நடிப்புச் சூரியன்

in கவிதை

கோடையின் அனல் நழுவிச் சென்றுவிட்டது.
ஆனாலும் பழக்கதோஷத்தால்
உடல் கொஞ்சம் வியர்த்துப் பார்க்கிறது.
நகரத்து இயற்கையில்
இப்போது வெக்கையை
பூதக்கண்ணாடி வைத்துத்தான்
தேட வேண்டும்.
‘நான் தப்பே பண்ணவில்லை,
நான் அந்த மாதிரி ஆள் இல்லை’
என்று சூரியன் சொல்வது போலுள்ளது.
‘என் கடமையைத்தானே செய்தேன்?
அதற்காக என்னை வைவானேன்?’
என்று சொன்னாலாவது நம்பும்படி இருக்கும்.
யாரிடம் நடிக்கிறான் இந்தச் சூரியன்?

Tags:

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar