காதல் நமதே

in கவிதை

எப்போதும் என்னையே நினைத்திரு
என்று நான் சொல்லவில்லை
உன் மனக்கண்ணுக்குப் படும் இடத்தில்
என்னை வைத்திரு என்கிறேன்

எப்போதும் என்னைப் பற்றிப் பேசு
என்று நான் கோரவில்லை
என் பெயரைச் சொல்கையில்
கொஞ்சம் நாணிக் கோணு என்கிறேன்

எப்போதும் என் மடியில் உட்காரு
என்று நான் கேட்கவில்லை
உன் மடியில் நானமர்ந்தால்
தள்ளிவிடாதே என்கிறேன்

எப்போதும் முத்தம் கொடு
என்று நான் கெஞ்சவில்லை
கொடுக்கிற முத்தத்தை
எனக்குக் கொடு என்கிறேன்

எப்போதும் சண்டை போடாதே
என்று நான் வாதிடவில்லை
சண்டை முடிந்ததும்
சமாதானமாகு என்கிறேன்

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar