நாட்டு நடப்பு

in கட்டுரை

அப்புறம் ‘லேட்டஸ்ட்’ சமூகப் பிரச்சினை என்ன? சீக்கிரம் தீருமா எப்படி? இன்றைக்கு பேப்பர் இன்னும் படிக்கவில்லை. அதற்குள் உலகத்தைப் புரிந்துகொள்ள வல்லடி. ஒரே சமயத்தில் பல பிரச்சினைகள் உலகைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருப்பதை நான் அறிவேன். அவை நாளும் மாற்றம் கண்டுகொண்டிருப்பதையும் நான் அறியாமலில்லை. உலகம் படுபிஸி. அது ஒரே சமயத்தில் எண்ணிறந்த பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டும் முன்னமே இருக்கிற பிரச்சினைகளை வளர்த்துக்கொண்டும் வளர்க்கிற பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடிக்கொண்டும் அப்போராட்டங்களைத் தடுத்துக்கொண்டும் தடுப்பதை எதிர்த்துப் போராடிக்கொண்டும் இருக்கிறது. உலகம் தன் மீது தானே போர் தொடுத்துக்கொண்டபடி இருக்கிறது. எல்லா ஆயுதங்களையும் பிரயோகித்துப் பார்க்கிறது. அடி தாங்காமல் சுருண்டு விழுகிறது. மீண்டெழ முடியாதபடிக்குத் திருப்பித் தாக்குகிறது. உலகம் குமுறுகிறது, கொண்டாடுகிறது, திமிறுகிறது, திண்டாடுகிறது, ஓசோனில் ஓட்டை போடுகிறது, சூடாகிக்கொள்கிறது, ரசிக்கிறது, வெறுக்கிறது, தனக்குள் ஆழ்ந்து பார்த்துக்கொள்கிறது, தனக்கு வெளியே கூர்ந்து பார்க்கிறது, தீர்மானிக்கிறது, குழம்புகிறது, கண்டுபிடிக்கிறது, தொலைக்கிறது, படிப்படியாக அழிகிறது. ஆனால் அத்தனையையும் இன்னும் பலதையும் செய்தபடியே இருந்துகொண்டிருக்கிறது. இதெல்லாம் பேப்பரில் வராது. அதனால்தான் இன்றைய பேப்பரை இன்னும் தொடவில்லை. என் எதிரில்தான் டீப்பாயில் மடித்த நிலையில் கிடக்கிறது. திரும்பவும் யாருக்கோ என்னவோ நடந்திருக்கிறது போல. முகப்பில் பெரிய போட்டோ போட்டிருக்கிறார்கள்.

 

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar