நீர்க் காளான்

in கட்டுரை

நீரில் நனைத்த கை உதறுவது போல் தூறுகிறது. இதுநாள் வரை கிரிக்கெட் மட்டை வெயிலில் வாட விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் தூறல் துளிகளைத் தங்கள் சிறிய அழுக்கு உள்ளங்கைகளில் பிடிக்கத் தெருவெங்கும் சிதறி ஓடுகிறார்கள். திண்ணையில் பாக்கு இடிக்கும் பல்லிலிக் கிழவி இடிபாட்டை நிறுத்திவிட்டு முகம் மலர்ந்து தூறல் கிளம்பும் இடத்தை அண்ணாந்து பார்த்து வாய்சிரிக்கிறாள். அவளுக்கும் வருணனுக்கும் ஏதேனும் ஒப்பந்தம்?

பாதி நடையில் தூறலை எதிர்கொண்ட ஒருவர் இரு கைகளையும் தலை மேல் வைத்துக்கொண்டு குடை எடுத்துவர வந்த வழியே திரும்பிச் செல்கிறார். தன் மேல் விழும் மழைத் துளிகளை சேற்றில் புரண்ட வாலை ஆட்டி விரட்டுகிறது தெருவோர மாடு. தூறலை மதியாமல் காரியமாய் ஓடுகிறது ஒரு நாய். அதை வேடிக்கை பார்க்கப் பதற்றத்துடன் பின்தொடர்வது போல் சற்று இடைவெளி விட்டு இன்னொரு நாய்.

அதற்குள் சில தலைகளில் பாலிதீன் தொப்பிகள். சில பெண்கள் தூறலிலிருந்து தப்பிக்க சேலையால் முக்காடு போட்டு குஜராத்திக் கோலம் பூணுகிறார்கள். தெருவின் தார்த் தரை உலர்நிலை இழந்து மழையீரத்தின் கருநிறத்தை ஏந்தியாயிற்று. ஆங்காங்கே பலர் மூக்குக் கண்ணாடிகளைக் கழற்றி சட்டைகளில் துடைத்துக்கொண்டு பார்வைக்கு உதவியாய் மீண்டும் மாட்டிக்கொள்கிறார்கள்.

மழையாக வளரும் என்ற ஐயத்தில் கடை வாசல் ஒன்றில் ஒதுங்கிய ஒருவர் தூறல் நின்றுவிட்டதா என்று அறியக் கைநீட்டிப் பார்க்கிறார். அவரது புறங்கையிலும் மோதிர, ஆள்காட்டி விரல்களிலும் தூறல் துளிகள் விழுகின்றன. அது சவாரிக்கான அழைப்பில்லை என அறிந்தும் ஒரு ஆட்டோ ஓரங்கட்டுகிறது. வீடு திரும்பியவர் குடையுடன் வருகிறார். ஆனால் தூறல் ஓய்கிறது.

Tags: ,

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar