எப்படி இருத்தல்

in கட்டுரை

‘உங்களுக்கு மாத வருமானம் எவ்வளவு?’ என்ற கேள்விக்குப் பிறகு நான் சொற்பமும் ரசிக்காத கேள்வி ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்பது. தொலைபேசியில் கேட்பவர்கள் உண்மையிலேயே தெரியாமல் கேட்கிறார்கள். ‘நன்றாயிருக்கிறேன்’ என்று நான் பதிலளித்தால் அவர்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ஆனால் நேரில் பார்த்து ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்பவர்களுக்கு எங்கே போயிற்று புத்தி?

என்னைப் பார்க்க வருபவர்கள் வணக்கம் சொன்னதும் சாவி கொடுத்தாற்போல் அடுத்து வாயைத் திறப்பது இந்தக் கேள்வியை ஒப்பிக்கத்தான். நான் முந்திக்கொண்டு சட்டென ‘வணக்கம், உட்காருங்கள், மற்றதையெல்லாம் பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்றுவிடுவேன். அதையும் மீறி ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்டுவிட்டார் என்றால் அவரைக் கையைப் பிடித்துத் தரதரவென பக்கத்து அறைக்கு இழுத்துச்சென்று ஆளுயரக் கண்ணாடி முன்பு நின்றுகொள்வேன். ‘இந்தாருங்கள், பார்த்துக்கொள்ளுங்கள், இப்படித்தான் இருக்கிறேன்’ என்று என் கண்ணாடிப் பிம்பத்தைக் காட்டுவேன்.

‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று நீங்கள் நாக்கின் மீது பல்லினைப் போட்டுக் கேட்கும்போது என்ன பதிலை என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள்? ‘அதை ஏன் சார் கேட்கிறீர்கள், எல்லாம் குடிமுழுகிப் போய்விட்டது’ என்றா சொல்லப்போகிறேன்? ‘நன்றாக இருக்கிறேன்’ என்றுதான் சொல்லியாக வேண்டும். எனது வருமான வேதனைகளையோ வீட்டு உபாதைகளையோவா விவரிக்கப்போகிறேன்? விவரிக்க ஆரம்பித்தால் அடுத்த முறை என் புத்தகத்தை வாங்கி என்னிடம் ஆட்டோகிராப் வாங்க வீட்டிற்குத்தான் வருவீர்களா? என் பதிலைத் தெரிந்தே எதிர்பார்த்துக் கேட்கும் அபத்தம் என்ன வகையில் சேரும்? தினமும் ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் ஏதாவது உளறிக்கொண்டுதான் இருக்கிறேன். அதை விடாமல் படித்துவிட்டுப் பிறகு வீட்டிற்கு வந்து நலம் விசாரிப்பது அபத்தம்தானே? புகைப்படங்களில் உலகமே என் காலைக் கட்டிக்கொண்டிருப்பது போல் பல் தெரிய நான் சிரிப்பதை நீங்கள் பார்த்ததில்லையா?

என் நண்பர்கள் சிலர் தொலைபேசியில் ‘என்னடா, உயிரோடுதான் இருக்கிறாயா?’ என்று விசாரிப்பார்கள். அவர்களில் பலருடன் நான் நீண்டகாலத் தொடர்பில் இல்லை. எனவே அவர்கள் நிஜமான சந்தேகத்துடன் கேட்கக்கூடும். நமக்குத் தெரியாமலே செத்துப்போகிறவர்கள் எண்ணிக்கை பெரிது. நமக்கு வேண்டிய ஒருவரின் மரணத்தைத் தெரியப்படுத்த இன்னொரு வேண்டியவரைத் தொடர்பு கொள்ள முயன்றால் அவர் இவருக்கு முன்பே கமுக்கமாகப் போய்ச்சேர்ந்திருப்பார். ஆகையால் அவர்கள் கேள்வியை மன்னிப்பதில் குற்றமில்லை. ஆனால் மற்றவர்களுக்கு என்ன கேடு? ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று இவர்கள் கேட்பார்களாம், ‘நன்றாகத்தான் இருக்கிறேன், நீங்கள் எப்படி?’ என்று நாம் இவர்களுக்கு எதிர்க்கேள்வி கேட்டு சொறிந்துவிட வேண்டுமாம். என்னய்யா, விளையாடுகிறீர்களா? நீங்களெல்லாம் சகமனிதர்களோடு பிறக்கவில்லையா?

என் மனைவியின் உறவினர்களைப் பார்த்தோமானால், அவர்கள் மொட்டையாக ‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்பதில்லை. ‘உடம்புக்கு ஒன்றுமில்லாமல் நன்றாக இருக்கிறீர்களா?’ என்றோ ‘காலை எடுத்த பின்பு நடக்க முடிகிறதா? ஓ, அது நீங்கள் இல்லையா? சரி சரி’ என்றோ விவரமாக விசாரிப்பார்கள். இது உண்மையான அக்கறையில் நல்ல தகவலை எதிர்பார்த்து ஆதங்கம் கலந்த ஆர்வக்குறுகுறுப்புடன் கேட்கப்படும் கேள்வி. இதை மதித்து நாமும் எங்கே அரிக்கிறது, யாருக்கு பாக்கி தர வேண்டியிருக்கிறது என்று விரிவாகச் சொல்லலாம். என்னிடம் வரும் கேள்வி அந்த ரகமா? அப்படிக் கிடையாது.

‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்ற கேள்வியை அப்படியே அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டாம், அது உரையாடல் தொடங்க அது ஒரு வழி மட்டுமே என்கிற தர்க்கத்தை நான் ஏற்க மாட்டேன். அது உரையாடல் தொடங்கும் வழி மட்டுமல்ல, அது அலுப்பூட்டும் ஒரு சடங்கு. அதனால் உங்கள் எப்படி இருக்கிறீர்கள்களை என்னிடம் கொண்டுவராதீர்கள்.

ஏனென்றால் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். ரத்த அழுத்தம் இருக்கிறது. இரண்டு நெடுங்கடன்களை இப்போதைக்கு அடைக்க வழி இல்லை. வீட்டு வாடகையை ஏற்றிவிட்டார்கள். அதற்குப் பழிவாங்குவதற்காக மட்டுமே நான் வாடகைக்கு விட்ட சொந்த வீட்டிற்கு வாடகையை ஏற்றியிருக்கிறேன். விலை ஏற்றங்கள் மனதைக் குடைந்துகொண்டே இருக்கின்றன. மகன் படிப்புக்கும் திருமணத்திற்கும் ஆகப்போகும் செலவை நினைத்தால் இப்போதே தலைமறைவாகிவிடலாம் போலிருக்கிறது. மனைவி மனைவியாகவும் மகன் மகனாகவும் இருந்து இம்சிக்கிறார்கள். மிதமிஞ்சி அன்பைப் பொழிந்து குற்றவுணர்வுக்குத் தூபம் போடுகிறார்கள். உண்மை புரியாமல் வெறியைக் கிளறுகிறார்கள். என்னால் என்னைத் தாண்டிப் போக முடியவில்லை. சக எழுத்தாளர்கள் என்னென்னவோ செய்து என்னைவிட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஏழை-பணக்காரன் வித்தியாசம் புயல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஒருநாள் நிலைமை மோசமாகிக் கலவரங்கள் வெடிக்கும். அப்பாவிகள் மட்டும் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்படுவார்கள். இன்னும் பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் போலீஸ் உள்பட யாருக்கும் பாதுகாப்பு இருக்காது. தமிழகம் டிஸ்டோப்பிய யதார்த்தத்திற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது. ஊடகங்கள் நானாவித லாகிரி வஸ்துக்களையும் நமக்கு ஊட்டி விடுகின்றன. ராட்சத வியாபாரிகள் என்னைச் சுரண்டுகிறார்கள், குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் பொய் சொல்லுகிறார்கள். கலை இலக்கியங்கள் பெருமளவில் மலினமாகிவிட்டன. மக்கள் கேளிக்கைக்குக் குழந்தைகளின் கையைப் பிடித்துக்கொண்டு ராட்சத வியாபாரிகளிடம் போகிறார்கள். ஜேப்படி கொடுத்து சுய சுபிட்சம் குறித்த மாயபிம்பத்தில் மிதக்கிறார்கள். ரத்த அழுத்தத்தின் கைங்கரியத்தில் ஐந்து காபி இரண்டு காபியாக சரிந்துவிட்டது. கவிதை வாசிப்பதைக் குறைத்த பின்னும் ரத்த அழுத்தம் 150/100இலிருந்து இறங்கவில்லை. ஆனால் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். டி-ஷர்ட் அணிவதால் இளமையாகவும் தெரியக்கூடும்.

ஆகையால், உங்கள் உபயகுசலோபரிகளை எல்லாம் என்னிடம் வைத்துக்கொள்ளாதீர்கள். தமிழில் ‘வணக்கம்’ என்றொரு வார்த்தை இருக்கிறது. சுருக்கமான, அழகான, பூடகமில்லாத வார்த்தை. இந்தியப் பிரதமர்கள், ஜனாதிபதிகளுக்கெல்லாம் தெரிந்த வார்த்தை. இதைச் சொல்லிவிட்டு விஷயத்திற்கு வாருங்கள் போதும்.

Tags:

Comments are closed.

© 2017 பேயோன் - Powered by Wordpress / Theme: Tabinikki

பேயோன் is using WP-Gravatar