அப்படித்தான்

in கவிதை

தூரத்திலிருந்தே என்னைப் பார்த்துவிட்டாய்
ஆனால் என்னைக் கண்டதும்
பேரழகுப் புன்னகையுடன்
தலைகுனியும் அளவு தூரம் இல்லை
என் எடுப்பான நாசியும்
செதுக்கிய உதடுகளும்
சிறு நெற்றி மேல் விழும்
அடங்காத சுருள் கேசமும்
துளையிடும் குறும்புக் கண்களும்
கைகால் வீசிய கம்பீர நடையும்
உன் துணி மூடிய இதயத்தைப்
படபடக்கவைக்கின்றன
முதல் முத்தம் காணாத உன் இதழ்கள்
என்னைப் பார்த்ததில் துடிக்கின்றன
நீ விழுங்கும் எச்சில் அவசரமாக
உன் சங்குத் தொண்டையைக் கடக்கிறது
தலைதெறிக்க ஓடி வந்தாற்போல்
விம்மித் தணிகிறது உன் நெஞ்சு
நீயறியாமல் உன் இளவெண்டைக் கரங்கள்
தாவணித் தலைப்பைச் சரிசெய்கின்றன
உன் கெண்டைக் கால்களும் சுற்றுப்புறங்களும்
பாவாடைக்குள் தளர்ந்து நடுங்குகின்றன
பார்க்கவும் முடியாமல்
பாராதிருக்கவும் முடியாமல்
உன் மைவிழிகள் என் திசையை வட்டமிடுகின்றன
கண்ணாலேயே விழுங்குகிறானே
என விதிர்விதிர்க்கிறாய்
கடந்து போகையில்
கையைப் பிடித்து நிறுத்திவிடுவேனோ
என்று பதறுகிறாய்
திமிறினால் கட்டியணைப்பேனோ
என முகம் சிவக்கிறாய்
கூப்பிடுதூரத்தில் வந்தவுடன்
என்னை நோக்கிப் புன்னகைத்தால் இவ்
இன்ப துன்பங்களிலிருந்து தப்பிக்கலாம்
என கணக்குப்போடுகிறாய்.
அப்படித்தானே?

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar