலை ‘ஆறிப்போக’ எத்தனை ஆண்டு ஆகும் என்று எனக்குத் தெரியாது. நானாக மூன்று ஆண்டுகள் வைத்துக்கொள்வேன். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு கொலை செய்தால் சரியாக இருக்கும். இதெல்லாம் நடக்கும் என்று நிச்சயம் இல்லை. நாளைக்கே என்னை வடநாட்டில் எங்காவது டிரான்ஸ்பர் செய்தால் அங்கே போய்க் கொலை செய்வது கடினம். மொழி ஒரு தடையாக இருக்கும்.

இதையெல்லாம் நம்மை நம்பிச் சொல்கிறானே என்று பார்க்கிறீர்களா? நல்ல கேள்வி. ஆனால் நீங்கள் சாகக்கிடக்கும் ஜேம்ஸ் பாண்டும் அல்ல, நான் மாட்டிக்கொள்ளப்போகும் உங்கள் படத்து வில்லனும் அல்ல. நீங்கள் கதை சொல்வதற்குப் பயன்படும் ஒரு கருவி, ஒரு கதை உத்தி, அவ்வளவுதான்; உயிருள்ள, ரத்தமும் சதையுமான நடமாடும் நிஜ நபர் அல்ல. இந்தக் கதை உத்தி இல்லாவிட்டால் நான் செய்யப்போகும் கொலைக்கு நேரடி வர்ணனை தர முடியாது. சட்டத்திற்கு உதவ முடியாத ஒரு டம்மி சாட்சி இல்லாமல் கொல்லும்போது கதைசொல்லியைத் தனிமை வாட்டும். அதனால்தான் பேச்சுத் துணைக்கு நீங்கள்.

2

என் அனுபவத்தின் நுகர்வோரே, இந்த சாவு வழக்கமான மனித சாவாகத்தான் இருக்கும். நீ யாராக, எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பொட்டென்று சாகடித்துவிடுவேன் என்கிறது விதி. மனிதனை சாகடிக்க விதி அவனிடம் அனுமதி பெறாவிட்டாலும், முன்னறிவிப்பு போல படிப்படியாகவாவது சாகடித்தால் அவனது சாவில் கண்ணியம் இருக்குமா? பொட்டென்று போவது கௌரவம் போலவும் ஆஸ்பத்திரியில் வாரக்கணக்கில் இழுத்துக்கொண்டு கிடப்பது வேதனையான சாவு போலவும் சொல்கிறார்கள். மருத்துவமனையில் ஒயர்களும் மின்திரைகளுமாய் இழுத்துக்கொண்டு கிடந்துவிட்டு, தெரிந்து சாவதல்லவா கௌரவ சாவு? ஆனால் தெரிந்து சாகவும் ஒரு முதிர்ச்சி வேண்டும்.

இன்றிரவு வழக்கத்தைவிட இருட்டாக இருக்கிறது. இந்த ஊரில்தான் இப்படியா அல்லது இருள் என் மனதிலிருந்து வருகிறதா? இருட்டைக் குறியீடாகக் கொண்டிருக்குமளவு நான் செய்யப்போகும் காரியம் மோசமா என்ன? இருக்காது. இருட்டு பற்றிய என் பார்வை என் ரகசிய பயத்தைக் குறிப்பதாக இருக்கலாம். ரகசிய பயங்கள் ஒன்றும் செய்யாது. வெளிப்படையாக பயந்தால்தான் வந்த காரியம் தடைபடும்.

நேற்று மழை பெய்திருக்கும் போல. தெரு சொதசொத என்று கிடந்தது. இன்றும் மழை பெய்தாலும் பெய்வேன் என்பது போல் இருந்தது. ஒரு இடத்தில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் எழும்பிக்கொண்டிருந்தது. மழையால் வேலை நின்று அந்த இடம் அலங்கோலமாகக் கிடந்தது. சற்றுத் தள்ளி ஒரு வீட்டுக் கதவு திறந்தது. பளீரென்ற சி.எஃப்.எல். விளக்கொளி, மங்கலாகத் தெரிந்த வாசற்படி பெயின்ட் கோலம் வரை பாய்ந்தது. சில நொடிகளில் உள்ளேயிருந்து ஒருவர் வந்தார். திரும்பிப் பார்த்து வீட்டுக்குள் இருப்பவர்களிடம் ஏதோ சொன்னார். உள்ளேயிருந்து ஒரு அம்மணி எதையோ கொண்டு வந்து அவரிடம் கொடுத்தாள். பிறகு அவர் தெருவில் நடக்கத் தொடங்கினார். நடுத்தர வயது, சராசரி உயரம், தொப்பை, மெதுவான அசைவுகள் என்று எல்லா சாமுத்ரிகா லட்சணங்களும் இருந்தன. அனேகமாக அவர்தான் நம்முடைய ஆள். அவரைப் பின்தொடரத் தொடங்கினேன்.

விண்ணப்பதாரர் நிதானமாக நடந்தார். மரணம் என்பது மற்றவர்களுக்கு நடக்கிற விஷயம் என்று, நம்முடைய சாவு உப்புச்சப்பில்லாததாக இருக்கும் என்று ஆழமாக நம்புபவனுடைய கவலையற்ற நடை அது. அப்படி நம்பாதவராக இருந்தால் சற்று ஓரமாக நடப்பார். வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், புதிதாக எத்தனை முளைத்தாலும் யாருக்கும் வராத வேதனை எதுவும் நமக்கு வந்துவிடாது என்ற எதிர்பார்ப்பின் நடையும்கூட அது. அப்படியா விண்ணப்பதாரரே, நான் உங்களுக்கு ஒரு செய்தி வைத்திருக்கிறேன்.

நம் ஆள் விசை கொடுக்கப்பட்டது போல எந்தத் தெருவிலும் சந்திலும் திரும்பாமல் நேராக நடந்துகொண்டிருந்தார். தமது உடனடி விதி தெரிந்தால் அந்தப் பகுதியில் ஒரு தெரு விடாமல் சுற்றிப் பார்த்துவிடுவார் என்று தோன்றியது. அவர் இரவு சாப்பாட்டிற்குப் பின் வாக்கிங் போக வந்தாரா, கடையில் ஏதாவது வாங்க வந்தாரா என்பது எனக்குத் தெரியாத வரை இந்த யுத்தத்தில் அவர் கைதான் ஓங்கியிருக்கும். ஆனால் கடைசியில் அவர் இடது பக்கமாக ஒரு இருட்டுச் சந்திற்குள் திரும்பினார். இதுதான் எனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பம்.

3

மழையின் ஈரம் காயாத தெரு, சற்றுத் தொலைவிலிருந்த சிறியதும் பெரியதுமான வீடுகளின் வெளிச்சத்தால் ஆங்காங்கே மின்னி மேடு பள்ளங்களை இனங்காட்டியது. நான் பின்தொடர்ந்துகொண்டிருந்த ஆள் நடையில் வேகத்தைக் கூட்டினார். என்னை மாதிரி ஆட்கள் சைலன்சர் பொருத்திய துப்பாக்கியா வைத்திருப்பார்கள்? நல்ல கருங்கல்லாகத் தேடிக்கொண்டிருந்தேன். டார்ச் எடுத்து வந்திருக்கலாம் என்று தோன்றியது. அது பயன்பட்டிருக்காது என்று அடுத்த கணமே உறைத்தது.

குடும்பஸ்தருக்குக் கைபேசியில் அழைப்பு வந்தது. எடுத்து சில நொடிகள் பேசிவிட்டு வைத்துவிட்டார். வீட்டிலிருந்துதான் வந்திருக்கும். அப்படியே ஒரு கிலோ புளியும் வாங்கி வந்துவிடுங்களேன் என்று சொல்லியிருப்பார்கள். எனது ஊகம் உண்மையாக இருந்தால் வாழ்க்கையில் அவர் வாங்கப்போகும் கடைசி கிலோ புளி அதுதான்.

நடந்துகொண்டிருந்தவர் சட்டென நின்றார். தெருவிற்குக் குறுக்கே ஒரு பெரிய பள்ளம் தோண்டியிருந்தார்கள். தோண்டியெடுத்த மண் அதன் அருகில் நான்கடி உயர மேடாகக் கிடந்தது. எனக்கொரு யோசனை. ஓடிப்போய் அவரை அதில் தள்ளிவிட்டால்? ஆனால் சாக வாய்ப்பு குறைவு. மண் ஆவாரே தவிர மண்ணோடு மண் ஆக மாட்டார். நான் மாட்டாமல் தப்பிக்கலாம். ஆனால் வந்த காரியம் நிறைவேறாது. மனிதர் இருபக்கமும் பார்த்து யோசித்தபடி நின்றார். எனக்குப் பகீரென்றது. அவர் பள்ளத்திற்காக வந்த வழியே திரும்பிச் செல்ல முடிவெடுத்தால் என்னைப் பார்த்துவிடுவார். என்னிடம் பேசவும் செய்யலாம். இந்த மாதிரி ஆட்கள் அறிமுகமில்லாத ஆட்களுடன் பேச வாய்ப்பு கிடைத்தால் விட மாட்டார்கள். அந்த ஆள் பேசி நான் பதில் சொல்லாமல் பின்தொடர்ந்தால் சந்தேகத்தைக் கிளப்பும். பதில் பேசினால் அவர் கூடவேதான் நடந்து செல்ல வேண்டியிருக்கும். பின்தொடர முடியாது. திடீர் தாக்குதலுக்கு சாத்தியம் இல்லாமல் போகும்.

நல்ல வேளையாக அவர் அந்த மண் மேட்டை சுற்றிச் சென்றார். நானும் அவர் பார்வையில் படாமல் பின்தொடர்ந்தேன். கைபேசியை எடுத்து யாருக்கோ போன் செய்து ஒரு நிமிடம் போல் பேசினார். என் ஊகப்படி அவர் ஏதோ ஒரு பெரிய கடைக்குச் சென்றுகொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் எல்லா இடங்களிலும் கடைகள் மூடியிருந்தன. அவர் அனேகமாகப் பிரதான சாலையில் இருந்த ஒரு கடைக்குச் சென்றுகொண்டிருந்தார். தொலைவில் தெரு முனையில் கூடுதல் வெளிச்சமும் வாகனங்களும் தென்பட்டன. அதுதான் பிரதான சாலை. ஆனால் நம் ஆள் இடப்பக்கமாகத் திரும்பி இன்னொரு தெருவிற்குள் சென்றார்.

இந்தத் தெருவை எனக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. நான் நுழைந்த பாதியில் ஓரிரு தெருவிளக்குகள் எரிந்தன. ஒரு வீட்டில் ஒரு குடும்பம் மொத்தமும் வாசலில் உட்கார்ந்து பேச்சும் சிரிப்புமாக இருந்தது. இன்னொரு வீட்டு வாசலில் ஒரு பெண்ணுடன் ஒருவன் சைக்கிளை நிறுத்திவைத்துப் பேசிக்கொண்டிருந்தான். ஒரு வீட்டு வாசலில் நான்கைந்து பேர் ஒரு குழந்தையிடம் மாற்றி மாற்றிக் கேள்வி கேட்டு மழலையைக் கிளறி ரசித்துக்கொண்டிருந்தார்கள். நான் அந்த வீட்டைக் கடந்து போகும்போது அந்தக் குழந்தை என் மேல் இடிக்க வந்தது. சட்டென விலகி யாரும் என் உருவ அடையாளங்களை கவனிப்பதற்குள் விரைவாக நடந்தேன். இதென்ன திடீர் இம்சை!

சலிப்பும் களைப்பும் என்னுள் முகாமிடத் தொடங்கின. அவநம்பிக்கையும் கண நேர தரிசனம் அளித்தது. இதைச் செய்ய முடியாது என்று தோன்ற ஆரம்பித்தது. திரும்பிச் செல்ல கடைசிப் பேருந்து 11.30 மணிக்கு. இந்த ஆள் செய்யும் தாமதத்தால் பேருந்தைக் கோட்டை விட்டால் சிறிது நேரமாவது தெருவில் நடமாடி ரோந்து போலீசிடம் சிக்க வேண்டியிருக்கும். இங்கே என்ன செய்கிறாய் என்று போலீஸ் விசாரித்தால் என்ன சொல்வேன்? பயமும் எட்டிப் பார்த்தது. ஆனால் இந்த உணர்வுகள் என் வைராக்கியத்தை இன்னும் வலுப்படுத்தவே செய்தன. எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த ஆள் சாக வேண்டும். வீட்டிலிருந்து வெகு தூரம் நடந்து வந்துவிட்டார். எனவே திரும்பவும் இருட்டுத் தெருக்கள் வழியாகத்தான் சென்றாக வேண்டும். நம்பிக்கைக்கு நிறைய இடம் இருந்தது. எதிர்பாராமல் அவர் இன்னொரு சந்தில் திரும்பினார். மிகக் குறுகலான சந்தாக இருக்க வேண்டும். இங்கிருந்து பார்த்தால் அப்படி ஒரு இடம் இருந்ததே தெரியவில்லை.

தெருவோரத்தில் மாம்பழ வடிவத்தில் ஒரு பெரிய கருங்கல் தென்பட்டது. அதைக் கையிலெடுத்தேன். நடையில் தீர்மானத்தையும் வேகத்தையும் அதிகரித்துக்கொண்டேன். அவர் வழி தெரிந்துதானே நடந்துகொண்டிருக்கிறார் என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. வழி தெரியாமல் முட்டுச் சந்தில் முடிந்தால் அவர் என்னைப் பார்த்துவிடுவார். அவர் சாகும்போது மட்டும் என்னைப் பார்த்தால் போதும். இல்லை என்றால் கைகலப்பாகி காயத்தோடு முடிந்துவிடும். ஆள் செத்தாலும் சம்பவத் தரையில் என் சட்டைப் பொத்தான், நக இடுக்கில் என் சதை, மயிர், வியர்வை என்று மரபணு ஆதாரங்கள் குவிந்துவிடும். ஆனால் அது முட்டுச் சந்து அல்ல, இன்னொரு இருள் பிரதேசம்தான். இப்போது கொன்றே ஆக வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. பயம்தான், வேறென்ன. இத்தனைக்கும் அது ஒரு தற்கொலைகூட அல்ல. என் கையால் இன்னொருவன்தான் சாகப்போகிறான்.

இடையில் அவருக்கு இன்னொரு கைபேசி அழைப்பு வந்து பேசத் தொடங்கினார். இதுதான் பாய வேண்டிய நேரம். கருங்கல்லை இடது கைக்கு மாற்றிக்கொண்டு வலது உள்ளங்கை வியர்வையை பேண்ட்டில் துடைத்துக்கொண்டு விரைந்தேன். நம் ஹீரோ இன்னொரு சந்தில் திரும்பினார். நான் கல்லை மீண்டும் வலது கைக்கு மாற்றி மார்புயரம் ஓங்கிய நிலையில் ஏந்தி கிட்டத்தட்ட ஓட்டமாகப் பின்தொடர்ந்தேன்.

சந்தினுள் நுழைந்ததுதான் தாமதம், பளாரென்று முகத்தில் அறைந்தது வாகன விளக்கொளி. எதிர்பாராத போலீஸ் ஜீப். வெள்ளமாகப் பாய்ந்த விளக்கொளிக்குப் பின்னால் மங்கலாக ஜீப் வாசலில் சில உருவங்கள்.

“யூ ஆர் அண்டர் அரஸ்ட்” என்றது விளக்கொளி.

4

சாவு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் சார். உங்களுக்கும் எனக்கும்கூட வரலாம். ஆனால் எனக்கு சாவே பிடிக்காது. டிவியில் வந்தால் சானலை மாற்றிவிடுவேன். மாற்றின சானலில் வந்தால் அலுத்துக்கொள்ளாமல் திரும்பியும் மாற்றுவேன். அதன் மேல் அவ்வளவு வெறுப்பு. “சாவு நமக்குள்ளேயே இருக்கிறது” என்பார் எங்கள் ஜே.இ. “காத்துக்கொண்டிருந்துவிட்டு ஒருநாள் நம்மை இழுத்துக்கொள்ளும்” என்பார் அவர். நிறைய படித்தவர்.

எனக்குப் பொதுப்பணித்துறையில் வேலை. காலையில் எட்டு மணிக்கு பஸ் ஏறினால் எழும்பூர் வர பத்து ஆகிவிடும். ஐந்து நிமிடம் தாமதமானால்கூட ஏட்டு (ஹெட் கிளார்க்குக்கு அப்படித்தான் பெயர் வைத்திருக்கிறோம்) காரசாரமாகத் திட்டுவார். சாயந்திரம் ஐந்தரைக்கு ஆபீசிலிருந்து கிளம்பினால் வீட்டுக்கு வந்து சேர எப்படியும் எட்டு ஆகிவிடும். வந்து ஒரு லைட் காபி சாப்பிட்டுக்கொண்டு டிவியில் சீரியல் பார்த்துக்கொண்டு கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்… தினமும் அப்படித்தான் வழக்கம். இன்றைக்கு வீட்டிக்குக் கிளம்பத் தாமதமானதால் வர ராத்திரி ஒன்பதாகிவிட்டது.

சாப்பிட்டுவிட்டு டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது அசரீரி மாதிரி ஒரு குரல் கேட்டது. கேட்கும்போதே அது எனக்கு மட்டும்தான் கேட்கிறது என்று புரிந்துவிட்டது. வாக்மேனில் கேட்குமே, அது மாதிரி. சுற்றிமுற்றிப் பார்த்தால் அவரவர்கள் அவரவர்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். திடீரென்று அனாமத்தாக ஒரு குரல் எனக்கு மட்டும் கேட்கிறதே என்று எனக்கென்னவோ பதற்றமே வரவில்லை. குரலைப் பார்த்தால் சின்னப் பையன் மாதிரி இருந்தது. டிவி சத்தத்தைக் குறைத்துவிட்டு, என்னவென்று கேட்போமே என்று காபியைக் குடித்துக்கொண்டு கேட்க ஆரம்பித்தேன். ஆள் யார், எங்கிருந்து பேசுகிறான் என்று ஒரு விவரமும் இல்லை. யாரையோ கொலை செய்யப்போகிறானாம். நீண்ட நாள் திட்டமாம். போலீசால் கண்டுபிடிக்க முடியாதாம். கொலைக் கதை மாதிரி இருந்தது. ஆனால் வளவளவென்று தத்துவம், என்னத்திற்கோ ஒரு வறட்டு கர்வம், தெனாவெட்டு…

டிவியில் ‘வாழாவெட்டி சுமங்கலி’ ஓடிக்கொண்டிருந்தது. நீங்கள் சீரியல் பார்ப்பீர்களா? என் பெண்டாட்டி பேஸ்ட் தீர்ந்துவிட்டது, வேறு வாங்கி வா என்றாள். எதையும் தீருகிற வரைக்கும் விட்டுவிட்டு தீர்ந்தப்புறம் விழுந்தடித்துக்கொண்டு கடைக்கு ஓடுவது பெண்களின் பழக்கம். காலையிலேயே பேஸ்ட்டைப் பிதுக்கும்போது கவனித்தேன். ஆபீசிலிருந்து வருகிற வழியில் வாங்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். தாமதமானதில் மறந்துவிட்டது. என் பெண் – ஒரே பெண் – பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தாள். அது மட்டுமில்லாமல் மணி பத்தாகப் போகிறது என்பதால் அந்த நேரத்தில் அவளை வெளியே அனுப்ப வேண்டாமே என்று நானே வாங்குவதற்குக் கிளம்பினேன். வெளியே போனால் மழை வருகிற மாதிரி இருந்தது. பெண்டாட்டியிடம் குடை கேட்டு வாங்கிக்கொண்டேன்.

எங்கள் பகுதியில் எட்டு எட்டரைக்குக் கடையெல்லாவற்றையும் மூடிவிடுவான். மெயின் ரோட்டில் ஒரு கடை இருக்கிறது. ராத்திரி பதினோரு மணி வரைக்கும் திறந்திருப்பான். ஹோல்சேலாக விற்கிறான் என்பதால் டூத்பேஸ்ட் அங்கே ஒரு ரூபாய் கம்மி. ஆனால் ரொம்ப தூரம் நடக்க வேண்டும். இன்றைக்கு வேறு வழி இல்லை. கதை கேட்டுக்கொண்டே நடந்தேன்.

ரோடு குண்டும் குழியுமாக இருந்தது. புது செருப்பு வாங்கினால் மூன்று மாதம்தான் வருகிறது. தெரு விளக்குகள் பாதி நாள் எரிவதேயில்லை. இருட்டில் பெரிய பள்ளம் ஏதாவது இருந்தால் அடிபட்டு சாக வேண்டியதுதான். இதற்கு நடுவில் அசரீரி கதை ரேடியோவில் பண்ணுகிற மோனோ ஆக்டிங் நாடகம் மாதிரி ஓடிக்கொண்டிருந்தது. கதையில் உருப்படியாக எதுவும் இல்லை. ஆனால் எப்படித்தான் முடிகிறது என்று பார்ப்போமே என்று நானும் விடாமல் கேட்டுக்கொண்டே வந்தேன். கதை முடிந்த பிறகு என்ன ஆகும் என்று தெரிந்துகொள்ளவும் ஒரு ஆவல். என்னுடைய நல்ல நேரம், நான் அதை அலட்சியமாக விடவில்லை. ஏனென்றால் நான் இப்போது சொல்லப்போவதை நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

அந்தக் கதை இருக்கிறதே, நான் கேட்டுக்கொண்டிருந்த கொலைக் கதை, அது என்னுடைய கதைதான். அந்தப் பையன் ஒரு ஆளைப் பின்தொடர்கிற மாதிரி வரும். அதிலிருந்தே ஏதோ உறுத்தியது. ஏனென்றால் அவன் சொன்ன வீடு, தெரு, வர்ணனை, அவன் பின்தொடரும் ஆள் போகிற வழி, எல்லாமே அச்சு அசப்பில் எனக்குப் பொருந்தியது. அவன் சொல்லச் சொல்ல நான் பயந்த மாதிரியே எல்லாம் துல்லியமாக இருந்தது. எனக்கு உதறியது. இவன் யார்? ஏதாவது மாயாவியா? என் காதுக்குள்ளே எப்படி வந்தான்? என்னை எப்படிப் பிடித்தான்? எங்கேயிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்? “டேய், நிறுத்தடா!” என்றேன். “யாரடா நீ?” என்றேன். நன்றாகக் கத்தினேன். அவன் காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை. அவன் பாட்டுக்குப் பேசிக்கொண்டேயிருந்தான். பிறகு எவ்வளவோ கெஞ்சினேன், மிரட்டினேன், ஒன்றுக்குமே அவன் பதில் சொல்லவில்லை. தன் பேச்சை அவன் நிறுத்தவேயில்லை. நான் பேசுவது அவனுக்குக் கேட்காமல் அவன் பேசுவது மட்டும் எனக்குக் கேட்டுக்கொண்டிருந்தது ஒன்வே ரேடியோ மாதிரி. நான் நடந்துகொண்டிருந்த ஏரியாவில் ஈ காக்காய் இல்லை. வரிசையாய் ஷட்டர் போட்ட கடைகள். கத்தினால் யாருக்கும் கேட்காது, ஓடிப் பிரயோஜனம் இல்லை. ஒரே விஷயம், எனக்குத் தெரியும் என்று அவனுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் என்னிடம் சொல்லியிருப்பானே.

அவன் விடாமல் தீர்மானமாக இருந்தான். இன்னொரு பக்கம் பயப்பட வேண்டுமா என்பதே எனக்கு சந்தேகமாக இருந்தது. இது கனவாக இருந்தால்? வீட்டில் இருந்தாலாவது அக்கம்பக்கத்திலிருந்து யாரையாவது வரச் சொல்லி தப்பிக்கலாம். அவர்கள் எனக்கு மறை கழன்றுவிட்டது என்று நினைத்தால்கூடப் பரவாயில்லை, யாராவது கூட இருப்பார்கள். ஆனால் வீட்டிலிருந்து ரொம்ப தூரத்துக்கு வந்து இருட்டில் தனியாக மாட்டிக்கொண்டேன். நான் நடக்கிற ஒவ்வொரு அடியையும் நான் போகிற ஒவ்வொரு தெருவையும் சரியாக வர்ணித்துக்கொண்டிருந்தான் அவன்.

வாயைத் திறக்க முடியாமல் மனசுக்குள்ளேயே அனத்திக்கொண்டிருந்தேன். உயிருக்கு ஆபத்து வந்தால் என்னை மாதிரி சாதாரண பிள்ளைக்குட்டிக்காரன் என்ன செய்வான்? என் பெண்ணும் பெண்டாட்டியும் கண்ணில் வந்தார்கள். என் பெண்டாட்டியைவிட என் பெண்ணை நினைத்தால்தான் துக்கமாக வந்தது. இரண்டு பேருமே பாவம்தான்.

இதே மாதிரி முன்பு ஒருமுறை நடு ராத்திரியில் நான்கு நாய்களிடம் மாட்டிக்கொண்டேன். ஓடவும் முடியாது, நிற்கவும் முடியாது, அடிக்கவும் முடியாது. பாய்ந்துவிடும். கல் மாதிரி அப்படியே நின்றுவிட்டேன். அசைவதற்கே பயமாக இருந்தது. ஒன்று இருந்தால் சமாளிக்கலாம், நாலோடு மல்லுக்கட்ட முடியுமா? நாலும் உர், உர்ரென்று உறுமிக்கொண்டே பாய்வதற்கு ரெடியாக நின்றுகொண்டிருந்தது. யாராவது அந்தப் பக்கம் வந்து விரட்டாவிட்டால் சதை மிஞ்சாது. அந்த சமயத்தில் ஒரு ஆட்டோவில் இரண்டு பேர் வந்ததால் அன்றைக்குத் தப்பித்தேன். அதே மாதிரிதான் இப்போது சிக்கிக்கொண்டேன். ஓடத் தெம்பில்லை, துரத்துவான். நின்று என்னடா என்று கேட்டு சண்டை போட வயதில்லை. கத்தியோ கித்தியோ ஈஸியாக சொருகிவிடுவான். அப்புறம் அநாதைப் பிணமாகக் கிடக்க வேண்டும்.

அப்போது வீட்டிலிருந்து போன் வந்தது. வரும்போது அப்படியே ஒரு கிலோ புளி வாங்கிக்கொண்டு வா என்றாள் மனைவி. அவள் தாலிக்கு ஆபத்து வந்ததே அவளுக்குத் தெரியவில்லை! எனக்கா, அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. அவளிடம் சொன்னால், ஒன்று, என்ன உளறுகிறாய் என்பாள், அல்லது நம்பி ஒரேடியாக பயந்துவிடுவாள். அவள் வேலைக்கு ஆக மாட்டாள். ஆனால் பேசிவிட்டு வைக்கும்போதுதான் எனக்கு போலீஸ் ஞாபகமே வந்தது. இது முன்பே தோன்றியிருக்கக் கூடாதா?

உடனே 100ஐ அழைத்தேன். ஒரு லேடிதான் போனை எடுத்தார்கள். நிதானமாகப் பேசினார்கள். ஆள் வருவார்கள், பதட்டப்படாமல் இருங்கள் என்றார்கள். எனக்கு இந்த ஏரியா மனப்பாடமாகத் தெரியும். நான் பாட்டுக்கு ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுக் கால் போன போக்கில் நடந்துகொண்டேயிருந்தேன். ஓட வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. நடுவில் ஒரு தெரு முழுக்க ஜனங்கள் இருந்தார்கள். யாரிடமாவது உதவி கேட்கலாம், இல்லையென்றால் ஏதாவது ஒரு வீட்டுக்குள் புகுந்து ஒளிந்துகொள்ளலாம். ஆனால் நான் சொல்வதை அவர்கள் நம்ப வேண்டுமே! இப்போது தப்பித்தாலும் அவன் எங்கேயாவது ஒளிந்துகொண்டு நான் தெருவை விட்டு வந்ததும் மீண்டும் துரத்தினால் என்ன செய்வது? அதனால் நடந்துகொண்டேயிருந்தேன்.

சிறிது நேரத்தில் எனக்கு இன்னொரு போன் வந்தது. இந்த முறை முட்டையா பூண்டுப் பொடியா என்று நினைத்துக்கொண்டே பதட்டமாக போனை எடுத்தால் போலீஸ். இன்னொரு ஆள் பேசினார். நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டார், சொன்னேன். அந்தத் தெருவிற்கு வரும் வழியில் தோண்டியிருக்கிறார்கள், ஜீப் நுழையாது என்றார். நான் வரும் ஏரியா வெளிச்சமாக இருக்கும், நிறைய ஜனம் இருக்கும், மெதுவாக மூன்றாவது தெருவுக்கு வாருங்கள், அங்கே அவனைப் பிடித்துவிடுவோம், பயப்படாமல் இருங்கள் என்றார். எனக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. ஹார்ட் அட்டாக் வருகிற அளவுக்குப் படபடப்பாக இருந்தாலும் நம்பிக்கையோடு நிதானமாக நடந்தேன். மூன்றாவது தெருவுக்குள் போனால் ஒரு போலீஸ் ரோந்து ஜீப் நின்றிருந்தது. அருகே இரண்டு போலீஸ்கள் நின்றிருந்தார்கள். எனக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தார்கள் போல. என்னைப் பார்த்ததும் இரண்டு பேரும் ஓரமாகப் போ என்று வேகமாக சைகை செய்தார்கள். நான் ஓடிப் போய் ஜீப்புக்குப் பக்கத்தில் சுவரோரமாக நின்றுகொண்டேன். அந்த ஆள் பின்னாலேயே கையில் பெரிதாக இளநீர் சைஸுக்கு ஒரு பாறையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தான். அதனால் அடித்தால் தலை நசுங்கிவிடும். போலீஸ் அவனைக் கோழி அமுக்குவது போல் அமுக்கிவிட்டார்கள். சின்னப் பையன்தான். இப்போது கொலை முயற்சி கேஸில் புழலில் இருக்கிறான். “சின்னப் பையன்கள் எதையாவது படித்துவிட்டுக் கொலைசெய்ய வந்துவிடுகிறார்கள்” என்றார் ஒரு போலீஸ். அப்படி என்னதான் படிக்கிறார்களோ!

5

நைட் ஒரு 11 மணிக்கு எனக்கு கன்ட்ரோல் ரூமிலிருந்து போன் வந்தது சார். ஏரியா எல்லாம் சொல்லி ஒரு மர்டர் அட்டெம்ட்டை தடுக்க சொன்னார்கள். பத்து நிமிஷத்தில் மடக்கிப் பிடித்துவிட்டோம். அக்கிஸ்ட்டை பொதுவாக முதலில் லாக்கப்பில் விட்டு நாலு காட்டு காட்டி ஒரு கண்டிஷனுக்குக் கொண்டுவருவோம். ஆனால் இந்த ஆள் வரும்போதே பேயடித்த மாதிரி இருந்தான். என்ன எழுதிக் கொடுத்தாலும் கையெழுத்து போட்டுவிடுவான் போல இருந்தது. என் கண்ணெதிரிலேயே அவன் கையைக் கிள்ளிக்கொண்டான். கிராக்கு. பொறுமையாக விசாரித்தேன். முன்பகை கிடையாது. ஆள் ஒருத்தருக்கு ஒருத்தர் யாரென்றே தெரியாது. எதற்கடா கொல்லப் போனாய் என்றால் உளறுகிறான். பிலாசபி பேசுகிறான். ஏதாவது படித்துவைத்திருப்பான் போல. கொலை செய்தால் தண்டனை கிடைக்காது என்று எந்த பிலாசபி சொல்கிறது சொல்லு என்று கேட்டேன். பயலுக்குப் பேச்சே வரவில்லை. கம்ப்ளெயின்ட் கொடுத்தவன் சொன்ன கதை எங்கேயும் செல்லாது. எஃப்.ஐ.ஆரில் அந்த ஆள் புகாரைப் பார்த்தால் சிரிப்பீர்கள். நாங்கள் பார்க்கும்போது அக்கிஸ்டு கொலை செய்ய ஓடி வந்தான். நாங்கள்தான் சாட்சி, நாங்கள்தான் கேஸ். நாங்கள் மட்டும் உடனே போகவில்லை என்றால் ஆள் செத்திருப்பான். ஆனால் அந்த ஆளுக்கு நன்றியே இல்லை. ஸ்டேஷனில் எங்கள் காசில் காபி குடித்துவிட்டு பிளாஸ்டிக் கப்பைக்கூட எடுத்துக்கொண்டு போய்விட்டான். நாளைக்கு பேப்பரில் வரும் பாருங்கள்.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar