பொன்மொழிகளின் அறப் புரட்சி

in கட்டுரை

கனவுகளைப் பெரிதாகக் காணு. அதில் பைசா செலவு கிடையாது. – யாரோ

மனித இனத்தின் தார்மீக மேம்பாட்டிற்குப் பொன்மொழிகள் ஆற்றிவரும் பங்கு குறிப்பிடத்தக்கது. ‘இப்படிச் செய்யாதே, அப்படி இருந்துவிடு’ என ஒரு பொன்மொழியைப் படித்த மறுகணம் மனிதன் உஷாராகித் தன் வாழ்க்கையைத் தடம் புரட்டிக்கொள்கிறான். நொடிநேர வாசிப்பில் எல்லோரையும் மதிக்கும் அன்பார்ந்த சாமர்த்தியசாலி ஆகிறான்.

அவனைச் சுற்றியுள்ளவர்கள் அவனது ஒரே போடான உருமாற்றத்தையும் தமது உலகம் போர்க்கால அடிப்படையில் கிடுகிடுவென மாற்றங்காண்பதையும் கண்கூடாகப் பார்க்கிறார்கள். அவன் ஊரில் அது வரை எரியாமல் கிடந்த தெருவிளக்குகள் இனி பகலிலும் எரியத் தொடங்குகின்றன. எல்லோர் வீட்டிலும் 24 மணிநேரம் தண்ணீர் வருகிறது. பாலின, இன, ஜாதி, வர்க்க, தேசிய, பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் பொன்மொழிகளின் நிதர்சன உரமேறிய வீறுகொண்ட வார்த்தைகளால் புண்பட்டுத் தம்மைத் தாமே தலைமுழுகிக்கொள்கின்றன. முக்கியமாக, தனியொரு மனிதனுக்கு உணவு கிடைத்து ஜகம் அழிவிலிருந்து காக்கப்படுகிறது.

அண்டை ஊர்களின் பிரச்சினைகள் இந்தத் தலைமுழுகிகளைப் பார்த்துக் கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன. ஆனால் அவைகளுக்குத் தெரியுமா அந்த ஊரிலும் பொன்மொழிதாசர்கள் இருப்பது? “முதலில் உன்னை நம்பு, பிறகு அடுத்தவனை நம்புகிற வழியைப் பார்” என்ற பொன்மொழி படிக்கப்பட்டு சுச்சுப் போட்ட கணக்காயும் காத்திருந்தாற்போலவும் எல்லோரும் எல்லாமும் மாற்றமடைந்து முன்னேறுகின்றன(ர்). பொன்மொழிப் புரட்சி காட்டுத் தீ போல் பரவுகிறது. இந்தப் பின்நவீன சுவிசேஷ செய்திகளால் தொலைத்தொடர்பு வலைப்பின்னல்கள் ஸ்தம்பித்து பரவலாகப் பெரும் பதற்றம் ஏற்படுதிறது. எல்லாம் நல்லபடி மாறுகிறது. பல பகுதிகளில் திருட்டு பயம் அறவே இல்லை.

உலக நாடுகள் பலதில் காவல் மற்றும் நீதித் துறைகளுக்கு பதிலாக பொன்மொழித் துறை இயங்குவதை நாம் காணலாம். சில சமயங்களில் அவை நம் காலத்தின் ‘Big Brother is watching you’. இன்டர்போல், நேட்டோ, ஐ.நா. போன்ற அமைப்புகள் இணைய சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் அதிகாரத்தின் கொடுக்குகளைப் பரவலாக்கிக்கொண்டுள்ளன. நாளைக்குக் காலையில் செய்தித்தாள்களில் உலக ஏழைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டதாகச் செய்தி பார்த்தால் ஆடிப்போகாதீர்கள். எல்லாம் பொன்மொழிகளின் கைங்கரியம்தான்.

பொன்மொழி எழுதாத எழுத்தாளர்கள் யார்? எழுத்தாளர்கள் மேதமையைக் காட்டிக்கொள்ளும் முனைப்பிற்கும் வாசகனுக்கும் பொன்மொழிகளே பாலமாகும். எழுத்தாளர்கள் ‘என் பொன்மொழிகள்’ என்று தனி புத்தகமாகப் போட்டுக்கொள்ளக் கூச்சப்பட்டாலும் தங்கள் படைப்புகளிடையே அவற்றை நுழைத்து ‘இந்த வாக்கியம் நன்றாக அமைந்திருக்கிறது, அடியில் “-” போட்டு quote பண்ணுவார்கள்’ என்று திருப்தியடைவது வழக்கம். எனது படைப்புகளிலேயே சந்தடி சாக்கில் தத்துவ முத்துக்கள் உதிர்க்கப்பட்டிருக்கும். நானும் என் பங்குக்குப் பொன்மொழிகளாகவே சிலவற்றை எழுதியுள்ளேன். ஆனால் ஒரு எச்சரிக்கை: பொன்மொழிகளுக்கு வாசகர்களை மதிக்கத் தெரியாது. அறிவுரை அளிக்கும் மிதப்போ என்னவோ, எப்போதும் ஏக வசனம்தான். பிடித்திருந்தால் பரப்பவும்.

  • தப்பே செய்யாதவனும் இல்லை, நல்லதே செய்யாதவனும் இல்லை. இரண்டுமே செய்யாதவன் இல்லவேயில்லை.
  • எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் நிகழ்காலத்தைக் கோட்டை விடாதே. நிகழ்காலம் போனால் வராது.
  • கண்ணாடி வீட்டில் இருப்பவன் மீது சேற்றை வாரி இறைக்காதே.
  • நல்லதே செய்பவனைத் தீமை அண்டாது. அப்படி அண்டினால் அதற்கு நாம் ஒன்றும் செய்ய இயலாது.
  • நீ காதலிக்கும் ஏழைப் பெண்ணைவிட உன்னைக் காதலிக்கும் பணக்காரப் பெண்ணைக் கட்டிக்கொள்.
  • மற்றவன் செய்யும் ஒரு தவறைப் பார்த்துத் திருந்தினால் நமக்கு ஒரு தவறு மிச்சம்.
  • பணத்திற்காக எதையும் செய்யத் துணிபவன் பெரிய பணக்காரன் ஆகிவிடுவான்.
  • பெண்களை மதிக்கத் தெரியாதவனுக்கு வீட்டில் ஏதாவது பிரச்சினை இருக்கும்.
  • என்னால் முடியுமா என்று கேட்காதே. இவனால் முடிகிறதே என்று யோசி.
  • கலிகாலத்திற்குக் கிளைகள் இல்லை.

 

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar