பரமகவி படலம்

in கட்டுரை

புனைபெயருக்கான பெருந்தேடலில் ஈடுபட்டிருந்தார் மொழிபெயர்ப்பாளக் கவிஞர் லபக்குதாஸ். வகைதொகையில்லாமல் வார்த்தைகள் ஈவிரக்கமின்றிப் பலவாறாகக் கோர்த்து துணிந்து எழுதிக் குவிக்கப்படும் தமது கவிதைகளில் பஞ்சமின்றிக் காணப்படும் உயர்கவித்துவம், வெறும் கவிதைகளுக்குள் மட்டுமே புகைந்துகொண்டிராமல் புனைபெயரிலும் பொங்கிப் புளுக வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஒரு கவிஞனின் பெயரே அவனின் கவிதைகளுக்குண்டான கவித்துவத்தின் நிச்சயத்தன்மை சார்ந்த வாக்குறுதியை வாசகருக்கு அளித்து அன்னாரைக் கவிதைக்குள் இழுக்க வேண்டும் என்றார் அவர்.

நீங்கள் கவிதைகளைக் கொள்ளைநோய் போல் தவிர்ப்பவராக இருந்தாலொழிய ‘பரமகவி’ என்ற புனைபெயரில் சிறு/பெரு பத்திரிகைகளில் அவ்வப்போது எட்டுப் பத்து வரிகளில் வரும் கவிதைகளைப் பார்க்கவாவது செய்திருப்பீர்கள். இப்போது அந்தப் பெயர் அவருக்கு அலுத்துவிட்டது. நான் வேறு கவிதைக்காக ‘பேயோன் சாமர்த்தியா’ என்ற புனைபெயரைக் கைகொள்வதாக முன்னம் ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தேன். போதாதா? அடுத்த வாரம் ஒரு பத்திரிகைக்குக் கவிதை அனுப்புவதாக “கமிட்” செய்துகொண்டுள்ளார். ஆகையால் புனைபெயர் நாமகரணம் சூட்டுதல் அடுத்த ஆறு மணிநேரத்திற்குள் செய்தாக வேண்டிய விஷயம். என்னிடம் போனில் பேசினார், பிறகு பைக் சாவியைத் திருகி வண்டியைக் கிளப்பிக்கொண்டு வீட்டிற்கே வந்துவிட்டார்.

புனைபெயர்களின் இயங்கியலைக் கலந்துரையாடினோம். சமஸ்கிருதமாகப் பெயர் வைத்துக்கொண்டால் கனவு காணுதல், தாபம், ஏக்கம், உறவு, பறவை, நபரிடம் நேரடியாகப் பேசுதல் என்கிற மாதிரி கவிதைகளாக எழுதுவார்கள். மிஸ்டு காலுக்கு பதில் வராதது கருதி வாடும் கவிதையாக இருந்தாலும் வெளி, கிளி எல்லாம் கலந்து எழுத வேண்டும். புனைபெயரில் இரண்டு பெயர்கள் இருந்து முதல் பெயர் -அன் விகுதியில் முடிந்து இரண்டாம் பெயர் -ஆ விகுதியில் முடிந்தால் சமூகப் பிரச்சினைகளைப் பற்றியும் எழுதுவார்கள். சாதாரணமாக சி. ரவி, இரா. செல்வம், நை. மோகன் என்கிறாற்போன்ற பெயரைப் பயன்படுத்தினால் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயும் வசதி இருக்கிறது. ஆனால் பெயரில் கவர்ச்சி இருக்காது. நை. மோகன் என்ன எழுதிவிடப்போகிறான் என்று படிக்காமலே தூற்றவும் கூடும். ஆகவே உங்கள் வியூகத்தைப் பொறுத்து ஒரு புனைபெயராகத் தேர்வு செய்யுங்கள் என்றேன். இதெல்லாம் அவருக்குத் தெரியாமல் இல்லை. அவரும் பழம் தின்று என்னைவிட ஒரு கொட்டை கூடுதலாகவே போட்டவர்தான். இருந்தாலும் அவர் பாசையில் சொன்னால் ஒரு “செகண்ட் ஒப்பீனியன்” வேண்டியிருந்தது.

பரமகவியை சமஸ்கிருதம் சுண்டியிழுத்தது. ஆனால் அன்-ஆ மீதும் ஒரு கண் இருந்தது. அன்னாவைத் தேர்வு செய்யாமல் போனால் கிடைக்க வேண்டியது ஏதாவது கிடைக்காமல் போய்விடுமோ என்கிற ஒரு திமித்ரியின் கவலை அவரிடம் தெரிந்தது. சமூக அம்சம் வேறு விட்டுப்போகுமோ என்ற சந்தேகம். பிறகு இரண்டு மாதிரியும் எழுதி முன்னோடியாகச் செய்து பார்க்கலாம் என்று அவர் தீர்மானித்தார். நான் அவருக்குச் சட்டெனக் கொடுத்த கலவையான பட்டியல்:

1. சிரமகவி
2. சவகவி
3. பூமத்தியன்
4. சஷ்டியப்தா
5. துருபதன்
6. அசாத்தியா
7. சோஸ்வீட்யா
8. ஆத்மாநான்
9. விசித்திரவிரியன்
10. பிரக்ஞன்
11. மானசீகன்
12. பெரியகவி
13. கம்பன் காவியா
14. கேசவன் காருண்யா
15. சௌந்தரராஜன் இந்திரா
16. அய்யன் திருவள்ளுவா
17. இதுதான் கவிதையா
18. அப்பன் ஆத்தா

ஒவ்வொரு பெயரின் சுப லாபங்களையும் அரை மணிநேரம் அலசிய பின் அப்பன் ஆத்தாவுக்கு விசித்திரவிரியன்தான் பிடித்திருந்தது. டீ வாங்கிக் கொடுத்தார்.

Tags: , ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar