18 கவிதைகள்

in கவிதை

1

கடற்கரை மணல்
காலணியில் பயணித்து
வீட்டுக்கு வந்திருக்கிறது
இங்கென்ன வேலை?

2

இந்த முனை முதல்
அந்த முனை வரை
ஒரே வெளிச்சம்
குழல் விளக்கு

3

குறுகிய நடைபாதையில்
பெரும் பையுடன்
ஒரு குண்டு அம்மணி நடக்கிறார்
மெதுவாய், மிக மெதுவாய்

4

தரையில் கிடைத்த தேய்காசு
ஒரு பக்கம் அசுத்தம்

5

எங்கும் பறக்கிறது
பாலிதீன் பை
கேட்க ஆளில்லை

6

நான் நடக்காத இடங்களில்
நின்று, யோசித்து
நடக்கிறது பல்லி

7

தட்டினால் சரியாகாத இது
ஒரேயடியாகப் போய்விடும்

8

காலியான ஆட்டோவிற்கு
வேகத்தைப் பார்!

9

குருவிக் கத்தல் கேட்டு
தட்டச்சை நிறுத்துகிறேன்
குருவியும் நிறுத்திவிட்டது

10

குட்டிக் குழந்தையே,
எதற்கிந்தப் புன்னகை?
சரி சரி, விடு

11

ஒதுங்கவைத்த சவ ஊர்வலத்தில்
தெரிந்த முகம்
ஒன்றுகூட இல்லை

12

மின்விசிறிக் காற்றில்
என் கூந்தல்
பறக்காது, உலரும்

13

செய்வதையே செய்யும்
இந்தக் கடலுக்குத்தான்
எத்தனை சத்தம்

14

போதாமல் சேர்த்த சர்க்கரை
காபி தீர்ந்த பின்
மிச்சமிருக்கிறது

15

என்னால்தான் வீணாம்
உன் வாழ்க்கையே
உன் கவலை உனக்கு

16

தூங்கும் குழந்தை
இடறினால் எழாது

17

எனக்கு முன்னே சிறுக்கும்
வரிசை
எனக்குப் பின்னே வளர்கிறது

18

ஆவியுமிழ் காபியில்
பதமாக வேகிறது எறும்பு
மாறாத சுவை

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar