நேற்று நல்ல மழை

in கட்டுரை

ஒரு நாள் (இன்றைக்கு) என் ஜன்னலுக்கு வெளியே நீண்டுநெடிந்த சாலையைப் பார்த்துக்கொண்டிருந்தேன்…

சேறான சாலையோரம். ஒரு மாடு அதில் நின்றிருந்தது. அந்தப் பக்கமாய் ஒரு பெட்டிக்காரர் வந்தார். சேற்றுக்கு நடுவில் தலைநீட்டிய ஈரங்குறைந்த இடங்களுக்குத் தாவுகையில் சேறு வழுக்கி விழுந்தார். இது நடப்பது மாட்டிற்கு அருகே. விழ விரும்பாத அவசரத்தில் பிடித்துக்கொள்ள ஏதுமின்றி மாட்டின் ஒரு கொம்புதான் கிடைக்க, கையால் அதைக் கவ்விக்கொண்டார். மாடு அனிச்சையாக ஆதரவு மறுத்துத் தலையை விலுக்கென்று ஆட்ட, அவரின் பிடி நழுவி ஏதோ நடுத்தெருப் பந்திக்குத் தயாராவது போல் தொபக்கென்று சேற்றிலேயே ‘சப்ளாங்கட்டை’யிட்டு அமர்ந்துவிட்டார். அவர் முகத்தில் அதிர்ச்சியைவிட திகைப்பு. அவர் எதிர்பார்க்கவேயில்லை. என்னைக்கூட யாராவது ஐந்து நிமிடங்களுக்கு முன்பு இது பற்றிக் கேட்டிருந்தால் “எனக்கென்ன ஜோசியமா தெரியும்?” என்று விரட்டிவிட்டிருப்பேன். அதனால் எனக்குத்தான் அதிர்ச்சி.

அது சாதாரண சேற்றுத் தரைதான். மாடுகளின் புழக்கத்தால் சிறிது சாணியும் கலந்திருக்கும். சாணி உரமாகப் பயன்படுவதில்லையா? அது ஒன்றும் புதைகுழி அல்ல. எவ்வளவு நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தாலும் ஒன்றும் ஆகாது. ஆனாலும் பதற்றமான ஒரு அவசரத்துடன் எழுந்துகொள்ளத் தலைப்பட்டார் நம்மவர். ஆடையெல்லாம், உள்ளங்கையெல்லாம் சாணிச் சேறு. கைப்பெட்டியைச் சற்றுக் குள்ளமான, அகலமான ஊன்றுபலகையாகப் பயன்படுத்தி எழப் பார்த்தார். அதுவோ பாவம் சின்ன பிரீஃப்கேஸ். அதனால் அவரின் எடையை ஏற்க முடியுமா? பெட்டியின் சேறு படாத பக்கத்திற்கும் சேறு அறிமுகமாகி பெட்டி மேல் அவர் விழுந்தார். இப்போது மனிதர் தொடைகளில் எல்லாம் சேறு. சிறு தொப்பையில் சேறு. முதலில் பேண்ட் டெரிகாட்டன் போல் தெரிந்தது. இப்போது பார்த்தால் தேர்ந்த துணிக்கடையாளரால்கூட ‘என்ன மெட்டீரியல்?’ என்று கண்டுபிடிக்க முடியாது.

மாடு ஏதோ நினைவுகளை அசை போட்டபடி வாலை ஒருமுறை சாவகாசமாய்ச் சுழற்றியது. நமது நபர் அக்கம்பக்கம் பார்த்தார். ஆனால் அவரை யாருமே கவனிக்காதது விசேஷம். உதவ ஆளில்லை என்றாலும் வேடிக்கை பார்த்து வெட்கப்படுத்தவும் ஆளில்லாதது அவருக்கு ஆறுதல்.

நம் மனிதர் பெட்டியைக் கையால் இரண்டடி தள்ளி விட்டார். விழுந்த இடத்திலிருந்தே எழுந்து நிற்கவும் முடியும் என்ற தத்துவார்த்த நம்பிக்கை அவருக்குப் போய்விட்டிருந்தது போலும். உட்கார்ந்தபடியே அவரின் பிரத்தியேக பெர்முடா முக்கோணத்திலிருந்து இழுத்து இழுத்து வேகமாக நகர்ந்தார். நான்கு இழுப்பில் உலர்ந்த நிலம் தட்டுப்பட்டது. பின்னர் எழுந்து நின்று ஆடையிலிருந்த சேற்றை சேற்றுக் கைகளால் தட்டி விட முயன்றார். ஜாக்கிரதையாக அடிகளை எடுத்து வைத்துப் பெட்டியைக் கொத்தியெடுத்தார். விரையில் அடிவாங்கியவர் போல் பெங்குவின் நடை நடந்து நடுச்சாலையை அடைந்தார். ஆட்டோக்களுக்குக் கைகாட்டினார். எவனும் நிறுத்தவில்லை. தூறலிடத் தொடங்கியது. நொடிப்பொழுதில் பேரிரைச்சலுடன் கன மழையாக மாறிவிட்டது. பெட்டிக்காரர் ஆட்டோ பிடிக்கும் முயற்சியைக் கைவிட்டு மழையிலிருந்து ஒதுங்க சாலையின் எதிர்ப்பக்கம் இருந்த மூடிய கடையை நோக்கி விரைந்தார். அதற்கு முன் வாகனங்கள் வருகின்றனவா என்று சாலையின் இருபக்கமும் அவர் பார்க்காமல் இல்லை. நான் ஜன்னலை மூடிவிட்டேன். ஏனென்றால் ஜன்னலைத் தாண்டி வீட்டுக்குள்ளேயே சாரல் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

Tags: ,

Comments are closed.

© 2018 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar