காதல் பத்து

in கவிதை

1

தரையில் இறைந்திருக்கும்
வாடிய பூக்களின் காட்டில்
உன் தலையிலிருந்து உதிர்ந்ததை
எங்கென்று தேடுவது?
எல்லா பூக்களும் வாடித்தான் இருக்கின்றன

2

உன் பையால்
சுமந்துகொள்கிறேன்

3

உன்னுடனான பொழுதை வளர்த்த
ஒவ்வொரு பேருந்தையும் தவற விடுகிறேன்.
நீ போக வேண்டிய பேருந்தைத்தான்

4

பேச்சு உன் தோழிகளிடம் என்றாலும்
என் மீதே உன் பார்வை
என் அழகைத்தான் வர்ணிக்கிறாயோ?

5

நான் உனக்கு அண்ணன்தானே
என்கிறேன் உன்னைச் சீண்டி
இருக்கிற அண்ணன்கள் போதாதா
என்கிறாய் பீதியைக் கிளப்பி

6

அங்கே தொடாதே, இங்கே தொடாதே என்கிறாய்
எங்குமே தொடாமல் எங்கு நான் போவதாம்?

7

நீ படித்த பள்ளிக்கூடத்தை
இடித்துக்கொண்டிருக்கிறார்கள்
நீ கும்பிட்ட கோவிலை
மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்
நீ படம் பார்த்த தியேட்டரை
ஓட்டலாக்கிவிட்டார்கள்
என்னை மட்டும்
விட்டுவைத்திருக்கிறார்கள்

8

மணிக்கணக்காய் கைகோத்திருக்க
உனக்கும் ஆசை, எனக்கும் ஆசை
ஆனால் உள்ளங்கை வியர்வையைவிட
வலியதா நம் காதல்?

9

ஐயையோ அப்பா வருகிறார், ஓடு என்கிறாய்
உன் அப்பாவா, எங்கே என்று பார்த்தால்
பெரிய்ய இவர் போல வருவது என் அப்பாதான்
அந்த பீதியான அவசரத்திலும்
உன் அன்னியோன்யத்தை நினைத்துச் சிலிர்த்து –
ஏய், இரு, நீ என்ன சொல்ல வருகிறாய்?

10

இப்போது
வெட்கமும் சிணுங்கலும்
திருமணத்திற்குப் பின்
பொங்கலும் பொருமலும்
இதுதானே உனது டீலிங்?

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar